கட்டுரைகள்
Published:Updated:

சென்னை மழைநீர் வடிகால் பணிகள்... ஸ்டாலின் அரசு சாதித்ததா... சறுக்கியதா?

சென்னை மழை
பிரீமியம் ஸ்டோரி
News
சென்னை மழை

ஆங்காங்கே மழைநீர் தேங்கியிருக்கிறதே...’ என்று கேட்டபோது, “எங்கே தேங்கியிருக்கிறது... வந்து காமிங்க...

சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவந்த மழைநீர் வடிகால் பணிகள் குறித்து, ‘மழைநீர் வடிகால்... அரைவேக்காட்டுத் திட்டம்! - சென்னை ஸ்கேன் ரிப்போர்ட்...’ என்று விரிவான கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தது 19-10-2022 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ். அந்தக் கட்டுரைக்குப் பிறகு நகரின் பல பகுதிகளில் மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் வேகமெடுத்தன. அதேவேளையில், கட்டுரையில் சுட்டிக்காட்டியதுபோல உயிர்ப்பலிகள் நிகழ்ந்ததும் வேதனையளித்தது.

சென்னை மழைநீர் வடிகால் பணிகள்... ஸ்டாலின் அரசு சாதித்ததா... சறுக்கியதா?

இந்த நிலையில், சென்னையில் மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட முதல்வரிடம் பத்திரிகையாளர்கள், ‘ஆங்காங்கே மழைநீர் தேங்கியிருக்கிறதே...’ என்று கேட்டபோது, “எங்கே தேங்கியிருக்கிறது... வந்து காமிங்க” என்று மறுக்கும்விதமாக பதிலளித்தார். அமைச்சர்களுமே ‘மழைநீர் வடிகால் திட்டத்தால் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் வடிந்துவிடுகிறது’ என்றே சொல்லிவருகிறார்கள். ஆனால், எதிர்க்கட்சிகள் தரப்பில், “மழைநீர் தேங்கவில்லை என தி.மு.க அரசு மாயத் தோற்றத்தை ஏற்படுத்திவருகிறது” என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்வைக்கிறார்கள். உண்மையில், இந்த கனமழைக்குச் சென்னையில் மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் சிறப்பாகச் செயல்பட்டனவா, இல்லையா என்பதை அறிய விகடன் டீம் மீண்டும் களத்தில் இறங்கியது.

கொட்டித்தீர்த்த கனமழை...வடிந்த மழைநீர்!

கடந்த ஆண்டு கனமழையால் பாதிக்கப்பட்ட தி.நகர், ஜி.என்.செட்டி சாலைப் பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் சூழ்ந்திருந்தது. அதேபோல, தேனாம்பேட்டை சொக்கலிங்கம் தெரு, கோடம்பாக்கத்தின் பல்வேறு தெருக்களில் மழைநீர் குளம்போலத் தேங்கியது. ஆனால், தற்போது பெய்த மழையில் இந்தப் பகுதிகளில் மழைநீர் உடனுக்குடன் வடிந்ததைக் காண முடிந்தது. அதிகம் பாதிக்கப்படும் என்று பலரும் கருதிய கே.கே.நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் விரைவாக வடிந்ததையும் காண முடிந்தது.

கடந்த மாதம் நாம் கள ஆய்வுக்குச் சென்றபோது, புளியந்தோப்பு நெடுஞ்சாலை தொடங்கி, திரு.வி.க நகர், பெரம்பூர், கொளத்தூர் பகுதிகளில் பணிகள் அவசரகதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அச்சுறுத்தும் வகையில் அபாயகரமாக இருந்த கால்வாய்ப் பள்ளங்கள் அனைத்தும் தற்போது முழுவதும் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன. ஒருசில தெருக்களில் பணிகள் முழுமையாக நிறைவேறாமலிருந்தன. இந்த நிலையில், சமீபத்திய தொடர் கனமழைக்குப் புளியந்தோப்பு நெடுஞ்சாலைப் பகுதியிலுள்ள பல தெருக்களில் மழைநீர் குளம்போலத் தேங்கியிருக்கிறது. இந்த மொத்த மழைநீரையும் மோட்டார் பம்புகள் துணையுடனேயே வெளியேற்றி யிருக்கிறார்கள். இதனால், மழை நின்ற இரண்டு நாள்களுக்குப் பிறகும் பல தெருக்களில் மோட்டார் பம்புகள் தொடர்ந்து இரைந்துகொண்டிருந்தன.

சென்னை மழைநீர் வடிகால் பணிகள்... ஸ்டாலின் அரசு சாதித்ததா... சறுக்கியதா?

கைகொடுத்த மோட்டார் பம்புகள்

முதல்வர் ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூரைப் பொறுத்தவரை, பல தெருக்களிலும் மூன்றுக்கு மேற்பட்ட மோட்டார் பம்புகளைக்கொண்டு தேங்கியுள்ள மழைநீரை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு மாற்றியபடியிருந்தார்கள். இது தொடர்பாக, கொளத்தூர் ஹரிதாஸ் மூன்றாவது தெருவைச் சேர்ந்த கண்ணன் என்பவரிடம் பேசினோம். “முன்னல்லாம் மழை வந்தா தண்ணி தெருவுலதான் நிக்கும். ஆனா, இந்த மழைக்கு மழைத்தண்ணி வீட்டுக்குள்ளயே வந்துடுச்சு. மழைத் தண்ணியோட சாக்கடையும் சேர்ந்து, தெருவே சேறும் சகதியுமா ஆகிடுச்சு. கார்ப்பரேஷனுக்கும் கவுன்சிலருக்கும் போன் பண்ணிச் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. சாக்கடை நாத்தத்தால எங்களால வீட்டைவிட்டு வெளியவே வர முடியலை” என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியின் பாரதி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கடந்த ஆண்டைப் போலவே மழைநீர் தேங்கி நிற்கும் குற்றச்சாட்டுகள் வருகின்றன. ராயபுரம் பகுதியில் பிச்சாண்டி சந்து, பிச்சாண்டி முதலி தெரு, ராமன் தெரு, மஸ்தான் தெரு, ஆண்டியப்பன் தெரு, வேலாயுதம் தெரு, மாடசாமி தெரு எனப் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

சென்னை பள்ளிக்கரணை மெயின் சாலையின் இரு பக்கமும் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லாமலிருக்கிறது. வடிகால் இணைப்புகளை மேற்கொள்ளாததால், காமகோடி நகர், பாலாஜி நகரிலுள்ள பழைய வடிகால்கள் வழியாகத் தண்ணீர் வெளியேறி, அந்தப் பகுதி முழுவதையுமே தண்ணீர் வெள்ளக் காடாகச் சூழ்ந்துகிடக்கிறது. தரமணி ரயில் நிலையம் அருகே இருக்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் முன்பாக நடைபெற்ற வடிகால் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.

சென்னை மழைநீர் வடிகால் பணிகள்... ஸ்டாலின் அரசு சாதித்ததா... சறுக்கியதா?

புறநகர்ப் பகுதிகள் படுமோசம்!

மேலும், திருவொற்றியூர், மாங்காடு, மவுலிவாக்கம் போன்ற சென்னை புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஆண்டைக்காட்டிலும் அதிக அளவு தண்ணீர் தேங்கியிருக்கிறது. மவுலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வி, “பிரதான சாலைகளில் போதிய வசதிகள் செய்திருக்கிறார்கள். ஆனால், தெருக்களில் தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ரங்கா நகரில் பல வீடுகளுக்குள் தண்ணீர் சென்றுவிட்டது. மாநகராட்சி அதிகாரிகளுக்குப் புகார் கொடுத்து மூன்று நாள்களான பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், நாங்களே வாடகைக்கு மோட்டார் பம்புகளை வாங்கிவந்து வீடுகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றினோம்” என்றார்.

நாம் சென்னையின் பல்வேறு இடங்களில் மேற்கொண்ட களப்பணியில், கடந்த ஆண்டு அதிக அளவு தண்ணீர் தேங்கிய பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால் வேலை செய்திருக்கிறது. பல இடங்களில் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கை கைகொடுத்திருக்கிறது.

எனினும், சென்னை புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பாதிப்பு அதிகரித்திருக்கிறது என்கிறார்கள் பொது மக்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் அரசின் கவனம் விரைவாகத் திரும்ப வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

சரி செய்யுமா அரசு?