Published:Updated:

சென்னை: `பெருமழையைச் சமாளிக்கத் துரிதமாகச் செயல்பட்டதா திமுக அரசு?!' - ஓர் அலசல்

முதல்வர், அமைச்சர்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி ஆய்வு செய்துவருவதையும், மக்களைச் சந்திப்பதையும் ஒரு தரப்பினர் பாராட்டினாலும், மற்றொரு தரப்பினர் விமர்சித்துக்கொண்டிருக்கின்றனர்.

சென்னையில் கடந்த ஒரு வார காலமாகக் கொட்டித் தீர்த்த மழை நேற்றுதான் சற்று ஓய்ந்தது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக, கடந்த 6-ம் தேதி முதல் மழை பெய்துவந்தாலும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவான பின்னர் மழையின் வேகம் அதிகரித்தது. தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 54 சதவிகிதம் அதிகமாகப் பெய்திருப்பதாகவும், சென்னையில் மட்டும் வழக்கத்தைவிட 77 சதவிகிதம் அதிகம் மழை பெய்திருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

களத்தில் முதல்வர் ஸ்டாலின்
களத்தில் முதல்வர் ஸ்டாலின்

மழையின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதுமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகக் களத்தில் இறங்கி மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்யத் தொடங்கிவிட்டார். மழையின் பாதிப்பை ஆய்வு செய்து, தீபாவளிக்கு ஊருக்குச் சென்ற மக்கள் மூன்று நாள்கள் சென்னைக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து தமிழக அரசின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. நேற்று முதல் மருத்துவ முகாம்களும் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், சென்னையின் பல பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியிருக்கிறது. கடந்த சில நாள்களில், சில இடங்களில் மக்கள் உணவு கிடைக்காமல் அல்லல்பட்ட செய்திகளும் வந்துகொண்டிருக்கின்றன.

சென்னை வெள்ளம்
சென்னை வெள்ளம்

தமிழக அரசின் இந்த மழைக்கால நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகளும் விமர்சனங்களும் ஒருசேர வந்துகொண்டிருக்கின்றன. முதல்வர், அமைச்சர்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி ஆய்வு செய்துவருவது, மக்களைச் சந்திப்பதை ஒரு தரப்பினர் பாராட்டினாலும், கடந்த காலங்களில் முதல்வர்களாக இருந்த எம்.ஜி.ஆர், கருணாநிதி, எடப்பாடி பழனிசாமி தொடங்கி தற்போதைய முதல்வர் ஸ்டாலின் வரை, மக்களைச் சென்று பார்க்கும் படங்களைப் பகிர்ந்து விமர்சனங்களையும் சிலர் முன்வைத்துவருகின்றனர். எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வும், இந்த அரசை மிகக் கடுமையாக விமர்சித்துவருகிறது. `தி.மு.க அரசின் மெத்தனம்தான் சென்னையில் பாதிப்புக்குக் காரணம்' என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், இந்த பாதிப்புகளுக்கு உண்மையிலேயே என்ன காரணம், யார் காரணம், தி.மு.க அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசினோம்.

ப்ரியன் - மூத்த பத்திரிகையாளர்:-

``யாரும் எதிர்பாராத அளவுக்கு பெருமழை பெய்திருக்கிறது. நம்முடைய மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் இந்த மழைக்குப் போதுமானதாக இல்லாததால் பல்வேறு சிரமங்களும், பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நான்காண்டுகள் இதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடுகள் முற்றிலும் சரியில்லை என்பதையே தற்போதைய கள நிலவரம் சுட்டிக்காட்டுகிறது. தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து ஆறுமாத காலம்தான் ஆகிறது. கட்டமைப்புகளைச் சரிசெய்ய போதுமான கால அவகாசம் இல்லை. முதல் மூன்று மாதங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பிஸியாக இருந்துவிட்டனர். ஆனாலும் மழை பாதிக்காத வண்ணம் பல இடங்களில் முன்னேற்பாடாக மரங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. அதேபோல, மின்வெட்டு என்பது பெரும்பாலான இடங்களில் இல்லை. கடந்த 2015 வெள்ளத்தின்போது தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தவே ஆறுநாள்கள் ஆகின. மின்சாரம் கொடுப்பதற்கு 15 நாள்கள் ஆனது. ஆனால், இந்த அரசு வந்த பிறகு, ஒருசில இடங்களில் தூர்வாரியதாக, மழைநீர் வடிகால் கட்டியதாகச் சொல்கின்றனர். இருந்தபோதும் பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை என்பது உண்மை. அரசாங்கத்தால் அவர்கள் நினைத்த அளவுக்குத் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை. அது மக்களிடையே இயல்பாகச் சலிப்பையும் வெறுப்பையும் உண்டாக்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ப்ரியன்
ப்ரியன்

முதல்வரே நேரடியாகப் பல இடங்களுக்குச் சென்று பார்ப்பது அவரின் அக்கறையைக் காட்டுகிறது. ஆனால், அவர் செல்லும் இடங்களில் நடக்குமளவுக்கு, மற்ற இடங்களில் வேலைகள் நடக்கவில்லை என்பதே உண்மை. ஸ்மார்ட் சிட்டி குறித்து எடப்பாடி குற்றம் சாட்டிய பிறகு பேசிய ஸ்டாலின் முன்பே பேசியிருக்க வேண்டும். அது சார்ந்த நடவடிக்கைகளில் இறங்கியிருக்க வேண்டும். இப்போது பேசினால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், மழை அதிகரித்தவுடன் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்தது, நோய் வராமல் தடுக்க நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைப்பது என முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு துரிதமாகச் செயல்பட்டுவருகிறது என்பதே உண்மை'' என்றார் ப்ரியன்.

சென்னை மழை வெள்ள பாதிப்பு; அதிமுகவை கை காட்டி தப்பிக்கப் பார்க்கிறதா திமுக?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அய்யநாதன் மூத்த பத்திரிகையாளர்:-

``இந்த அரசு சரியாகச் சமாளித்துவிட்டது என்று சொல்வதற்கெல்லாம் ஒன்றும் இல்லை. இடுப்பளவு தண்ணீரில் மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர். மழையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்குவது போன்ற வேலைகளைத்தான் கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளாகச் செய்துவருகின்றனர். 2015 போன்று ஏரியோ, அணையோ உடைந்துவிடவில்லை. ஆனால், மழைநீர் இன்னும் வடிந்தபாடில்லை. இங்கே மழையை வைத்துத் தொடர்ந்து அரசியல் மட்டுமே நடந்துவருகிறது. அதுமட்டுமல்ல, சென்னையில் மழைநீர் வடிகால் கட்டுமானங்களுக்கு மட்டும் பல வங்கிகளில் கடன் வாங்கி, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இதுவரை செலவழிக்கப்பட்டிருக்கிறது.

அய்யநாதன்
அய்யநாதன்

ஸ்டாலின் மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக இருந்த காலம் முதல் இப்போதுவரை மூன்று நாள் மழைக்கே சென்னை மூழ்கிவிடுகிறது. அதிலும் இந்த முறை ஓர் இரவு மழைக்கே மூழ்கிவிட்டது. கடந்த ஆட்சி மட்டுமல்ல, இதுவரை மழைநீர் வடிகால் கட்டுமானத்துக்கென செலவழிக்கப்பட்ட பணத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது. அதை மறைப்பதற்காகத்தான் தண்ணீரில் சென்று பார்வையிடுவதைப்போலப் படங்களைப் பகிர்ந்துவருகின்றனர். முதல்வர் சென்று பார்வையிடும் படங்களைப் பகிர்வது வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கிறது. எத்தனை காலம்தான் இந்த அரசியலையே செய்துகொண்டிருப்பார்கள்? ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இனிமேலாவது தொடங்க வேண்டும்" என்றார் காட்டமாக.

சென்னை: `தத்தளிக்கும் தி.நகர்; கோட்டைவிட்ட அதிமுக; சாட்டையைச் சுழற்றும் திமுக!'
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு