சமூகம்
அரசியல்
அலசல்
Published:Updated:

“இருக்கு... ஆனா, இல்லை...” - காலி டப்பா ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ்கள்!

அரசுப்பேருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
அரசுப்பேருந்து

அனைத்துப் பேருந்துகளிலும், ‘ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ்’ கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஆனால், கடந்த 10 வருடங்களாக எந்தப் பேருந்திலும் அவை வைக்கப்படுவதில்லை

`தமிழ்நாட்டுக்கு 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்’ என்றும், `அவற்றில் அவசரகாலத்தில் பயன்படுத்த முதலுதவி கருவிப் பெட்டி கட்டாயம் இடம்பெற்றிருக்கும்’ என்றும் கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில், விதி எண் 110-ன் கீழ் அறிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், ஏற்கெனவே போக்குவரத்துக் கழகம் இயக்கும் பேருந்துகள் பலவற்றில் ‘ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ்கள் எதுவும் இல்லை’ என்றும், `இருந்தாலும், அவை பெரும்பாலும் காலி டப்பாக்களாகவே இருக்கின்றன’ என்றும் புகார்கள் எழுந்திருக்கின்றன.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார் நம்மிடம் கூறுகையில், “மோட்டார் வாகனச் சட்டப்படி அனைத்துப் பேருந்துகளிலும், ‘ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ்’ கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஆனால், கடந்த 10 வருடங்களாக எந்தப் பேருந்திலும் அவை வைக்கப்படுவதில்லை.

“இருக்கு... ஆனா, இல்லை...” - காலி டப்பா ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ்கள்!
“இருக்கு... ஆனா, இல்லை...” - காலி டப்பா ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ்கள்!

புதிய பேருந்துகள் வாங்கும்போது, அவற்றில் ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ்களும், டிஞ்சர், பஞ்சு, கட்டுத்துணி, களிம்பு, வலி-காய்ச்சல் மாத்திரைகளும் இருக்கும். ஆனால், நாளடைவில் அவை காணாமல்போய்விடுகின்றன. ஆனால், பேருந்துகளை எஃப்.சி-க்கு அனுப்பும்போது ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ்கள் இருந்தால்தான் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் உரிமம் பெற முடியும். பேருந்துகளில் புதிதாக ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ் வாங்கத் தனியாக நிதி ஏதும் ஒதுக்கப்படாததால், ஒரே பெட்டியையே அனைத்துப் பேருந்துகளிலும் மாற்றி மாற்றிப் பொருத்தி, உரிமத்தைப் புதுப்பித்துக்கொள்கிறார்கள்” என்றார்.

சிவசங்கர்
சிவசங்கர்

இது பற்றி அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் சிலரிடம் கேட்டபோது, “ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸுக்குள் வைக்கப்படும் மருந்துப் பொருள்களின் அடக்க விலை மொத்தமே 250 ரூபாய்தான். ஆனால், எந்தப் பேருந்திலும் இவை வைக்கப்படுவதில்லை. சில நாள்களுக்கு முன்பு கோயம்பேடு வந்துகொண்டிருந்த ‘23-சி’ பேருந்தின் டயர் வெடித்ததில் பேருந்திலிருந்த காளிராஜ் என்ற பயணிக்குக் காலில் காயம் ஏற்பட்டது. ஆனால், அந்தப் பேருந்தில் முதலுதவிப் பெட்டியோ, மருந்து உபகரணங்களோ இல்லாததால், அவருக்கு முதலுதவி அளிக்க முடியாமல் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தோம். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இப்படிப் பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. பேருந்துகளின் பராமரிப்பு விஷயத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் காட்டும் அலட்சியத்தால் நாங்கள்தான் பயணிகளின் வசைக்கு ஆளாகிறோம்” என்றனர் ஆதங்கத்துடன்.

ஆறுமுகநயினார்
ஆறுமுகநயினார்

இதுகுறித்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் கேட்டதற்கு, “வழக்கமாக நடைமுறையில் இருக்கும் திட்டம்தான் இது. பேருந்துகளில் ‘ஃபர்ஸ்ட் எய்டு கிட்’ முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்று விசாரிக்கிறேன். ஏதேனும் விடுபடல்கள் ஏற்பட்டிருக்குமானால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார் சுருக்கமாக.

அரசுப் போக்குவரத்துக் கழகமே இப்படி இருந்தால், தனியார் பேருந்துகளை எப்படிக் கேள்வி கேட்க முடியும்?!