Published:Updated:

`மணல் திருட்டு நடப்பதாக எம்.பி மனு கொடுத்தால், அமைச்சர் கோபப்படுகிறார்!'- தங்கமணியை சாடும் ஈஸ்வரன்

ர.ரகுபதி

'காவிரி ஆற்றில், அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமாக மணல் எடுக்கப்படுவதாகவும் அதைத் தடுத்து நிறுத்த அரசு முயற்சி செய்ய வேண்டும்' எனவும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தினார்.

E.R.Eswaran
E.R.Eswaran

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், நாமக்கல் சட்டமன்றத் தொகுதி வளர்ச்சிப் பணிக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்தில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு பேசினர்.

Namakkal MP Chinraj
Namakkal MP Chinraj
ர.ரகுபதி

இக்கூட்டத்தில், நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்படவேண்டிய வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்கு என வளர்ச்சிப் பணிக்குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து, நாமக்கல் எம்.பி. ஏ.கே.பி.சின்ராஜ் தேர்தலின்போது சொன்னதுபோல், தன்னுடைய சம்பளம் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை கொங்குநாடு மக்கள் தேசிய அறக்கட்டளைக்கு ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி வழங்கினார்.

அப்போது பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், "லாரி மூலம் மணல் திருட்டு நடைபெறுவதாக அந்தந்தப் பகுதி மக்கள், சின்ராஜ் எம்.பி-யிடம் தொடர்ந்து மனு கொடுக்கின்றனர். அந்தக் கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சரிடம் (தங்கமணி) கூறும்போது கோபப்படுகிறார் என்றால், சாதாரண மக்கள் அமைச்சரிடம் கூறமுடியுமா? அதைச் சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரையும் குறைகூறும் எண்ணம் எங்களுக்கு இல்லை. காவிரி ஆற்று மணலை மாட்டு வண்டியில் எடுக்க அனுமதி பெறுகிறார்கள்.

E.R.Eswaran
E.R.Eswaran
ர.ரகுபதி

ஆனால், அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமாக மணல் எடுக்கப்படுகிறது. அதைத் தடுத்து நிறுத்த அரசு முயற்சி செய்ய வேண்டும். நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியின் வளர்ச்சிப் பணிக்காக, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 60 பேர் கொண்ட குழுவை அமைக்கும் பணி நடந்துவருகிறது. கோவை, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும். கொங்கு மாவட்ட அமைச்சர்களும் மக்கள் பிரதிநிதிகளும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, குதர்க்கமாகப் பேசக்கூடாது. தேர்தலில் சொன்னதைச் செய்துள்ளோம். இனியும் செய்வோம். மக்கள் நல திட்டங்களைக் கொண்டுவருவதே எங்களுடைய நோக்கம் " என்று கூறினார்.