Published:Updated:

`சீக்கிரம் சென்றால் 4 பேரைக் காப்பாற்றி விடலாம்!'- கடலோர காவல்படையிடம் கதறிய மீனவர்கள்

கே.குணசீலன்

``இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்களை மீட்பதில் அலட்சியம் காட்டியதாலேயே நான்கு மீனவர்களை மீட்க முடியவில்லை'' என மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மீனவர்கள்
மீனவர்கள் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் அருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் உயிருக்குப் போராடிய நிலையில் தத்தளித்தனர். இதில் ஆறு மீனவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் சோகத்தில் மூழ்கியுள்ளனர் அவர்களின் உறவினர்கள்.

மீட்கபட்ட மீனவர்
மீட்கபட்ட மீனவர்

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய மீனவர்களின் உறவினர்கள், `ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த 2-ம் தேதி புதிய படகு வாங்குவதற்காக பேருந்து மூலம் கடலூருக்குச் சென்றனர். பின்னர் அங்கு போட்டியா எனப்படும் புதிய ரக பைபர் நாட்டுப்படகை வாங்கினர். பிறகு 3-ம் தேதி அந்தப் புதிய படகின் மூலம் கடல் வழியாக ராமேஸ்வரம் திரும்பிக் கொண்டிருந்தனர். படகில் முனியாண்டி, ரஞ்சித்குமார், மதன், இலங்கேஸ்வரன், தரைக்குடியான், காந்தி குமார், செந்தில்குமார், முனீஸ்வரன், உமாகாந்த், காளிதாஸ் உள்ளிட்ட பத்து மீனவர்கள் வந்தனர்.

மல்லிப்பட்டினம் அருகே நடுக்கடலில் வந்துகொண்டிருக்கும்போது பகல் 12 மணியளவில் திடீரென படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 10 மீனவர்களும் கடலுக்குள் விழுந்து உயிருக்குப் போராடினர். செந்தில்குமார், காளிதாஸ் என்ற இரண்டு மீனவர்களும் பிளாஸ்டிக் கேனை பிடித்துக்கொண்டு நடுக்கடலில் மிதந்தனர். இந்த நிலையில், மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது படகில் சென்று மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் நடுக்கடலில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த செந்தில்குமார், காளிதாஸ் ஆகிய இரண்டு மீனவர்களையும் உயிரோடு மீட்டுக் கொண்டுவந்து சேதுபாவாசத்திரம் கடலோர காவல்படை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

மீட்கப்பட்ட மீனவர்
மீட்கப்பட்ட மீனவர்

இதையடுத்து, இன்று மயங்கிய நிலையில் நான்கு மீனவர்களை மீட்டதுடன் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், நான்கு மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்துவருகின்றது” என்றார்.

இது குறித்து மீனவர் வெங்கடேஷ் என்பவர் கூறுகையில் ``புதிய படகை வாங்கிய மகிழ்ச்சியுடன், எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்களுடன் திரும்பிய மீனவர்களுக்கு படகு கவிழ்ந்து பெரும் ஆபத்தில் சிக்குவோம் என கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் நிலை குலைந்துபோன பத்து மீனவர்களும் காலியாக இருந்த டீசல் கேன், காற்று நிரப்பப்பட்ட பலூன், மரக் கம்புகள் கொண்டு உயிருக்குப் போராடிய நிலையில் தத்தளித்துள்ளனர். கடல்தான் எங்களுக்கு தாய் மடி. கடல் அலையின் சத்தம்தான் தாலாட்டு என வாழ்க்கையில் பெரும் பகுதியை கடலிலேயே கழித்ததால் பெரும் பதற்றம் அடையாமல் உயிரை காத்துக்கொள்ள போராடியிருக்கின்றனர்.

மீனவர் வெங்கடேஷ்
மீனவர் வெங்கடேஷ்

இதில் காளிதாஸ், செந்தில்குமார் மட்டும் டீசல் கேனை பிடித்துக்கொண்டு கரை நோக்கி நீந்தத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் செந்தில்குமாரால் கடலை எதிர்கொள்கிற சக்தி இல்லாமல் போகிறது. உடனே சுதாரித்த காளிதாஸ் அவரையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு உடம்பு முழுக்க உள்ள சக்தியை பயன்படுத்தி கரையை நோக்கி நீந்தியுள்ளார். அவர் சென்ற திசையில் படகு ஒன்று மீன் பிடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து சற்றே நிம்மதி அடைந்துள்ளனர் காளிதாஸும், செந்தில்குமாரும்.

அவர்களை படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் மீட்கின்றனர். அப்போது கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இந்திய கடலோர படையின் ரோந்து வாகனம் சென்றுள்ளது. இவர்கள் சட்டையை கழற்றிக்கொண்டு சுற்றியவாறே உதவி என தமிழில் தங்களால் எவ்வளவு சத்தமாக கத்த முடியுமோ அவ்வளவு சத்தமாக கத்தியுள்ளனர். ஆனால், அதைக் கண்டும் காணாமல் கடந்துவிடுகின்றனர் அந்த ரோந்து கப்பலில் சென்ற அலுவலர்கள். பின்னர் அவர்களே ஒரு வழியாக படாதபட்டு கரைக்குத் திரும்பியவுடன் மல்லிப்பட்டினம் துறைமுகத்துக்குச் சென்று கடலோர காவல்படையைச் சேர்ந்த அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

மீனவருக்கு சிகிச்சை
மீனவருக்கு சிகிச்சை

அவர்களிடம் எட்டு பேரும் ஒரே இடத்தில் சோறு தண்ணி இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். உடனே சென்றால் அவர்களை உயிருடன் காப்பாற்றி விடலாம் என காளிதாஸ் கதறியிருக்கிறார். ஆனால் மீனவர்களை மீட்கும் விஷயத்தில் மெத்தனமாகவே செயல்பட்டனர். நேற்று முன்தினம் (4-ம் தேதி) மீட்புப் பணி விஷயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

பின்னர் நேற்று (5-ம் தேதி) விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் இந்திய கடலோர காவல்படையினர் தேடுதல் பணியை தொடங்கினர். கடலோர பாதுகாப்புக் குழுமம் மற்றும் லோக்கல் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள்தான் அதிக சிரத்தை எடுத்து மீனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் மயங்கிய நிலையில் 4 மீனவர்கள் மீட்கப்பட்டு மதியம் மூன்று மணிக்கு மேல் கரைக்கு கொண்டுவரப்பட்டனர். பின்னர் மீட்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிகிச்சையில் மீனவர்கள்
சிகிச்சையில் மீனவர்கள்

ஒரு மீனவரின் நுரையீரலில் அதிக தண்ணீர் புகுந்துள்ளதால் அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் நான்கு மீனவர்களை மீட்டுக் கொண்டு வருகிறார்கள் ஆனால், கரையில் ஒரேயொரு ஆம்புலன்ஸை மட்டும் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் ஒரு மீனவரை காரில் ஏற்றிக்கொண்டு சென்ற அவல நிலை ஏற்பட்டது.

கூடுதலாக ஆம்புலன்ஸைக் கொண்டு வருவதற்குகூட மனம் இல்லாமல் அதிகாரிகள் செயல்படுவது வேதனையைத் தருகிறது. இந்த நிலையில், மீதமுள்ள நான்கு பேரும் கடலுக்குள் என்ன நிலையில் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. துரிதமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தால் எல்லோரையும் இன்றைக்கே மீட்டிருக்கலாம். தமிழக மீனவர்கள் உயிர் என்றால் கிள்ளுக் கீரையாக கருதுகிறது மத்திய அரசு.

மீனவர் காளிதாஸ்
மீனவர் காளிதாஸ்

அதற்கு ஏற்றார்போல் தமிழக அரசும் நம்முடைய மீனவர்களை காப்பாற்ற அவசரம் காட்டாமல், அலட்சியமாக செயல்படுவது தண்ணீரில் தத்தளிக்கும் துயரத்தைவிட கொடுமையானது. அந்த நான்கு மீனவர்களுக்கும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் இந்த இரண்டு அரசுகளும்தான் பொறுப்பு'' என்றனர் கொந்தளிப்புடன்.

இந்திய கடலோர காவல் படையினரிடம் பேசினோம், "நாங்கள் செல்கின்ற கப்பல் கடல் ஆழம் உள்ள பகுதிகளில் மட்டுமே சென்றுதேட முடியும். கரையோரங்களில் சென்று தேட முடியாது. அந்த பணியை தமிழக கடலோர காவல் படையை சேர்ந்தவர்கள் செய்கிறார்கள். முதலில் மீண்டு வந்த இரண்டு மீனவர்கள் சொன்ன தகவலின் அடிப்படையில் அவர்கள் சொன்ன பகுதிகளில் தேடினோம். இரவு நேரத்தில் தேட முடியாது என்பதால் பகலில் மட்டுமே ஒவ்வொரு நிமிடத்தையும் தங்க நேரமாக கருதி தேடியதில் நான்கு பேரை மீட்டிருக்கிறோம். தமிழக கடலோர காவல் படைக்கும் தேவையான உதவிகளை செய்து தருகிறோம். மீட்பு பணியில் மெத்தனம் காட்டுவது என்பது தவறான தகவல்" என்று முடித்துக்கொண்டனர்.