Published:Updated:

`பாஜக பந்த்தில் வன்முறை வெடித்தது; மகாராஷ்டிராவில் ஊரடங்கு உத்தரவு அமல்!'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாஜக பந்த்தில் வன்முறை வெடித்தது
பாஜக பந்த்தில் வன்முறை வெடித்தது

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் நடந்த பந்த்தில் வன்முறை ஏற்பட்டது. அதனால், அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

திரிபுராவில் நடந்த கலவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகாராஷ்டிராவில் கடந்த வெள்ளிக்கிழமை முஸ்லிம் அமைப்புகள் மாநிலம் தழுவிய அளவில் பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்த பந்த்தின் போது மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறைகள் வெடித்தன. நாண்டெட், மாலேகாவ், அமராவதி போன்ற நகரங்களில் ஏற்பட்ட வன்முறையில் கடைகள் சேதமடைந்தன. போலீஸார் மீதும் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், 20-க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்தனர். போலீஸார் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது லேசான தடியடி நடத்தினர்.

திரிபுரா கலவரம்
திரிபுரா கலவரம்

இந்த பந்த்துக்கு எதிராகவும், கடைகள் மீது கற்கள் வீசப்பட்டதற்கு எதிராகவும் அமராவதியில் பா.ஜ.க மற்றுமொரு பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. அந்த பந்த்தின் போது பா.ஜ.க-வினர் முக்கிய வீதிகளில் கட்சிக்கொடியுடன் பேரணி நடத்தினர். பேரணியின் போது திறந்திருந்த கடைகள் மீது கற்களை வீசித்தாக்கினர். இதையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸார் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது லேசான தடியடி நடத்தினர்.

இதனால் அமராவதி நகர் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புக்குக் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். மேற்கொண்டு வன்முறை ஏற்படாமல் இருக்க போலீஸார் ஊரங்கு உத்தரவு பிறப்பித்திருக்கின்றனர். பொதுமக்கள் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வரவேண்டும் என்றும், 5-க்கு மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடக்கூடாது என்றும் போலீஸார் உத்தரவிட்டிருக்கின்றனர்.

ஊரடங்கால் வெறிச்சோடிய சாலை
ஊரடங்கால் வெறிச்சோடிய சாலை

அமராவதி போலீஸ் கமிஷனர் சந்தீப் பாட்டீல் இதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். மக்கள் வதந்தியை நம்பவேண்டாம் என்றும், அமைதி காக்கவேண்டும் என்று மாநில உள்துறை அமைச்சர் திலிப் வல்சே பாட்டீல் கேட்டுக்கொண்டார். மாநிலம் முழுவதும் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பகுதியில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து நாசிக் போலீஸ் அதிகாரி சேகர் பாட்டீல் கூறுகையில், நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான கலவரம்... பின்னணியில் இஸ்லாமிய அமைப்பு?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு