Published:Updated:

முறைப்படுத்தப்படுமா முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம்?

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

அரசு மருத்துவமனைகளில் அலைக்கழிக்கப்படும் நோயாளிகள்...

முறைப்படுத்தப்படுமா முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம்?

அரசு மருத்துவமனைகளில் அலைக்கழிக்கப்படும் நோயாளிகள்...

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றால், இலவசமாக நல்ல மருத்துவம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள் கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்கள். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் நாளொன்றுக்கு சிகிச்சைக்காக சுமார் 5,000 பேர் செல்கிறார்கள். தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளில், நாளொன்றுக்குச் சிகிச்சைக்காகச் செல்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டும். இலவச சிகிச்சை வழங்கவேண்டிய அரசு மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு சிகிச்சைகளைப் பெற ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அட்டை கட்டாயமாக வேண்டும்’ என்று மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்கிற புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணமிருக்கின்றன. என்னதான் நடக்கிறது... இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?

ஸ்டாலின்
ஸ்டாலின்

அலைக்கழிக்கப்பட்ட மூதாட்டி!

கடந்த சில தினங்களுக்கு முன்பு, கடலூரைச் சேர்ந்த 60 வயது மாற்றுத்திறனாளி மூதாட்டி பேபி என்பவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக, கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையளித்த மருத்துவர்கள், அவருக்குக் காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சை செய்ய ‘முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட அட்டை வேண்டும்’ என்று கூறியுள்ளது. கால் உடைந்த நிலையில், அந்த மூதாட்டியால் நேரில் சென்று அட்டையைப் பெற முடியவில்லை. அவருக்கு ரத்த சொந்தம் என்று யாருமே இல்லை. ஒருசில நாள்களாக அவர் மருத்துவமனையிலே இருந்திருக்கிறார். கண்டிப்பாக நேரில் வந்துதான் காப்பீட்டு அட்டையைப் பெற வேண்டும் என்று அதிகாரிகள் கறாராகச் சொல்லிவிட்டார்கள். இதையடுத்து, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அந்த மூதாட்டியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் சென்று, காப்பீடு அட்டையைப் பெற்றனர். வயதான மாற்றுத்திறனாளி மூதாட்டி அலைக்கழிக்கப்பட்ட விவகாரம், மருத்துவத்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல, அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் பலரின் நிலைமையும் இதுதான்’ என்கிறார்கள்.

அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டிருக்கும் நபருக்கு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட அட்டை தேவைப்படுகிறது என்றால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரில் சென்று ஆவணங்களைச் சரிபார்த்து காப்பீடு அட்டையை வழங்க வேண்டும். அதுதான் நடைமுறை வழக்கம். அப்படி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நபருக்குக் காப்பீடு அட்டை இல்லை என்றாலும், அவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கவேண்டியது கட்டாயம். ஆனால், சமீபகாலமாக, அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை போன்ற பல சிகிச்சைகளுக்குக் காப்பீடு அட்டை வேண்டும் என்று கட்டாயப் படுத்தப்படுத்துகிறார்கள்.

ஏன் கேட்கிறார்கள் காப்பீடு அட்டை?

ஒவ்வோர் அரசு மருத்துவமனைக்கும் தேவையான மருந்து, மாத்திரை, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்துமே தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் அனுப்பி வைக்கப்படும். அந்த மருத்துவமனை நிர்வாகத் தேவைக்காக நிதி உதவியும் அரசு சார்பில் வழங்கப்படும். ஒருசில அறுவை சிகிச்சைகளுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கவோ அல்லது மருத்துவமனையின் வேறு ஏதாவது அவசரத் தேவைகளுக்கோ அந்த நிதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த மருத்துவமனை நிதியை முன்வைத்துத்தான், மருத்துவக் காப்பீடு அட்டை நிர்பந்தம் நடக்கிறது என்கிறார்கள். அதாவது, மருத்துவக் காப்பீடு அட்டை வைத்திருப்பவர்களுக்குச் செய்யும் செலவுத் தொகை மீண்டும் மருத்துவமனைக்கு வந்துவிடும். அட்டை இல்லாதவர்களுக்கான மருத்துவச் செலவை நஷ்டம்போலக் கருதுகிறது மருத்துவ நிர்வாகம். இந்தத் தவறான மனநிலையாலும், மருத்துவமனை நிதியை அதிகரித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தாலும்தான் ‘காப்பீடு அட்டை கட்டாயம் வேண்டும்’ என நிர்பந்திக்கப்படுகிறார்கள் மக்கள். சிகிச்சையளிக்கப்படாமல் அவர்கள் இப்படி அலைக்கழிக்கப்படுவது மனிதத் தன்மையற்ற செயல். மருத்துவமனை நிர்வாகம், தனது நிதி தொடர்பான கோரிக்கைகளை அரசிடம் முன்வைக்க வேண்டுமே தவிர, அதை ஒரு காரணமாக வைத்து மக்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

“காப்பீடு அட்டை அவசியம் கிடையாது!”

இந்த விவகாரம் தொடர்பாக மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். ``தமிழக அரசின் அனைத்து மருத்துவமனைகளிலும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உயர்தர சிகிச்சை இலவசமாகத்தான் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு காப்பீடு அட்டை அவசியம் கிடையாது. அப்படியே தேவைப்பட்டாலும், மருத்துவமனைக்கே சென்று அட்டை வழங்கப்படுகிறது. அப்படி நோயாளிகள் அலைக்கழிக்கப்பட்டால், அவர்கள் மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட புகார்களுக்கென்று செயல்பட்டு வரும் 104 என்ற எண்ணுக்கு அழைத்து எப்போது வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம். கடலூரில் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. விசாரணை முடிவில் தவறு நடந்தது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஏழை, எளிய மக்களும், உற்றார் உறவினர்கள் இல்லாத ஆதரவற்றவர்களும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். இவர்களில் பலருக்கும் அடையாள அட்டை தொடங்கி குடும்ப அட்டை வரை எதுவுமே இருப்பதில்லை. அரசு மருத்துவமனையை நம்பி வரும் அப்படியான அடித்தட்டு மக்கள் ‘காப்பீடு அட்டை அவசியம்’ என அலைக்கழிக்கப்படக் கூடாது. உரிய நேரத்தில் அவர்களுக்குச் சிகிச்சை வழங்குவதை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism