Published:Updated:

`வேலைவெட்டி இல்லாமல் சும்மா உட்கார்ந்துகிட்டா இருக்கோம்!'-குறை தீர்ப்பு கூட்டத்தில் பொங்கிய கலெக்டர்

எம்.வடிவேல்

கிருஷ்ணகிரியில், இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ஏரிகளில் உள்ள மரங்களை வெட்டுவது யார் குற்றம்? விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கலெக்டரின் சூடான விவாதம்

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்
விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

கிருஷ்ணகிரியில், விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம், இன்று மாவட்ட ஆட்சியர் உள்ளரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர், வேளாண்மைத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பேசிய விவசாயிகள் அனைவரும், மாவட்ட நிர்வாகம் பருவ மழையைச் சேமிக்க போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.

நாங்க என்ன மரங்களை நடாமல் இருக்கோமா... இல்ல வேலைவெட்டி இல்லாமல் சும்மா உட்கார்ந்துகொண்டு இருக்கோமா
கலெக்டர்

போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த சென்னப்ப நாயுடு என்ற விவசாயி பேசும்போது, ``போச்சம்பள்ளி, மத்தூர் பகுதிகளில் உள்ள ஏரிகளைச் சரியாகத் தூர்வாருவதில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தப் பகுதி விவசாயிகள் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியுள்ளனர். எனவே இந்தப் பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளையும் உடனே தூர்வார வேண்டும்.

இந்த முறை போதுமான அளவு பருவ மழை பெய்தும், மத்தூர் அடுத்துள்ள களர்பதி ஊராட்சி ஏரியில் நிற்கவேயில்லை. பலவீனமான கரைகளால் ஏரிகளுக்கு வந்த மழை நீர் மொத்தமும் அப்படியே வெளியேறிவிட்டது. அந்த அளவிற்கு ஏரிக் கரைகள் பலவீனமாக உள்ளன. எனவே ஏரிக்கரைகளைப் பலப்படுத்தி, அதிகளவு மரக் கன்றுகளை நடவேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தேன். இதற்கும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை'' என்று தெரிவித்தார்.

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்
விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று திரும்பத் திரும்ப விவசாயி சென்னப்பநாயுடு பேசவும், கோபமடைந்த கலெக்டர் பிரபாகர், அதிகாரிகளா மரத்தை நடமுடியும். இருக்கிற மரங்களை வெட்றதே விவசாயிங்கதான் என்று குற்றத்தை விவசாயிகள் மீது சுமத்தியதோடு, நாங்க என்ன மரங்களை நடாமல் இருக்கோமா.. இல்ல வேலைவெட்டி இல்லாமல் சும்மா உட்கார்ந்துகொண்டு இருக்கோமா... என கலெக்டர் கோபத்துடன் பேச விவசாயி சின்னப்ப நாயுடு மிரண்டுபோய்விட்டார். அதன் பிறகே ஏரிகள் டாபிக் மாறியது.

Vikatan

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தின் முடிவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குடிமராமத்துப் பணிகள் நடைபெறும் ஏரிகளில் ஊரக வளர்ச்சித்துறை, வேளாண் அலுவலர்கள், விவசாய குழுக்கள் இணைந்து பனை, புளியின், புங்கன் மற்றும் வேம்பு உள்ளிட்ட மரங்கள் நட்டு வளர்க்கப்படும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.