Published:Updated:

அச்சுறுத்தும் டெங்கு... அலட்சிய அரசு!

டெங்கு
பிரீமியம் ஸ்டோரி
டெங்கு

“ஆராய்ச்சிகளை விரிவுபடுத்தவில்லையெனில், பாதிப்புகள் பல மடங்காகும்!”

அச்சுறுத்தும் டெங்கு... அலட்சிய அரசு!

“ஆராய்ச்சிகளை விரிவுபடுத்தவில்லையெனில், பாதிப்புகள் பல மடங்காகும்!”

Published:Updated:
டெங்கு
பிரீமியம் ஸ்டோரி
டெங்கு

‘‘தமிழகத்தில் வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சல், தீராத அச்சத்தில் மக்களைத் தள்ளியிருக்கிறது. செப்டம்பர் மாதம் வந்தாலே டெங்குவும் சேர்ந்து வந்துவிடும் என்கிற அளவுக்கு, வருடாவருடம் மோசமாகிக் கொண்டே போகிறது சூழல். டெங்குவை ஒழிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தமிழக அரசு, டெங்குவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கையையும் மரணமடைந்த வர்களின் எண்ணிக்கையையும் குறைத்துக் காட்டி பிரச்னையிலிருந்து தப்பிப்பதிலேயே குறியாக இருக்கிறது’’ என்று வேதனைக் குரல் எழுப்புகிறார்கள் தமிழக மக்கள்.

புகழேந்தி, குழந்தைசாமி
புகழேந்தி, குழந்தைசாமி

உலக சுகாதார நிறுவனம், ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் அடுத்து வரும் ஆண்டில் உலகளவில் என்னென்ன நோய்களால் அதிக பாதிப்புகள் உண்டாகும் என்பதைக் கணித்து அறிக்கை வெளியிடும். அப்படி கடந்த ஆண்டு டிசம்பரில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், எபோலா, ஜிகா, நிபா உள்ளிட்ட வைரஸ் பாதிப்புகள் ஒரு பிரிவிலும், டெங்கு தனியாக இன்னொரு பிரிவிலும் இடம் பெற்றிருந்தது. அந்தளவுக்கு மற்ற நோய்களைவிட டெங்குக் காய்ச்சல் அபாயகரமான தாகக் கருதப்படுகிறது. இதெல்லாம் தெரிந்திருந்தும், டெங்கு விஷயத்தில் தமிழக அரசு மெத்தனமாகவே இருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டெங்குக் காய்ச்சலின் பாதிப்பு மிகத்தீவிரமாக இருக்கிறது. மதுரை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களிலும் வேகமாகப் பரவிவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மருத்துவரும் சமூக ஆர்வலருமான புகழேந்தியிடம் இதுகுறித்துப் பேசினோம். ‘‘ `தமிழகத்தில் 3,900 பேர்தான் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்’ என்று தமிழக அரசு சொல்லியிருக்கிறது. அது மிகவும் தவறான தகவல். உண்மையை மூடிமறைக்கிறார்கள். சென்னையில் மட்டுமே சுமார் 3,000 பேருக்கும்மேல் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆக, தமிழகத்தில் மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக் கின்றனர். அரசு சரியான எண்ணிக்கையை வெளியிட்டால்தான் பிரச்னைக்குத் தீர்வுகாண முடியும். அதுமட்டுமல்லாது, இதுவரை மூன்று பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் சொல்லியிருக்கிறார். அதுவும் நம்பும்படியாக இல்லை. டெங்குவால் பாதிக்கப்பட்ட நூறு பேரில் நிச்சயமாக ஒருவர் உயிரிழப்பார். இவர்கள் சொல்லும் கணக்குப்படிப் பார்த்தாலே, சுமார் 30 பேர் இறந்திருக்கக்கூடும். ஆனால், இவர்கள் மூன்று பேர் என்று சொல்கிறார்கள். டெங்குக் காய்ச்சலால் ஏற்படும் மரணங்களை மர்மக்காய்ச்சல் என்ற பெயரில் கணக்குக் காட்டுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டெங்கு
டெங்கு

ஏடிஸ் எஜிப்டி (Aedes Aegypti) கொசுவால் மட்டும் டெங்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. ஏடிஸ் ஆல்போபிக்டஸ் (Aedes Albopictus) கொசுவாலும் டெங்கு பாதிப்பு உண்டாகும். இந்த இரண்டு வகை கொசுக்களில் எந்த வகைக் கொசுவால் டெங்கு பரவுகிறது என்பதை முதலில் கண்டறிய வேண்டும். தமிழகத்தில் பரவும் டெங்குக் காய்ச்சல் எந்த வகைக் கொசுவால் பரவுகிறது என்பதுகுறித்து இங்கே எந்த ஆராய்ச்சியும் நடைபெறவில்லை. ஏடிஸ் ஆல்போபிக்டஸ் லார்வா, தண்ணீருக்கு அடியில்தான் இருக்கும். இங்கே அடிக்கப்படும் கொசுமருந்தால் இந்த வகை கொசுக்கள் ஒழியாது. அதுமட்டுமல்லாமல், டெங்கு வைரஸில் நான்கு வகைகளைக் கடந்து ஐந்தாவது வகையும் இருப்பதாக புனேவில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியில் கண்டறியப்பட்டுள்ளது. டெங்குவில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. அவற்றிலெல்லாம் கவனம் செலுத்தாமல் நிலவேம்புக் கசாயத்தை மட்டுமே கொடுத்துக்கொண்டிருந்தால் பிரச்னையைத் தீர்க்க முடியாது. நிலவேம்புக் கசாயத்தால் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியுமா, முடியாதா என்பதுகுறித்தும் முறையான ஆராய்ச்சிகள் இல்லை. டெங்குவைப் பற்றிய ஆராய்ச்சிகளை விரிவுபடுத்தவில்லையெனில், ஒவ்வொரு ஆண்டும் டெங்குக் காய்ச்சல் அதிகரிக்கத்தான் செய்யும்’’ என்று எச்சரிக்கிறார்.

இதுகுறித்து பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் பேசினோம்.

டெங்கு
டெங்கு

‘‘தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகமிருப்பது உண்மைதான். அதில் 90 சதவிகிதம் சாதாரண வைரஸ் காய்ச்சல்தான். டெங்குக் காய்ச்சல் பாதிப்பு என்பது, வெறும் பத்து சதவிகிதம்தான். காய்ச்சலுடன் வருபவர்களுக்கு சிறப்புக் கவனத்துடன் சிகிச்சையளிக்கப்படுகிறது. டெங்குவைக் கட்டுப்படுத்த, தலைமைச் செயலரின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. உள்ளாட்சித் துறை, சமூகநலத் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம். வீதிகளில் இருக்கும் குப்பைகளைவிட வீடுகளிலும் கட்டடங்களிலும் தேங்கியிருக்கும் குப்பைகள் மற்றும் தண்ணீரால்தான் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது. அரசை மட்டும் குறை சொல்லிக்கொண்டிருக்காமல் மக்களும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” என்றார்.

முறையாக நடக்காத மரணத் தணிக்கை!

ரசு வட்டாரங்களில் விசாரித்தோம். ‘‘டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர், அதை உறுதிசெய்யும் முன்பே இறந்துவிட்டால் அந்த மரணத்தை மர்மக் காய்ச்சல் பட்டியலில் சேர்த்துவிடுகின்றனர். டெங்குக் காய்ச்சல் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அரசுக்கு எதிராக பொதுமக்கள் குரல்கொடுப்பார்கள். எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சிப்பார்கள். இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து நழுவுவதற்காகத்தான், டெங்கு மரணங்களை பல்வேறு வழிகளில் இப்படி மூடிமறைக்கின்றனர். இதற்குத் தீர்வுகாண வேண்டும். காய்ச்சலால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்தையும் தணிக்கை செய்ய வேண்டும். அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள ஒவ்வொரு துறையிலும் மரணத் தணிக்கைக் கூட்டம் (Death Auditing Meeting) நடத்தப்படுகிறது. ஆனால், இந்தக் கூட்டங்களை ஆக்கபூர்வமாக நடத்தாமல் பெயரளவுக்கே நடத்துகின்றனர் இந்தக் கூட்டங்களை நேர்மையான முறையில் நடத்தினாலே, அரசு மருத்துவமனைகளில் நிகழும் மரணங்கள் குறித்த உண்மையான புள்ளிவிவரங்கள் கிடைத்துவிடும்’’ என்கிறார்கள்.

- சி.ஆனந்த்ராஜ்

என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்?

‘‘புறநோயாளிகளுக்கான சிகிச்சையை, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மாலை வேளையிலும் உடனடியாகத் தொடங்க வேண்டும். டெங்கு ரத்தப் பரிசோதனைகளை இலவசமாக எடுப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளிலும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளிலும் மிகப்பெரிய தேக்கநிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழக முதல்வர் நேரடியாகத் தலையிட்டு, இதை உடனே சரிசெய்ய வேண்டும். டெங்குக் காய்ச்சலை விரைவாகக் கண்டறிவதற்கான வசதிகளையும் அதிகப்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாது மக்களிடம் போதிய விழிப்புஉணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.’’

- மருத்துவர் சாந்தி, செயலாளர்,சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism