Published:Updated:

2015 Vs 2021... சென்னை பெருமழையும், திமுக, அதிமுக அரசுகளின் செயல்பாடுகளும்! - ஒரு பார்வை

2015-ம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசின் செயல்பாடுகள்... தற்போது வெள்ளத்தில் சென்னை மாநகரம் தத்தளித்துக்கொண்டிருக்கும் சூழலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் செயல்பாடுகள்... இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

சென்னையில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. அன்றிலிருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இந்த நிலையில், வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கிய கனமழை அடுத்தநாள் காலை வரை வெளுத்து வாங்கியது. அதைத் தொடர்ந்து, அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மின் இணைப்பு துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு எனப் பல பிரச்னைகளை மக்கள் சந்தித்தனர். தற்போதும் இந்தப் பிரச்னைகள் சில பகுதிகளில் நீடிக்கின்றன.

2015 சென்னை பெருவெள்ளம்
2015 சென்னை பெருவெள்ளம்

சென்னை மாநகரின் தற்போதைய சூழல், 2015-ம் ஆண்டை நினைவூட்டுவதாக இருக்கிறது. அப்போது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு இருந்தது. அந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் அதிகனமழை பெய்தது. நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி அதிகாலைவரை பெய்த அதிகனமழை காரணமாக சென்னையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏரிகள் அனைத்தும் நிரம்பின. ஏற்கெனவே சென்னை மாநகரம் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திடீரென தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதனால் ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளத்தில் மூழ்கியது.

முறையான முன்னறிவிப்பும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், சென்னை மாநகரம் வெள்ளக்காடாகிப்போனது. அன்றைய அ.தி.மு.க அரசின் அணுகுமுறைதான் அந்த நிலைக்குக் காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. அனைத்து அதிகாரங்களையும் அன்றைய முதல்வர் ஜெயலலிதா தன் கையில் வைத்திருந்தார். செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் உயர்ந்துகொண்டிருந்த நிலையில், அதைத் திறப்பது குறித்து முதல்வரின் முடிவைக் கேட்கவேண்டிய நிலையில் அதிகாரிகள் இருந்தனர். ஆனால், முதல்வரை அதிகாரிகளால் அணுக முடியவில்லை என்று செய்திகள் வெளியாகின.

ஜெயலலிதா
ஜெயலலிதா

முதல்வரை அணுக முடியாத காரணத்தால், நிலைமை கைமீறிப்போனது. ஆகையால், ஏறி நிரம்பிய சூழலில் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென செம்பரம்பாக்கம் ஏரியை திறக்கவேண்டிய நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டனர் என்றும், அதுதான் சென்னைப் பேரழிவுக்கு காரணமாக அமைந்தது என்றும் சொல்லப்பட்டது. ஆனால், அதற்கு மாறான காட்சிகளைத் தற்போது காண முடிகிறது. சென்னையில் வெள்ளம் ஏற்பட்டவுடன் உடனடியாகக் களத்தில் இறங்கிவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், 2015-ம் ஆண்டு ஏற்பட்ட சென்னை பெருவெள்ளத்தின்போது அன்றைய அ.தி.மு.க அரசின் அணுகுமுறை, தற்போது வெள்ளச் சூழலை எதிர்கொள்ளும் தி.மு.க அரசின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து மூத்த பத்திரிகையாளர் ஜென்ராமிடம் பேசினோம்.

2015 சென்னை வெள்ளத்தின்போது ஸ்டாலின்
2015 சென்னை வெள்ளத்தின்போது ஸ்டாலின்

``2015-ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்துவிடுவது குறித்து, போயஸ் கார்டன் வீட்டிலிருந்து, அவர் அனுமதிக்காக அதிகாரிகள் காத்திருந்தனர். அது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது.

அந்த ஆட்சியிலும், இப்போது இருக்கும் அதிகாரிகள்தான் இருந்தனர். அ.தி.மு.க-விலும் களப்பணி ஆற்றுவதற்கான செயல்வீரர்கள் இருந்தனர். ஆனால், யாரும் வேலை செய்யவில்லை. ஏனென்றால், யார் வேலை செய்வது என்பது உட்பட எல்லாவற்றிலும் அங்கு ஏதோ ஓர் அரசியல் நடந்துகொண்டே இருந்தது. வெள்ளத்தில் சென்னை மூழ்கியபோது மேயர் பொறுப்பில் இருந்தவர் எதுவும் செய்ய முடியாமல் வீட்டுக்குள்ளேயே இருந்தார்.

ஒருநாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை! - யார் தவறு... என்ன செய்ய வேண்டும் மாநில அரசு?!

அது போன்ற சிக்கல்கள் தற்போதைய ஆட்சியாளர்களிடம் இல்லை. அதனால் வேலைகள் முனைப்பாக நடக்கின்றன. முதல்வர் ஸ்டாலின் களத்தில் இறங்கிவிட்டார். அமைச்சர்களும் அதிகாரிகளும் முழு வீச்சுடன் செயல்படுகிறார்கள். இதையெல்லாம் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஸ்டாலின் அரசு சிறப்பாகச் செயல்படுகிறது. அதேநேரத்தில், இந்தப் பணிகள் போதுமானதாக இல்லை என்றும் தோன்றுகிறது.

களத்தில் முதல்வர் ஸ்டாலின்
களத்தில் முதல்வர் ஸ்டாலின்

காரணம், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த காட்சிகளை இப்போதும் பார்க்க முடிகிறது. இரண்டு நாள்களாக தண்ணீர் வீட்டுக்குள் இருக்கிறது என்று மக்கள் சொல்வதையும் பார்க்க முடிகிறது. தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கும் சூழலில், அனைத்துப் பிரச்னைகளையும் உடனடியாகத் தீர்த்துவிட முடியாது என்கிற கள யதார்த்தம் புரிகிறது.

அதேநேரத்தில், அரசு இன்னும் கூடுதலாக வேலையை அதிகரிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. எந்திரங்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் எல்லா இடங்களிலும் நடக்கவில்லை. அரசு எந்த இடத்தில் செய்கிறதோ, அங்கு மட்டும்தான் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தன்னார்வலர்களுடன் சேர்ந்து வேலை செய்வது பற்றி அரசுக்கு என்ன யோசனை இருக்கிறது என்பது தெரியவில்லை" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு