Published:Updated:

`வெளி மாநிலம்.. பிற மாவட்டம்.. எல்லை கடந்து வந்தால் 14 நாள்கள் தனிமை!’ -தமிழக அரசு

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம்
தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம்

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சில பகுதிகளில் ஒரு மாதத்துக்கும் மேல் வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கால்நடையாக நடந்து வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைத் தவிர்த்து அனைத்து மாவட்டங்களும் கொரோனா பாதிப்படைந்த மாவட்டங்களாக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மட்டுமே பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அங்கு ஒருவருக்கு கூட கொரோனா நோய்த் தொற்று ஏற்படவில்லை.

இந்தியா -  கொரோனா வைரஸ்
இந்தியா - கொரோனா வைரஸ்

இந்த நிலையில்தான் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ``வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரக்கூடிய நபர்களை கண்டிப்பாக 14 நாள்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்துக்கு வருபவர்களையும் 14 நாள்களில் தனிமையில் வைத்து கண்காணிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

`நிச்சயம் பண்ணுன தேதியில கல்யாணம் நடந்தே தீரும்!’- 100 கிமீ சைக்கிளில் சென்று திருமணம் செய்த இளைஞர்

அந்தந்த நபர்களின் வீடுகளில் தனிமைப்படுத்துவதற்காக ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் மக்கள் இருசக்கர வாகனங்கள் மூலமாகவும் கால்நடையாகவும் சொந்த ஊர்களுக்கு திரும்பிவரும் சூழலில் தமிழக அரசுத் தரப்பிலிருந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம்
தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம்

தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் விதிமுறைகளை மீறி நடப்பவர்களுக்கு ரூபாய் 100 அபராதம் விதிக்கப்படும் என்றும் மேலும் அவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு