Published:Updated:

`உட்கட்சிப் பூசல்; உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு மோதல்!'- ஊராட்சி துணைத் தலைவர்மீது புகார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திமுக-வைச் சேர்ந்த முகமது யூசுப் கனி
திமுக-வைச் சேர்ந்த முகமது யூசுப் கனி

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆதரவில் கவுன்சிலராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற அன்புமணி, தற்போது திமுக-வில் சேர்ந்திருக்கிறார்.

சென்னை தாம்பரத்தை அடுத்த மேடவாக்கம் அருகேயுள்ள சந்தோஷபுரம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் முகமது யூசுப் கனி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் வசித்துவருகிறேன். நான் சொந்தமாக ஆட்டோவைத்து தொழில் செய்துவருகிறேன். கடந்த 11-ம் தேதி மாலை 6:30 மணியளவில் என்னுடைய தம்பியிடம் பைக்கை வாங்குவதற்காகச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது, கலைஞர் கருணாநிதி சாலை, விசாலாட்சி நகர் 2-வது தெரு சந்திப்பில் சென்றுகொண்டிருந்தபோது, என்னை சந்தோஷபுரத்தைச் சேர்ந்த சதீஷ், சங்கீதராஜன், இஸ்ரவேல், குமரேசன் ஆகியோர் வழிமறித்தனர்.

முகமது யூசுப்
முகமது யூசுப்

அப்போது சதீஷ் என்பவர், வேங்கைவாசல் ஊராட்சி மன்றத் தேர்தலில் அன்புமணி என்பவருக்கு எதிராகத் தேர்தல் வேலை செய்ததற்காக என்னைக் கடுமையாகத் தாக்கினார். பின்னர் 30,000 ரூபாய் மதிப்புள்ள செல்போனையும் என்னிடமிருந்து அவர்கள் நான்கு பேரும் பறித்துச் சென்றுவிட்டனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முகமது யூசுப் கனி, ``நான் சந்தோஷபுரம் பகுதி இளைஞரணித் துணை அமைப்பாளராக இருக்கிறேன். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வேங்கைவாசலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தேன். அப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஊராட்சிச் செயலாளராக இருக்கும் அன்புமணி என்பவர், வார்டு 1-ல் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டார். அவர்மீது சேலையூர் காவல் நிலையத்தில் வழக்குகள் இருக்கின்றன. மேலும், அந்தக் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளிப் பட்டியலிலும் அன்புமணியின் பெயர் இருக்கிறது. அவரின் தூண்டுதலின் பேரில்தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்த சதீஷ், அ.தி.மு.க-விலிருந்த சங்கீதராஜன், இஸ்ரவேல், குமரேசன் ஆகியோர் என்னைச் சரமாரியாகத் தாக்கினார்கள். இவர்கள் அன்புமணியின் ஆதரவாளர்கள். காயமடைந்த நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.

அப்போது என் முகத்தில் எலும்பு உடைந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சிகிச்சைக்குப் பிறகு என்னைத் தாக்கியவர்கள் மீது சேலையூர் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். ஆனால் போலீஸார் புகாரைப் பெறவில்லை. மேலும், புகாரில் அன்புமணியின் பெயரைக் குறிப்பிடக் கூடாது என போலீஸார் என்னை மிரட்டுகின்றனர். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆதரவில் கவுன்சிலராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற அன்புமணி, தற்போது திமுக-வில் சேர்ந்திருக்கிறார். வேங்கைவாசல் ஊராட்சியில் துணைத் தலைவராகவும் பதவி வகிக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் நான் தி.மு.க-வுக்கு வேலை செய்த காழ்ப்புணர்ச்சியால் என்னைத் தாக்கியிருக்கின்றனர். என்னைத் தாக்கியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல்... கழகத்துக்குள் நடந்த களேபரங்கள்!
மெடிக்கல் ரிப்போர்ட்
மெடிக்கல் ரிப்போர்ட்

இது குறித்து இன்ஸ்பெக்டர் நடராஜிடம், சரித்திரப் பதிவேடு குற்றவாளி எனக் கூறப்படும் அன்புமணிக்கு ஆதரவாக போலீஸார் செயல்படுவதாக முகமது யூசுப் குற்றம்சாடியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, ``பிரச்னை முடிந்துவிட்டது" என்றார்.

இது குறித்து துணைத் தலைவர் அன்புமணியிடம் பேசினோம். ``நான் ஆரம்பத்தில் தி.மு.க-வில்தான் இருந்தேன். சில காரணங்களுக்காக அந்தக் கட்சியிலிருந்து விலகி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தேன். தற்போது மீண்டும் தி.மு.க-வில் இணைந்துவிட்டேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்மீது பொய்ப் புகார் கொடுத்திருக்கிறார்கள். சம்பவம் நடக்கும்போது நான் அங்கு இல்லை. என் மீதிருக்கும் வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது" என்றார்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக-வுக்குள் நடந்த உட்கட்சிப் பூசல், வெற்றிக்குப் பிறகு மோதலாக வெடித்திருப்பதாக வேங்கைவாசலைச் சேர்ந்த திமுக-வினர் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு