Published:Updated:

நாங்குநேரியில் பணப்பட்டுவாடா, தாக்குதல் புகார்: தி.மு.க எம்.எல்.ஏ, 26 பேர் மீது வழக்குப் பதிவு!

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாக தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரைத் தாக்கியதாக 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிதறிக்கிடக்கும் பணம்
சிதறிக்கிடக்கும் பணம்

நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான இறுதிக்கட்டப் பிரசாரம் நாளை (19-ம் தேதி) மாலையுடன் முடிவடைய இருப்பதால் அ.தி.மு.க-வின் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் ரூபி மனோகரன் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டுக்கட்டாக 2000 ரூபாய் பணத்துடன் சிக்கிய திமுக எம்எல்ஏ?- சுற்றிவளைத்து பிடித்த நாங்குநேரி மக்கள்
பிரதானக் கட்சிகளான காங்கிரஸும் அ.தி.மு.க-வும் வாக்காளர்களுக்குப் பணத்தை வாரி இறைக்கின்றன.
சுயேச்சை வேட்பாளர்கள்

பிரதான கட்சிகளான அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்காக இரு கட்சியினரும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாகப் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சுமத்துகின்றனர் சுயேச்சை வேட்பாளர்கள்.

இந்தநிலையில், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூலக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பலம் என்னும் கிராமத்தில் பெரியகுளம் தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான சரவணகுமார் தலைமையில் 12 பேர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர். அவர்கள் அந்தப் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்கள்.

நாங்குநேரி இடைத்தேர்தல்... கடும் போட்டியில் அ.தி.மு.க., காங்கிரஸ்!
ஆதி திராவிடர் பட்டியலில் இருக்கும் 7 பிரிவினரை ஒருங்கிணைத்து `தேவேந்திரகுல வேளாளர்’ என அறிவிக்க வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு
பட்டியல் இன மக்கள்

அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் வசிக்கிறார்கள். தங்களை `தேவேந்திரகுல வேளாளர்’ என அறிவிக்க வலியுறுத்தி தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்ததுடன், வீடுகளில் கறுப்புக் கொடியையும் ஏற்றியிருக்கிறார்கள். இத்தகைய எதிர்ப்பையும் மீறி அந்தப் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சரவணகுமார் தலைமையிலான குழுவினர் பிரசாரம் செய்துவந்தனர்.

இந்தச் சூழலில், சரவணகுமார் எம்.எல்.ஏ தங்கியிருந்த வீட்டை அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று திடீரென முற்றுகையிட்டதுடன், வீட்டுக்குள் நுழைந்து சோதனையிட்டனர். அப்போது வீட்டுக்குள் கட்டுக்கட்டாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்ததாக அவர்கள் புகார் தெரிவித்தனர். அத்துடன், எம்.எல்.ஏ மற்றும் அவருடன் இருந்தவர்களையும் பொதுமக்கள் சிறைப்பிடித்தார்கள்.

சிறைப்பிடிக்கப்பட்ட தி.மு.க-வினர்
சிறைப்பிடிக்கப்பட்ட தி.மு.க-வினர்

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், அங்கிருந்தவர்களைப் பொதுமக்களிடம் இருந்து மீட்டனர். அதைத் தொடர்ந்து அங்கு வந்த தேர்தல் அலுவலர்கள், வீட்டில் சிதறிக்கிடந்த 2,78,000 ரூபாய் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர். இதுதொடர்பாக அங்கிருந்தவர்களிடம் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய சரவணகுமார் எம்.எல்.ஏ, ``நானும் எங்களுடைய கட்சியினரும் வீட்டிலிருந்தபோது அத்துமீறி நுழைந்த சிலர் எங்களைத் தாக்கியதுடன் நாங்கள் அணிந்திருந்த செயின், மோதிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டதுடன், சொந்தச் செலவுக்காக நாங்கள் வைத்திருந்த பணத்தையும் கீழே வீசினர். இது தொடர்பாகப் போலீஸில் புகார் செய்துள்ளோம்’’ என்றார்.

`2,56,414 வாக்காளர்கள்; 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை!' - நாங்குநேரி இடைத்தேர்தல் அப்டேட்
சொந்த தேவைக்காக நானும் என்னுடன் இருந்த 12 பேரும் வைத்திருந்த பணத்தைச் சிலர் பிடுங்கி வீசிவிட்டனர்.
பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணகுமார்

இந்தநிலையில், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், சரவணகுமார் எம்.எல்.ஏ மற்றும் அவருடன் இருந்தவர்கள் உள்ளிட்ட 7 பேரும் பணப்பட்டுவாடா செய்யப் பணம் வைத்திருந்ததாக காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக அம்பலம் கிராமத்தைச் சேர்ந்த 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவரான கே.எஸ்.அழகிரி, ``நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது. அந்தத் தொகுதியில் தேர்தல் பணியிலிருந்தவர்களின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சிலர் தாக்குதல் நடத்தி அவர்களின் சொந்தப் பணத்தைப் பிடுங்கி வீசியுள்ளனர்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

அதை வீடியோவாக பதிவு செய்ததிலிருந்தே அந்த சூழ்ச்சியின் பின்னணியைப் புரிந்துகொள்ள முடிகிறது. அ.தி.மு.க-வினர் கோடிக்கணக்கில் பணப்பட்டுவாடா செய்திருக்கிறார்கள். அதைக் கண்டுகொள்ளாமல் சொந்தத் தேவைக்கு வைத்திருந்ததைப் பறிமுதல் செய்துள்ளனர். நீட் தேர்வையும் ஜிஎஸ்டி வரியையும் காங்கிரஸ் கட்சிதான் கொண்டுவந்தது. ஆனால், நாங்கள் விரும்பியபடி அதை தற்போதைய பாரதிய ஜனதா அரசு செயல்படுத்தவில்லை என்பதால்தான் பிரச்னை ஏற்படுகிறது’’ என்றார்.