Published:Updated:

விழுப்புரம்: `கனமழை; காட்டாற்று வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட தரைப்பாலம்'- தவிப்பில் 4 கிராம மக்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வெள்ளத்தில் உடைந்த தரைப்பாலம்
வெள்ளத்தில் உடைந்த தரைப்பாலம்

எப்போதெல்லாம் இந்த ஆற்றில் வெள்ளம் வருகிறதோ, அப்போதெல்லாம் இந்தத் தரைப்பாலம் உடைந்துவிடும். 15 வருடங்களாக இப்படித்தான் நடக்கிறது. தரைப்பாலம் உடையும்போது மட்டும் தற்காலிகமாக அதைச் சரிசெய்து கொடுப்பார்கள்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கனமழையால், விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் முழுக் கொள்ளளவை எட்டியிருக்கின்றன. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நதியான தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து தொடங்கியதுமே எல்லிஸ் சத்திரம் தடுப்பணை சேதமடைந்து வெள்ளம் பெருக்கெடுத்தது. நேற்றைய தினம் தளவானூர் தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் ஆர்ப்பரித்தது. இந்த நிலையில், முகையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரங்கியூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் (கோரையாறு) குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் நான்கு கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதோடு, அவசர உதவிக்கும் சுமார் 20 கி.மீ தூரம் சுற்றிச் செல்லும் சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

உடையும் தறுவாயில் தடுப்பணை: `அதிகமாக மணல் அள்ளப்பட்டதே காரணம்!' - விவசாயிகள் வேதனை
சீரமைப்புப் பணி
சீரமைப்புப் பணி

இது தொடர்பாக நம்மிடம் பேசிய கிராம மக்கள், ``விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியத்துக்கு உட்பட்டவை மாரங்கியூர், சேத்தூர், பையூர், கொங்கராயனூர் ஆகிய நான்கு கிராமங்கள். இந்த கிராமங்களுக்கு இருபுறங்களிலும் தென்பெண்ணை ஆறு இரண்டாகப் பிரிந்து செல்கிறது. ஒரு தனித்தீவு போலத்தான் இந்த நான்கு கிராமங்களும் இருக்கின்றன. இதில் கோரையாறு (தென்பெண்ணை ஆறு) எனப்படும் ஆற்றின் குறுக்கே 1995 - 96-ல் தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்தச் சாலையைத்தான் இப்பகுதி மக்கள் விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் போன்ற முக்கியப் பகுதிகளுக்குச் செல்லப் பயன்படுத்திவந்தனர். பின்னர், 1997-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போதே அந்த தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு தற்காலிக பாலம் அமைத்துக் கொடுத்தார்கள். எப்போதெல்லாம் இந்த ஆற்றில் வெள்ளம் வருகிறதோ, அப்போதெல்லாம் இந்த தரைப்பாலம் உடைந்துவிடும். 15 வருடங்களாக இப்படித்தான் நடக்கிறது. தரைப்பாலம் உடையும்போது மட்டும் தற்காலிகமாக அதைச் சரிசெய்து கொடுப்பார்கள்.

இந்த நிலையில், இங்கு கடந்த சில தினங்களாகத் தொடர் கனமழை பெய்துவருவதால், இந்த ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. அதனால், வழக்கம்போல, நேற்று இந்த தரைப்பாலம் உடைந்துவிட்டது. இதனால் நான்கு கிராம மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

வெள்ளத்தில் உடைந்த தரைப்பாலம்
வெள்ளத்தில் உடைந்த தரைப்பாலம்
`இதுக்கு மேல என்னன்னு சொல்றது?' - மீண்டும் உடைந்த தளவானூர் தடுப்பணை; வேதனையில் விவசாயிகள்

காலையில்தான், டி.ஆர்.ஓ., தாசில்தார்., பி.டி.ஓ என எல்லோரும் வந்து பார்த்துவிட்டுச் சென்றார்கள். தற்போது, மீண்டும் அந்தப் பாலத்தைத் தற்காலிகமாகச் சரி செய்துகொண்டிருக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சாத்தனூர் அணையில் தண்ணீர் அதிக அளவில் திறந்துவிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இந்த தரைப்பாலம் மீண்டும் உடைய வாய்ப்பிருக்கிறது. எனவே, அரசு எங்களுக்கு நிரந்தரமான ஓர் உயர்மட்ட பாலத்தை அமைத்துத் தர வேண்டும்" என்றனர் ஆதங்கத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு