Published:Updated:

`ஸ்டாலினுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி இது!'- கோவையில் விவரித்த எடப்பாடி பழனிசாமி

இடைத்தேர்தல் வெற்றி மூலம், ஸ்டாலினுக்கு பொதுமக்கள் எச்சரிக்கை மணி எழுப்பியிருக்கின்றனர் என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ``இடைத்தேர்தல் வெற்றி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. ஏற்கெனவே நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க பொய்யான வாக்குறுதியை கொடுத்து வெற்றி பெற்றது. ஆனால், இப்போது மக்களுக்கு உண்மை தெரிந்துவிட்டதால், அ.தி.மு.க கூட்டணியை வெற்றிபெற வைத்திருக்கின்றனர்.

அ.தி.மு.க ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். தொடர் செயல்பாடுகளால் பல விருதுகளையும் பெற்றிருக்கிறோம். சட்டம் - ஒழுங்கில் சிறந்த மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. தொழில் செய்வதற்கு உகந்த மாநிலமாகவும் தமிழகம் இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சமீபத்தில் நடந்த தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 3 லட்சத்து 431 கோடி ரூபாய்க்கு தொழில் தொடங்க தொழிலதிபர்கள் முன்வந்துள்ளனர். இந்தியாவிலேயே, தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

`டெங்கு' பயத்தில் கடலூர்... உச்சத்தில் சுகாதார சீர்கேடு!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், ஸ்டாலின் அளித்த பொய்யான வாக்குறுதிகள் மக்களிடம் எடுபடவில்லை. இந்த வெற்றி மூலம், ஸ்டாலினுக்கு மக்கள், பொய் வாக்குறுதி கொடுக்கக் கூடாது என எச்சரிக்கை மணி எழுப்பியிருக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையமே முடிவு செய்யும். உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும். டெங்குவை தடுப்பதற்கான முயற்சிகளைப் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும். இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வை வெற்றி பெறச் செய்த மக்களுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார் உற்சாகத்துடன்.