Published:Updated:

தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்!

க.அன்பழகன்
க.அன்பழகன்

தி.மு.க-வின் மூத்த தலைவரும், பொதுச்செயலாளருமான க.அன்பழகன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த மாதம் 25-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பேராசிரியர் அன்பழகனின் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்து வந்தனர். கடந்த சில நாள்களாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுவருவதாக மருத்துவர்கள் கூறினர். இருந்தபோதிலும் பேராசிரியர் அன்பழகனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர்.

நேற்று காலையில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாகவும், இதனால் அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து தி.மு.க தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அவரைச் சந்தித்து வந்தனர். அதைத்தொடர்ந்து நேற்று இரவு ஊடகங்களிடம் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பேராசிரியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், ஆனால், அந்தக் கூடுதல் சிகிச்சைக்குப் பலனளிக்காத வகையில் அவரின் உடல்நலன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே, சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று அதிகாலை காலமானார்.

மு.கருணாநிதியுடன் க.அன்பழகன்
மு.கருணாநிதியுடன் க.அன்பழகன்

க.அன்பழகன் மறைவுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உற்ற தோழனாகவும், 43 ஆண்டுகள் கழகத்தின் பொதுச் செயலாளராகவும், கழக ஆட்சியில் சமூக நலம், மக்கள் நல்வாழ்வு, கல்வி மற்றும் நிதி ஆகிய துறைகளின் அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் தமிழாய்ந்த பேராசிரியராகவும் விளங்கிய கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் சில நாள்கள் உடல் நலிவுற்றிருந்து இன்று 7-3-2020 அதிகாலை 1:00 மணியளவில் மறைவெய்தியதையொட்டி, கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று முதல் ஒருவார காலம் தள்ளிவைக்கப்பட்டு, கழகக் கொடிகள் ஏழு நாள்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், உருக்கமான இரங்கலையும் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்திருக்கிறார்.

திமுக-வினர் அஞ்சலி

அடுத்த கட்டுரைக்கு