Published:Updated:

நூற்றாண்டு காணும் பேராசிரியர்!

க.அன்பழகன்
பிரீமியம் ஸ்டோரி
News
க.அன்பழகன்

சுப.வீரபாண்டியன் - படம்: அய்க்கண்

மயிலாடுதுறையில், கல்யாணசுந்தரனார் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில், பெரியார் உரையாற்ற வந்திருந்தார். அது ஒலிவாங்கியோ, ஒளிரும் விளக்குகளோ இல்லாத காலம். ஒரு மேசை, நான்கைந்து நாற்காலிகள், ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு - இவைதாம் இருந்தன. எதிரிலும் எண்ணிக்கையில் குறைவாகச் சிலர் மட்டுமே அமர்ந்திருந்தனர். அங்கே ஒரு ஒல்லியான உருவம் ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்தது. அந்த உருவத்திற்குச் சொந்தக்காரர், கல்யாணசுந்தரனாரின் மகன் க.அன்பழகன்.

ஒருமணி நேரத்திற்கும் மேலாகப் பெரியார் அன்று உரையாற்றியுள்ளார். அந்த இளைஞர் அன்பழகன் அதுவரையில் கேட்டிராத புதிய சிந்தனைகள். இரவு முழுவதும் அந்த உரையே அவர் நெஞ்சில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஆம், அதுதான் அவர் நெஞ்சில் விழுந்த முதல் விதை. அது வளர்ந்து மரமானபோது, அவர் இனமானப் பேராசிரியர் ஆனார். இந்த நிகழ்வைப் பேராசிரியரே ஒரு கூட்டத்தில் கூறினார்.

அப்போது அவரைப் பற்றிக்கொண்ட அந்தத் திராவிட உணர்வு, அவரின் இறுதிநாள் வரையில் அவருடன் தொடர்ந்து பயணித்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது, இயக்கப் பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டார். 1949-ல் தி.மு.க உருவானபோது அதில் அண்ணாவின் தம்பியாய் ஆகி மகிழ்ந்தார்.

அவர் ஒரு சிறந்த பேச்சாளர் என்பதை மேடைகள் மெய்ப்பித்தன. அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதைக் ‘குடியரசு’ ஏடு உலகுக்குச் சொன்னது. 1943 முதல் ‘குடியரசு’ ஏட்டில் அவரது கட்டுரைகள் வெளிவரத் தொடங்கின என்னும் செய்தியைப் பேராசிரியர் மங்கள முருகேசன் தன் நூலில் பதிவு செய்துள்ளார். ‘சரித்திரப்பிரியன் என்பவர், ஆரிய-திராவிடம் என்பதெல்லாம் வெறும் மாயை என்று எழுதியிருந்த கட்டுரைக்கு மறுப்பாக எழுதப்பட்ட கட்டுரைதான், முதன்முதலில் வெளிவந்த பேராசிரியரின் கட்டுரையாக இருக்கும்’ என்கிறார் மங்கள முருகேசன். அதன்பிறகு 50க்கும் மேற்பட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார்.

1948 ஜனவரியில் ‘புதுவாழ்வு’ என்னும் ஓர் ஏட்டினை பேராசிரியர் தொடங்கினார். அப்போது அவர் எழுதிய அறிமுகக் கட்டுரை, வரலாற்றுச் சிறப்புமிக்கது. ‘தை 1 பொங்கல் நாளே தமிழர் புத்தாண்டு’ என்று அப்போதே அவர் எழுதியுள்ளார். “பொங்கல் முதல் நாளோடு, பழைய ஆண்டு கழிந்து பொங்கலன்றே நமக்குப் புத்தாண்டு பிறக்கிறது” என்று எழுதுகின்றார்.

அந்தக் கட்டுரையில் பகுத்தறிவுச் சிந்தனைகள் சுடர்விடுவதைக் காண முடிகிறது. மேலை நாடுகளில் அறிவியல் வளர்ச்சி பெற்று விளங்குவதையும், இங்கே புராணக் கதைகள் மட்டுமே பொலிவு பெற்றிருப்பதையும், தன் அழகு தமிழில் அவர் எடுத்துக் காட்டுகின்றார்.

‘மற்ற நாடுகளிலெல்லாம் அறிவியல் ஆராய்ச்சியின் பலனாக, பயிர்த் தொழில் பல வகைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது. உழவுக்கு ஓர் இயந்திரம், அறுவடைக்கு மற்றொன்று, விதைக்க விமானம், மேகத்தைக் குளிர்ச்சி செய்து மழை பெய்ய வைக்க ஒரு முறை, மழை அதிகமானால், கார்முகிலைக் கலைக்க ஒரு வழி! இவ்வளவும் கண்டுபிடிக்கப்பட்டு, நடைமுறையில் கொண்டு வரப்பட்டுள்ளன மேல் நாட்டில்.

நூற்றாண்டு காணும் பேராசிரியர்!

இங்கேயோ இடி ஒலி கேட்டால் ‘அர்ச்சுனா, அர்ச்சுனா’ என்று அழைப்பதும், மழை பெய்யாவிடில் கொடும்பாவி கட்டி இழுப்பதும், நாட்டிலே விளைச்சல் ஏற்பட என்று யாகம் செய்வதும், விதைக்க நாள் பார்க்க அய்யரை அழைப்பதும், அறுவடைக்கு முன் சகுனம் பார்ப்பதும் நடைபெற்று வருகின்றன.’

இந்தப் பகுத்தறிவுச் சிந்தனை ஏதோ இளமையின் எழுச்சி முழக்கமன்று. அவருடைய 96-வது வயதிலும் அவர் ஒரு பகுத்தறிவாளராகவே இருந்தார்.

சின்னச் சின்னப் பொறுப்புகளில் தொடங்கி, தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பொறுப்பு வரையில் உயர்ந்தபோதும் அந்த எளிமையும், அமைதியும் அவரை விட்டு ஒருநாளும் அகன்றதில்லை. கொள்கையைப் பற்றிக்கொண்டு, கழகத்தில் கலந்து நின்று, மக்களுக்குத் தொண்டாற்றுவது என்பதே அவருடைய அரசியல் பாதை!

மாணவப் பருவத் திராவிடத் தீ
மறையும் வரையில் உடனிருந்து!
ஆணவமில்லா அறிவும் செறிவும்
அனைவர்க்கும் அவர் தந்த பாடமானது!
இன்று பேராசிரியர் நூற்றாண்டு தொடக்கம்
என்றும் அவர்புகழ் இம்மண்ணில் மணக்கும்!