அரசியல்
அலசல்
Published:Updated:

தனியார்மயமாகும்... கிராமங்கள் கைவிடப்படும்... மின்வாரியச் சொத்துகள் பறிபோகும்...

 ‘ஷாக்’ கொடுக்கும் மின் மசோதா!
பிரீமியம் ஸ்டோரி
News
‘ஷாக்’ கொடுக்கும் மின் மசோதா!

- ‘ஷாக்’ கொடுக்கும் மின் மசோதா!

மின்சாரச் சட்டம் 2003-ல் பல முக் கியத் திருத்தங்களைச் செய்து, புதிய திருத்தச் சட்ட வரைவைக் கடந்த 2020-ம் ஆண்டு, ஏப்ரல் 17-ம் தேதி மக்களின் கருத்தறிய மத்திய அரசு வெளியிட்டது. ஆனால், கொரோனா பேரிடரில் அது கவனம் பெறவில்லை. இந்த நிலையில், நடைபெற்று முடிந்த மழைக்காலக் கூட்டத் தொடரில் மின்சாரத் திருத்தச் சட்ட மசோதாவை மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மக்களவையில் தாக்கல் செய்த போது, காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து சபையை முடக் கின. அதனால், உடனடியாக மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைத்தார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா!

அரசுக்குப் போட்டியாகத் தனியார்!

இந்தத் திருத்தப்பட்ட மசோதாவில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பது குறித்து மின்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “புதிய சட்டம் அமலானால், மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப் படும். மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத் துக்குப் போட்டியாக, மின் விநியோகத்தில் தனியார் நிறுவனங்களும் நேரடியாக ஈடுபட லாம் எனக் கூறப்பட்டிருக்கிறது. தனியார் நிறுவனங்கள் மாநில அரசிடம் விண்ணப்பித்தால், `மறுக்கிறோம்’ அல்லது `ஏற்கிறோம்’ என்பதில் ஒன்றைத்தான் மாநில அரசுகள் சொல்ல வேண்டுமாம். மறுப்பு தெரிவித்தாலும்கூட மத்திய அரசு தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனியாருக்கு அனுமதியளிக்கவும் புதிய சட்டத்தில் இடமுண்டு.

மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத் திடமே ஏகபோக உரிமை செல்வதால், அது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயலாக அமையும். மின்சாரத்தை அண்டை மாநிலங்கள், நாடுகளுக்கு விற்பனை செய்துகொள்ளவும் இந்தச் சட்டத்தில் அனுமதியளிக்கப் பட்டிருக்கிறது’’ என்கின்றனர்.

தனியார்மயமாகும்... கிராமங்கள் கைவிடப்படும்... மின்வாரியச் சொத்துகள் பறிபோகும்...

ஒரு யூனிட் மின்சாரம் 12 ரூபாய்?

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சி.ஐ.டி.யூ) மாநிலத் தலைவர் ஜெய்சங்கரிடம் பேசினோம், “2003-ல் பா.ஜ.க ஆட்சியில் இருந்த போதே இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தனர். அப்போது, அந்த அளவுக்கு முதலீடு செய்ய எந் தத் தனியாரும் முன்வராததால் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அதே சட்டத்தில் திருத்தங்களைச் செய்து அமல்படுத்தப் பார்க்கிறார்கள். இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால், மின் சார வாரியம் தனியார்மயமாக்கப்படும். மானிய விலை மின்சாரம் முழுமையாக ரத்தாகிவிடும். ஒரு யூனிட் மின்சார உற்பத்திக்கு அதிகபட்சமாக 6 ரூபாய் 50 பைசா செலவாகும். அதை விற்பனை செய்யும்போது ஒரு யூனிட்டுக்கு 12 ரூபாய் வரை விலை உயர்த்தி விற்பனை செய்வார்கள். 133 கோடி மக்கள்தொகை யில், 120 கோடிப் பேர் நடுத்தர, ஏழை, எளிய மக்கள்தான். அவர்களால் எப்படி அவ்வளவு விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க முடியும்?

கிராமங்கள் கைவிடப்படும்..!

இந்தச் சட்டத்தின்படி, மின் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனமே அதை எங்கு விற்பனை செய்யலாம் என்பதைத் தேர்வுசெய்து கொள்ளலாம் என்கிற ஷரத்தும் இருக்கிறது. தனியார் யாரைத் தேர்வுசெய்யும்... கிராமங்களில் இவ்வளவு விலை கொடுத்து யாரும் வாங்க மாட்டார்கள் என்பதால், பெருநகரங்களில் மட்டும்தான் விற்பனை செய்வார்கள். இதனால், கிராமங்கள், விவசாயப் பகுதிகளுக்கு மின் விநியோகத்தை அரசே மேற்கொள்ள வேண்டி யிருக்கும். லாபம் தரக்கூடிய பகுதிகள் தனியாருக் குச் சென்றுவிட்டால், Cross subsidy மூலம் பிற பிரிவினருக்குச் சலுகைகளை அரசால் வழங்க இயலாது. இது மக்களிடம் எதிர்ப்பை உண்டாக் கும். நிலக்கரி விலை உயரும்போதெல்லாம், தனியார் நிறுவனங்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு, ஒவ்வொரு வருடமும் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

மின்வாரியச் சொத்துகள் பறிபோகும்!

இவை மட்டுமின்றி, மின்சார வாரியத்தின் சொத்துகளும் முழுமையாகப் பிற்காலத்தில் தனியாருக்குச் சென்றுவிடும். டிரான்ஸ் ஃபார்மர்கள், சப்-ஸ்டேஷன்கள், இணைப்பு கேபிள்கள், மின் கோபுரங்கள் எனத் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ஒரு லட்சத்து 53,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. முதலில், தொகையைப் பெற்றுக்கொண்டு தனியாரைப் பயன்படுத்த அனுமதி கொடுக்கும் மத்திய அரசு. கொஞ்ச காலத்தில், தனியாரிடமே சொத்துகள் முழுமையும் சென்றுவிடும் நிலைகூட உருவாகும். பெரு முதலாளிகள் தங்கள் சம்பாத்தியத்தை எங்கு செலவழிப்பது என்று தெரியாமல் பொதுத்துறைகளில் முதலீடு செய்கின்றனர். அதற்கு ஒன்றிய அரசும் துணைபோகிறது. இந்தப் போக்கை அனைத்துத் தொழிற்சங்கங் களும் வன்மையாகக் கண்டிக்கிறோம். வலுக்கட்டாயமாக அமல்படுத்தப்பட் டால் நாடு முழுவதும் மக்கள் புரட்சி வெடிக்கும்” என்று முடித்தார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

“ஊழல் ஒழியும்!”

தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் இதுபற்றிக் கேட்டோம், “மற்ற துறை களைவிட, மின் துறையில் நடைபெறும் முறைகேடுகள், ஊழல்கள் மிக மிக அதிகம். மின்சாரம் உற்பத்தியான பிறகு, பகிர்மானம் மற்றும் விநியோகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடக்கின்றன. இதைச் சரிசெய்வதற்கான சீர்திருத்தமே இந்தப் புதிய சட்டத் திருத்த மசோதா. அரசு மின் பகிர்மான நிறுவனங்கள் நஷ்டத்திலிருந்து விடுபட்டு, லாபத்தில் இயங்கும். தனியார் பங்களிப்பு அதிகரிப்பதால் ஆரோக்கியமான போட்டி நிலவும். அதனால், தரமான, சீரான மின்சாரம் தங்கு தடையின்றிக் கிடைக்கும். மின் கட்டணம் குறையும், மின் திருட்டு தடுக்கப்படும். டிஜிட்டல் மீட்டர் அமல்படுத்தப்படுவதால், உட்கார்ந்த இடத்திலிருந்தே மீட்டர் கணக்கைத் தெரிந்துகொள்ளலாம். இலவச மின்சாரம் என்ற பெயரில் நடைபெற்றுவருகிற பித்தலாட்டங்கள் இந்தச் சட்டத்தின் மூலம் முடிவுக்கு வரும். எனினும், தகுதியான ஏழை விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடரும்” என்றார்.

எதிர்ப்புகள் அதிகமாகி, வேளாண் சட்டத் தைத் திரும்பப் பெற்றது போன்ற நிலை, இந்த மின்சாரத் திருத்தச் சட்டத்துக்கும் வராமல் இருக்க வேண்டுமென்றால், மத்திய அரசு அனைத்து மாநிலங்களோடும் கலந்தாலோசிக்க வேண்டும். இல்லையென்றால் குழப்பங்களே மிஞ்சும்!