Published:Updated:

`15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்கணும்!'- ராஜினாமாசெய்த கேரள ஐஏஎஸ் அதிகாரிக்கு மத்திய அரசு நோட்டீஸ்

`15 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்' என கண்ணன் கோபிநாதன் ஐஏஎஸ்ஸுக்கு அனுப்பிய நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்ணன் கோபிநாதன் ஐஏஎஸ்
கண்ணன் கோபிநாதன் ஐஏஎஸ்

கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்த இளம் ஐஏஎஸ் அதிகாரி, கண்ணன் கோபிநாதன் (33). 2012-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர். டெல்லியில் பயிற்சிபெற்று, பின்னர் மிசோரம் மாநிலம் நாட்டியாவில் சப்-கலெக்டராகப் பணியாற்றினார். தொடர்ந்து, மியான்மர் எல்லைப் பகுதியில் கலெக்டர், மிசோரம் தலைநகர் அய்சால் மாவட்ட கலெக்டர், தாத்ரா நகர் ஹவேலி மாவட்ட கலெக்டர் எனப் பணியில் இருந்தவர், கடைசியாக தாத்ரா நகர் ஹவேலி மின்சாரத்துறை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுச் செயலர் பதவி வகித்தபோது தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கண்ணன் கோபிநாதன்
கண்ணன் கோபிநாதன்

காஷ்மீரில் மக்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லை என்ற காரணத்தை முன்னிறுத்தி, கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். அதே சமயம், அரசு கொடுத்த பணிகளை உரிய காலத்தில் செய்து முடிக்காததால், கடந்த ஜூலை மாதமே கண்ணன் கோபிநாதனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அந்த நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக அவர் ராஜினாமா செய்ததாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையில், ராஜினாமா கடிதத்தை ஏற்கும் வரை தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கண்ணன் கோபிநாதனுக்கு மத்திய உள்துறை அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்தக் கடிதம், கண்ணன் கோபிநாதன் வசித்துவந்த அரசு குடியிருப்பு முகவரிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கடிதம் செல்வதற்கு முன்னதாகவே கண்ணன் கோபிநாதன் அரசு குடியிருப்பைக் காலிசெய்துவிட்டு வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

கண்ணன் கோபிநாதன்
கண்ணன் கோபிநாதன்

இந்த நிலையில், கண்ணன் கோபிநாதன் மீதான மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒழுங்கு நடவடிக்கை தொடங்கியுள்ளது. 1968 அகில இந்திய சர்வீஸ் சட்டம் விதி 8-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுகுறித்து கண்ணன் கோபிநாதனுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அனுமதி இல்லாமல் அரசு கொள்கைகளுக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததாக அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 15 நாள்களில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கண்ணன் கோபிநாதன் ஐஏஎஸ்ஸுக்கு அனுப்பிய நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரிமீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது.