Published:Updated:

தமிழ்நாடு நம்பர் 1 சாதித்தது எப்படி? விளக்கும் எடப்பாடி!

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

சிறப்புப் பேட்டி

தமிழ்நாடு நம்பர் 1 சாதித்தது எப்படி? விளக்கும் எடப்பாடி!

சிறப்புப் பேட்டி

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி
தொழில் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருக்கிறது நம் தமிழகம். தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசாங்கம் வேகமாக எடுத்து வருகிறது. தமிழகத் தொழில் வளர்ச்சி குறித்து, மேலும் அறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தோம். அமைச்சர்களையும் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் சந்தித்தபின் நம்மை அழைத்த முதல்வர், உற்சாகமாகப் பேசியபடி நமக்கு சிறப்புப் பேட்டி ஒன்றைத் தந்தார். இதோ, அந்தப் பேட்டி...

கொரோனா தொற்றுப் பரவல் மற்றும் தொடர்ச்சியான ஊரடங்கு சூழலிலும் நிறைய தொழில் முதலீடுகளைத் தமிழக அரசு ஈர்த்தது எப்படி?

‘‘கொரோனா கால சவாலை எதிர்கொண்டு செயல்படுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியது, தொழிற்சாலைகளைத் தகுந்த பாதுகாப்புடன் செயல்பட வழிவகை செய்தது, அவசியமான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளைத் தமிழ்நாட்டிலேயே தயாரிக்க புதிய சலுகைகள் எனத் தொழில்துறை வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், தொழில்துறையினர் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மேலும், கடந்த ஆண்டுகளில் அரசு தொலைநோக்குடன் செயல்படுத்திய பல்வேறு திட்டங்கள் இந்தப் பேரிடர் காலத்தில் நமக்கு கைகொடுத்துள்ளன. தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் (Guidence) மற்றும் சிப்காட் மூலம் மேற்கொள்ளப்பட்ட பல சிறப்பான சீர்திருத்த நடவடிக்கைகள் எனப் பலவும் இதில் அடங்கும். குறிப்பாக, கடந்த ஆண்டு எனது தலைமையிலான உயர்மட்டக் குழு, அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்குச் சென்றபோது பல தொழில் முனைவோர்களைத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்திருந்தேன். அவர்களில் பலரும், வெளிநாடு வாழ் தமிழர்களும் தமிழகத்தில் பல முதலீடுகளைச் செய்து வருகின்றனர்.

ஒற்றைச் சாளர முறையில் வழங்கப்படும் அனுமதிகளை எனது தலைமையில் அமைக்கப் பட்ட உயர்மட்ட குழு மூலம் நானே நேரடியாக ஆய்வு செய்கிறேன். அனுமதிகள் வழங்குவதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அவற்றுக்கு உடனுக்குடன் உயர்மட்ட குழு கூட்டத்திலேயே தீர்வு காணப்பட்டு அனுமதிகள் வழங்கப்படு கின்றன. பிரச்னை வந்தால் நானே தலையிட்டு விரைவாகத் தீர்த்து வைப்பேன் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்கள் இடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவைதான் ஊரடங்கு காலத்திலும் நிறைய தொழில் முதலீடுகளைத் தமிழ்நாடு ஈர்ப்பதற்கு முக்கிய காரணங்கள்.’’

2020-ல் இதுவரை எத்தனை ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆகியுள்ளன; எப்போது செயல்பாட்டுக்கு வரும்?

‘‘இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையில் 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பம் இடப்பட்டு அதன் மூலம் 31,464 கோடி ரூபாய் முதலீடும், சுமார் 69,712 புதிய வேலை வாய்ப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.இவை தவிர, 2015 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது ஒப்பந்தம் கையொப்பமான அல் குப்லா அல் வாட்யா (AL QEBLA AL WATYA) என்ற குவைத் நாட்டு நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.49,000 கோடி முதலீட்டில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை தொடங்குவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்த முதலீட்டின் வாயிலாக 5,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும் ஒரு லட்சம் நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகும். பொதுவாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டதிலிருந்து பொருளாதார சூழலைப் பொறுத்து, ஓரிரு ஆண்டுகளுக்குள் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளைச் செய்யும். குறுகிய காலத்திலேயே தங்கள் கட்டுமானப் பணிகளை இந்த நிறுவனங்கள் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் எந்த மாதிரியான தொழில்களுக்கு முதலீடுகள் வந்துள்ளன, இந்தத் தொழிற்சாலைகள் எந்தெந்த மாவட்டங்களில் அமைய உள்ளன?

‘‘குறிப்பாக, மின்னணு சாதனங்கள், வாகன உற்பத்தி, உணவுப் பதப்படுத்துதல், இயந்திரங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகள், கெமிக்கல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் போன்ற துறைகளில் பல முதலீடுகள் வரப்பெற்றுள்ளன.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்தத் திட்டங்கள், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக அமைய உள்ளன. தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை, திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் திட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டம் மற்றும் உணவுப் பொருள்கள் உற்பத்தித் திட்டம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டம் எனப் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.’’

அசெம்ப்ளிங் துறை மூலமாகத் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். தமிழக அரசு இதில் எந்தளவுக்கு கவனம் செலுத்துகிறது?

‘‘ஏற்கெனவே தமிழ்நாட்டில், குறிப்பாக மின்னணுப் பொருள்கள் உற்பத்தியில் உதிரிபாகங்கள் வெளியிலிருந்து தருவித்து பொருள்களைத் தயாரிக்கக்கூடிய உதிரி பாகங்களை ஒருங்கிணைத்தல் முறை செயல்பாட்டில் உள்ளது. சொல்லப்போனால், வாகன உற்பத்தித் துறையில் பி.எம்.டபிள்யூ போன்ற நிறுவனங்கள், பல ஆண்டுகளாக இந்த முறையைச் செயல்படுத்தி வருகின்றன. எனவே, இவ்வகை அசெம்ப்ளிங் துறையிலும் தமிழ்நாடு முன்னோடி என்றே சொல்லலாம்.

தற்போது தைவான், கொரியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து மின்னணுப் பொருள்களின் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்கு அசெம்ப்ளிங் செய்யப்படுகிறது. தற்போதைய நிலையில், இது வரவேற்கத்தக்க ஒரு முதலீடாக இருந்தாலும் அனைத்து உதிரி பாகங்களையும் தமிழ் நாட்டிலேயே உற்பத்தி செய்து மின்னணு பொருள்களை முழுமையாகத் தமிழ்நாட்டில் தயாரிக்க வேண்டும் என்பதே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நோக்கம். ‘Make in Tamilnadu Make for the World’ என்ற சூழல் உருவாவதற்கான அடித்தளமும் இதுதான்.’’

ஆப்பிள் நிறுவனம் இங்கு உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. இதுபோல வேறு என்னென்ன நிறுவனங்கள் வரலாம்?

‘‘ஆப்பிள் நிறுவனத்தின் பொருள்களை ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தற்போது தமது உற்பத்தியைத் தொடங்கிவிட்டன. பல்வேறு காரணங்களால் மூடப்பட்டிருந்த நோக்கியா தொழிற்சாலைக்கு அரசின் முயற்சியால் இதே காலகட்டத்தில் புத்துயிர் ஊட்டப்பட்டது. நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த ரெனோ நிசான் வரி பிரச்னையில் எட்டப்பட்ட சுமுக தீர்வு எனப் பல நல்ல நிகழ்வுகளும் நடந்துள்ளன.

இது போன்ற சிறப்பான தொழில் சூழலால் சால்காம்ப், ஃபாக்ஸ்கான், ஃபிளக்ஸ்ட்ரானிஸ் போன்ற மிகப்பெரிய மின்னணு உற்பத்தி நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளன. வின்டெக், டெல்டா, BYD போன்ற நிறுவனங்களும் தமது திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த உள்ளன. இது மட்டுமன்றி ஒருங்கிணைந்த உற்பத்தி திட்டங்கள் மற்றும் வளர்ந்து வரும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி தொடர்புடைய உற்பத்தித் திட்டங்களில் முதலீடு செய்திடவும் பல நிறுவனங்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன.’’

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கொரோனா சூழலில் சிறு, குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதிப்புகளிலிருந்து மீண்டு வர அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் என்ன?

‘‘இந்த நிறுவனங்களை, பாதிப்பிலிருந்து விரைவில் மீட்டெடுக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கொரோனா நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தை (Covid Relief and Upliftment Scheme - CORUS) செயல்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுவரை இத்திட்டத்தில் 993 பயனாளிகளுக்கு ரூ.134 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அவசரகால கடன் உதவித் திட்டத்தின் (Emergency Credit Line Gurantee Scheme - ECLGS) மூலம் இதுவரை தமிழ்நாட்டில் ரூ.7,518.41 கோடி பிணையில்லாக் கடன் 2,40,045 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிறைவடையும் தருவாயில் இருந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மத்திய அரசின் துணை கடன் திட்டத்தின் கீழ் மாவட்ட தொழில் மையம் மற்றும் சிட்கோவால் 938 நிறுவனங் களுக்கு ரூ.212.76 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

  • சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள முதலீட்டு மானியம் உள்ளிட்ட பல்வேறு மானியத் திட்டங்களின்கீழ் ரூ.112 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

  • சொத்து வகை மற்றும் மின் கட்டணம் (Deferral of Property Tax & EB Charges) செலுத்த மே 22 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவில் நம்பர் 1 என்ற இடத்தை தமிழ்நாடு பிடிக்க எந்த அளவுக்கு வாய்ப்புள்ளது?

‘‘இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.18,236 கோடி முதலீடுகளை ஈர்த்து இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக புராஜெக்ட்ஸ் டுடே என்ற ஆய்வு நிறுவனம் சொல்லியிருக்கிறது. தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் நிலைக்குழு ஏற்படுத்தப்பட்டு தொழில்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் எனப் பல துறைகளை ஒருங்கிணைத்து, முதலீடுகளை ஈர்க்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பல முதலீட்டாளர்களையும் CII, FICCI, MSME தொழில் அமைப்புகள் மற்றும் அயல்நாட்டு தூதர்கள் ஆகியோரை நான் சந்தித்து அவர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெற்று அரசு அலுவலர்களுக்கு அவ்வப்போது அறிவுரைகளை வழங்கி வருகிறேன். இந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசின் தொழில் துறை நமது மாநிலத்தில் நன்மதிப்பை (Brand) மேம்படுத்திட பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

பல அரசாங்கத் துறைகளிடமிருந்து தொழில் நிறுவனங்கள் பெற்றுவரும் 190 வகையான சேவைகளையும் அனுமதிகளையும் எளிதாக விரைந்து பெற்றிடும் வகையில் ஒரு விரிவான கட்டமைப்பாக இணையவழி ஒற்றைச் சாளர முறை மேம்படுத்தப்பட்டு வருகிறது.

எத்தனை பேரிடர்கள் வந்தாலும், அவற்றை திறம்படச் சமாளிக்கும் நிர்வாகத்திறனும் சிறப்பான உள்கட்டமைப்பும் தமிழ்நாட்டில் உள்ளதை உலக முதலீட்டாளர்களுக்கு இந்தக் காலகட்டம் உணர்த்தியுள்ளது. எனவே, அரசின் சிறப்பான செயல்பாடுகளால் முதலீடு களை ஈர்ப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.’’

ராமநாதபுரம், சேலம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அது எப்போது செயல்பாட்டுக்கு வரும்?

‘‘இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதில் நாங்கள் முழு முனைப்புடன் கவனம் செலுத்தி வருகிறோம். இந்தத் திட்டங்களின் அபிவிருத்திக்காக உரிய இடங்களைக் கண்டறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விருதுநகர் மற்றும் சேலம் மாவட்டங்களில் மெகா ஜவுளி பூங்கா அமைத்திட, மத்திய ஜவுளித்துறைக்கு கருத்துருக்கள் விரைவில் அனுப்பப்பட உள்ளன. ரூ.150 கோடி முதலீட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 தொழிற்சாலைகள் மூலம் சுமார் 6,000 வேலைவாய்ப்புகளை அளித்திடும் வகையில், ஒரு ஜவுளிப் பூங்கா நிறுவப்பட உள்ளது. இதற்கான கருத்துரு மத்திய அரசின் சுற்றுப்புறச் சூழல் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி எதிர்பார்க்கப் படுகிறது.’’

தமிழகத்தில் பாதுகாப்புத் தொழில் பெருந்தடம் (Defence Industrial Corridar) ஏற்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன?

‘‘தமிழ்நாட்டில் பாதுகாப்புத் தொழில் பெருந்தடத்தை உருவாக்க நாங்கள் மேற்கொண்ட பெரும் முயற்சியின் காரணமாக வானூர்தி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் திட்டங்கள் இங்கு அமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை ரூ.3,123 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையொப்பம் இடப்பட்டுள்ளன. வானூர்தி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி செய்திடும் நிறுவனங்களுக்கு திறன் மிகுந்த பணியாளர்கள் வழங்கிடும் வகையில் எல்.எம்.டபிள்யூ (LMW) மற்றும் போயிங் (Boing) நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் ஒரு திறன் மேம்பாட்டு மையம் கோயம்புத்தூரில் அமைக்கப்பட்டுள்ளது. எல் & டி மற்றும் பிரான்ஸ் நாட்டின் எம்.பி.டி.ஏ (MBDA) நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான எல் & டி - எம்.பி.டி.ஏ மிசைல் சிஸ்டம் (L&T - MBDA Missile Systems) கோயம்புத்தூரில் ஒரு ஏவுகணை தயாரிப்பு நிறுவனத்தை அமைத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பிரான்ஸ் நாட்டின் அல்ட்ரான் (Altoron), இங்கிலாந்து நாட்டின் ஈசாட் (Easat Radar Aerospace Engineers Ltd), எல்.எம்.டபிள்யூ, டி.வி.எஸ், சூப்பர் ஆட்டோ, ஃபோர்ஜ், மெட்டாலிக் பெல்லோஸ், ரானே, டேட்டா பேட்டர்ன்ஸ், ரூட்ஸ் போன்ற பல நிறுவனங்கள் பாதுகாப்புத்துறையில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வானூர்தித் தொழில் பூங்காவில் ரூ.250 கோடி ரூபாய் முதலீட்டில் ‘Aerohub’ என்ற நவீன உயர்நுட்பத் தொழில் மையம் அமைக்க 27.7.2020 அன்று நான் அடிக்கல் நாட்டியுள்ளேன்.’’

இதுவரை நடைபெற்றுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன?

‘‘கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் ரூ.3,00,501 கோடி முதலீடுகளுடன் 10,50,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு துறைகளில் கையொப்ப மிடப்பட்டன. தற்போது வரை 24,492 கோடி ரூபாய் முதலீட்டில் 1,10,844 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி அளித்துள்ள 81 திட்டங்கள் தனது வணிக உற்பத்தியை ஏற்கெனவே தொடங்கிவிட்டன. மேலும், ரூ.2,20,623 கோடி முதலீட்டில் 5,33,595 நபர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி அளித்துள்ள 191 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன.

2015-ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் ரூ.2,42,160 கோடி ரூபாய் முதலீட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பம் இடப்பட்டன. இவற்றில் 71 திட்டங்களில் ரூ.73,711 கோடி ரூபாய் முதலீடும், 1,86,838 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதியளிக்கப் பட்டுள்ளன.’’

ஊரடங்கு காரணமாகப் பலரும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் நிலையில், சிறுநகரங்களில் மின்சாரமும் இணைய வசதியும் முழுநேரமும் கிடைப்பதில் சிக்கல் உள்ளதே!

‘‘மின்சாரத்தைப் பொறுத்தவகையில் தமிழ் நாடு ஒரு மின் மிகை மாநிலம். அதேபோல, இணையதள வசதிகளும் தமிழ்நாட்டில் பரவலாக உள்ளன. ஆதலால், ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் நடைமுறையைப் பின்பற்றுவதில் எவ்வித சிரமமும் நம் மாநிலத்தில் இல்லை.

தென்காசி மாவட்டத்தில் ரூ.1,500 கோடி முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலை வாய்ப்புடன் ஒரு தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தை, ஜோஹோ (ZOHO) நிறுவனம் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.’’

தமிழக்கத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார். அதற்கு தங்கள் பதில் என்ன?

‘‘பொதுவாக, முதலீட்டாளர்கள் மாநாடுகளில் கையொப்பமிடும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 50 - 60% அளவுக்கு செயலாக்கத் துக்கு வந்தாலே அந்த மாநாடு ஒரு பெரிய வெற்றிகரமான மாநாடு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பம் இடப்பட்டு 2, 3 ஆண்டுகள் வரையில் இந்த முதலீடுகளைச் செய்ய கால அவகாசம் உள்ளது. நான் முன்பே கூறியதுபோல, இந்த மாநாடுகளில் வந்த திட்டங்களைப் பற்றிய விவரங்கள் அரசால் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

அரசால் சட்டப்பேரவையிலும் தெளிவாக ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், முன்பு வெளிநாடுகளில் உற்பத்தியாகி நம் கைகளுக்கு வரப்பெற்ற பல பொருள்கள் இன்று ‘Made in India manufactured at Sriperumputhur / Tirupur’ போன்ற முத்திரையோடு வருகின்றன.

இவை அனைத்துக்கும் மேலாக தமிழ்நாடு எங்கும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிறுவனங்களும் அதில் வேலைவாய்ப்பைப் பெற்று பயனடைந்த லட்சக்கணக்கான குடும்பங்களும் அரசின் முயற்சிகளை வாழ்த்தி வருவதுமே இந்த மாநாடுகளின் வெற்றிக்கு ஆதாரமாக உள்ளன.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி தொடர்பான எங்கள் அறிவிப்புகள் வெற்று அறிவிப்புகள் அல்ல; வெற்றி அறிவிப்புகள்’’ என கடைசியில் பஞ்ச் ஸ்டேட்மென்ட்டுடன் பேட்டியை முடித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism