அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

‘இதுக்கு மட்டும் கத்துதா அந்த பல்லி?’ - சர்ச்சையைக் கிளப்பும் தேர்தல் ஆணையக் கடிதம்!

தேர்தல் ஆணையம்
பிரீமியம் ஸ்டோரி
News
தேர்தல் ஆணையம்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவின்படி, சுதந்திரமாகவும் நேர்மையாக வும் தேர்தல்களை நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் பணி.

சமீபகாலமாக, இலவசத் திட்டங்களுக்கு எதிரான பிரசாரத்தை பா.ஜ.க முன்னெடுத்திருக்கிறது. தன்னுடைய மேடைப் பேச்சுகளிலெல்லாம், “இலவசத் திட்டங்களால் நாடு சுயசார்பு தன்மையை அடைய முடியவில்லை. புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய முடியவில்லை. வருமான வரி செலுத்துவோர்மீது இலவசத் திட்டங்கள் பெரும் நிதிச்சுமையை சுமத்துகின்றன” என்று பேசிவருகிறார் பிரதமர் மோடி.

இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநிலக் கட்சிகளுக்கு அக்டோபர் 4-ம் தேதி ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். அதில், `அரசியல் கட்சிகள் பல தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கின்றன. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி திரட்டும் திட்டம் என்ன... இலவசத் திட்டங்களைப் பெற தகுதியானவர்கள் யார் யார்... உள்ளிட்ட விவரங்களை அக்டோபர் 19-ம் தேதிக்குள் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படி விளக்கம் கேட்பது, ‘தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வருகிறதா?’ என்பது அடிப்படைக் கேள்வி. அதேநேரத்தில், “மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தையே மாற்றுவதற்குத் தேர்தல் ஆணையம் முயல்கிறது” என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.

மோடி
மோடி

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவின்படி, சுதந்திரமாகவும் நேர்மையாக வும் தேர்தல்களை நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் பணி. அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதி விவகாரங்களில் தலையிடுவது அதன் வேலையல்ல. 2013-ல், தமிழ்நாடு அரசுக்கு எதிராக சுப்பிரமணியம் பாலாஜி என்பவர் தொடுத்திருந்த வழக்கில், அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகள் குறித்து தெளிவாக விளக்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். “1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, அரசியல் கட்சிகள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகளுக்குத் தடைவிதிக்க முடியாது. தங்கள் கொள்கைகளை அவர்கள் வாக்குறுதிகளாக அளிக்கிறார்கள். அதை நிறைவேற்ற முடியுமா, முடியாதா என்பதெல்லாம் அவர்கள் ஆட்சியைப் பிடித்த பிறகுதான் கேள்வி எழுப்ப முடியும்” என்றிருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனைக்கு எடுக்க, உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓர் உத்தரவைப் பிறப்பித்திருந்த சூழலில், அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் ஆணையம் அனுப்பியிருக்கும் இந்தக் கடிதம் பலத்த விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய வடசென்னை தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி, “மக்கள் நலன் சார்ந்த பல வாக்குறுதிகளை அளித்து டெல்லியிலும் பஞ்சாப்பிலும் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி, விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் குஜராத்திலும் அத்தகைய வாக்குறுதிகளை அளித்துவருகிறது. இதனால், அங்கு பா.ஜ.க-வுக்கு ஓர் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில்தான், இலவசங்களுக்கு எதிரான கருத்தை சமீபத்தில் பிரதமர் மோடி முன்வைத்தார். அதைத்தான், தேர்தல் ஆணையமும் இப்போது பின்பற்றுகிறது. இது ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டில் பெண்களுக்குக் கட்டணமில்லா பஸ் பயணம், அரசுப் பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு 1,000 ரூபாய் மாத உதவித்தொகை போன்ற திட்டங்களைச் செயல்படுத்துகிறோம். இவை, பொருளாதார ரீதியில் பெண்களை முன்னேற்றும். ஆனால், இந்தத் திட்டங்களை ‘இலவசம்’ என்று சொல்லி தேர்தல் ஆணையம் நிராகரித்தால் என்ன செய்வது?” என்றார்.

‘இதுக்கு மட்டும் கத்துதா அந்த பல்லி?’ - சர்ச்சையைக் கிளப்பும் தேர்தல் ஆணையக் கடிதம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன், “தேர்தல் ஆணையத்துக்கு இது வேண்டாத வேலை. அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவுகளை தேர்தல் ஆணையம் முறைப்படுத்த முடியாது. ‘அவ்வாறு செய்வது அதிகார வரம்புமீறலாகிவிடும்’ என்று இதே தேர்தல் ஆணையம்தான் உச்ச நீதிமன்றத்தில் முன்பு தெரிவித்தது. தற்போது, அதற்கு நேர்மாறாகச் செயல்படுகிறது” என்றார் காட்டமாக.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், “எதிர்க் கட்சிகளின் தேர்தல் செயல்பாடுகளை முடக்க முயல்கிறார்கள். இது நடைமுறைக்கு வந்தால், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை, தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். அவர்கள் ஒப்புதல் அளிக்கும் வரை அந்தக் கட்சியால் தேர்தல் அறிக்கையை வெளியிட முடியாது, பிரசாரம் செய்ய முடியாது. தேர்தல் ஆணையத்துக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், கட்சிகளுக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்பதைப் பார்க்க வேண்டும். அதைத்தான் தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும்” என்றார்.

பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் குமரகுருவிடம் பேசினோம். “எதிர்க்கட்சிகளிடம் மட்டுமல்ல, பா.ஜ.க உட்பட எல்லா கட்சிகளிடமும்தான் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டிருக்கிறது. ஒரு வாக்காளன் எந்த வகையிலும் ஏமாற்றப்படாமல் வாக்களிப்பதை உறுதிசெய்வது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆகவேதான், இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி எப்படித் திரட்டப்படும் என்று ஆணையம் கேட்கிறது” என்றார்.

கலாநிதி வீராசாமி, பி.ஆர்.நடராஜன், பீட்டர் அல்போன்ஸ், குமரகுரு, கே.பாலகிருஷ்ணன்
கலாநிதி வீராசாமி, பி.ஆர்.நடராஜன், பீட்டர் அல்போன்ஸ், குமரகுரு, கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் பேசினோம். “மக்களுக்கு அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்கின்றன. அதன் அடிப்படையில் மக்கள் வாக்களிக்கிறார்கள். இது கட்சிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான பிரச்னை. இதில், தேர்தல் ஆணையம் மூக்கை நுழைக்கவேண்டிய அவசியமில்லை. இலவசங்கள் பற்றிக் கேள்வி கேட்கும் தேர்தல் ஆணையம், எல்லா வாக்குறுதிகள் பற்றியும் ஏன் கேட்கவில்லை... குறிப்பாக, `ராமர் கோயில் கட்டுவோம்’ என்பது போன்ற மதரீதியான வாக்குறுதிகள் பற்றி ஏன் கேட்கவில்லை... `பொது சிவில் சட்டம் கொண்டுவருவோம்’ என்று அரசியல் சாசனத்துக்கு விரோதமான வாக்குறுதிகள் பற்றித் தேர்தல் ஆணையம் ஏன் வாய் திறப்பதில்லை... இன்றைக்கு, சிவசேனா கட்சியின் பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லி அந்தக் கட்சியையே தேர்தல் ஆணையம் முடக்கிவிட்டதே... உள்நோக்கத்துடன்கூடிய தேர்தல் ஆணையத்தின் இத்தகைய போக்கு மோசமானது” என்கிறார்.

‘இலவச வாக்குறுதிகளால் வாக்காளர்கள் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது’ என்கிற நோக்கத்தில் தேர்தல் ஆணையம் இந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தால், நம்பிக்கை சார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். அது பற்றி மட்டும் வாய் திறக்காதது ஏன்?

என்.கோபால்சாமி
என்.கோபால்சாமி

சரியான நடவடிக்கைதான்!

“இது ஒரு சரியான நடவடிக்கைதான். வாக்குறுதிகளை நிறைவேற்ற எங்கிருந்து நிதி வருகிறது என்பது வாக்காளர்களுக்குத் தெரிய வேண்டும். அதனால், பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. ஆனாலும், அந்த விவரம் வாக்காளர்களுக்குத் தெரிய வேண்டும். இதே மாதிரிதான், `வேட்பாளர்கள் மீதான கிரிமினல் வழக்குகள் பற்றிய விவரங்களை பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு விதி கொண்டுவரப்பட்டது. ‘கிரிமினல் பின்னணிகொண்ட ஆசாமிகளை எம்.பி., எம்.எல்.ஏ-க்களாகத் தேர்வுசெய்துவிடாதீர்கள்’ என்பதற்காக அது கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்றைக்கு 43 சதவிகித மக்கள் பிரதிநிதிகள்மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை ஆகிய கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. இதைவிட வெட்கக்கேடு இருக்க முடியாது.”

- என்.கோபால்சாமி, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்