Published:Updated:

சட்டசபையில் கருணாநிதி படம்: `அப்பாவுக்கு பிடிச்ச விஷயம்’ ; ஸ்டாலின் சொன்னதென்ன?’ - ஓவியர் பகிர்வு

கலைஞர் கருணாநிதியின் படம்
கலைஞர் கருணாநிதியின் படம்

தமிழக சட்டப்பேரவையில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் படத்தை வரைந்தது யார்? ஓவியத்தில் உள்ள விஷயங்கள் பற்றி ஸ்டாலின் கூறியது என்ன? போன்றத் தகவல்களை தருகிறார் அரசு ஆர்ட்ஸ் கோபி.

1957-ம் ஆண்டு தொடங்கி 2016 வரை கிட்டத்தட்ட 60 ஆண்டுகள், பல்வேறு பொறுப்புக்களை ஏற்று சட்டமன்றத்தில் ஒலித்திருக்கிறது கருணாநிதியின் குரல். நீண்டகாலம் அவை நடவடிக்கையில் ஈடுபட்ட மூத்த உறுப்பினர், தமிழகத்தின் பெருந்தலைவர்களோடு அலுவலாற்றியவர், அதிக நாள்கள் முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர்.. இப்படி நூற்றாண்டைத் தொட்ட தமிழக சட்டமன்றத்தின் வரலாற்றில் முக்கிய தலைவரான கருணாநிதியின் படம், நேற்று ( ஆகஸ்ட் 2,2021) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் திறந்து வைக்கப்பட்டது.

கலைஞர் கருணாநிதியின் படத்தை திறந்து வைக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
கலைஞர் கருணாநிதியின் படத்தை திறந்து வைக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

15 அரசியல் தலைவர்களின், ஓவியப் படத்துக்கு மத்தியில் 16-வதாக இடம்பெற்றுள்ள கருணாநிதியின் ஓவியத்தை வரைந்தது யார் என்ற தெரிந்து கொள்ள விரும்பினோம். அந்தத் தேடல் சென்று முடிந்த இடம், அரசு ஆர்ட்ஸ் நிறுவனம். அந்நிறுவனத்தின் சார்பாக, கோபி நம்மிடம் பேசினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா சுவாரஸ்யங்கள்!

``சட்டமன்றத்தில் நீங்கள் வரைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஓவியம் இடம் பெற்றிருக்கிறது. எப்படி உணர்கிறீர்கள்?”

”இந்த ஓவியம் எங்கள் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடே எங்கள் ஓவியத்தை பார்த்து ரசிக்கிறது என்கிறதுபோது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் வரைந்த கலைஞரின் ஓவியம், சட்டமன்ற வரலாற்றில் பதிவாகியிருப்பது எங்களுக்குக் கிடைத்தப் பெருமை!”

``இப்படி ஒரு ஓவியம் வரைய வேண்டும் என எப்போது உங்களிடம் கூறினார்கள்? வரைந்து முடிக்க எத்தனை நாள்கள் எடுத்துக் கொண்டீர்கள்?”

”இந்த ஓவியம் ஆயில் கேன்வாஸ் முறையில் வரையப்பட்டிருக்கிறது. பொதுவாக இந்த முறை ஓவியங்கள் வரைந்து முடிக்க 30 நாள்களுக்கும் அதிகமாக தேவைப்படும். கடந்த மாதம்தான் ஓவியம் வரையும் பணியை எங்களுக்கு கொடுத்தார்கள். குறுகிய காலம்தான் இருந்தது. வரைந்து, மெருகேற்ற கிட்டத்தட்ட 30 நாள்கள் எடுத்துக் கொண்டோம்.”

சட்டப்பேரவையில் திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் படம்
சட்டப்பேரவையில் திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் படம்

``ஓவியம் எப்படி இருக்க வேண்டும் என்ற குறிப்பை உங்களுக்கு கொடுத்தது யார்?”

”ஓவியம் எப்படி இருக்க வேண்டும் என்ற முழு எண்ணமும் முதலமைச்சர் ஸ்டாலினுடையது. வாழ்நாள் முழுவதும் எழுதிக் கொண்டே இருந்தவர் கலைஞர் கருணாநிதி. அவர் அமர்ந்த நிலையில், எழுதிக் கொண்டிருப்பது போல், ஓவியம் வரையலாம் என்று முதலில் நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால், ’சட்டமன்றத்தில் இருக்கும் மற்ற ஓவியங்களில் தலைவர்கள் நின்றபடி இருக்கின்றனர். அதனால் தலைவரும் நின்றபடி இருந்தால் நன்றாக இருக்கும்’ என்றார் முதல்வர். அதன்படியே கலைஞர் கருணாநிதி நிற்கும்படி ஓவியம் வரையப்பட்டிருக்கிறது. ஓவியமும் இயல்பாக அமைந்துவிட்டது. கலைஞர் நின்றபடி இருக்கும் ஓவியம் மக்களுக்கும் புதிதாக இருந்திருக்கும்”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ஓவியத்தில் தவறாமல் இடம் பெற வேண்டிய விஷயங்கள் என முதல்வர் ஏதேனும் குறிப்பிட்டுச் சொன்னாரா?”

” ’அப்பாவுக்கு பிடித்த விஷயங்கள் எல்லாம் கட்டாயம் இருக்க வேண்டும்’ என்று தெளிவாக சொல்லிவிட்டார் முதல்வர். குறிப்பாக, கலைஞருக்கு மிகப் பிடித்த அவரது பேனா, அவர் எழுதி, படித்த பொக்கிஷமான நூல்களைக் குறிக்கும் வகையில் புத்தகங்கள் நிறைந்த அலமாரி, உள் ஓவியமாக அவர் விரும்பி உருவாக்கிய குமரி திருவள்ளுவர் சிலை, கைக்கடிகாரம், இவையெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்றார். முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, கலைஞருக்கு பிடித்த விஷயங்கள் அனைத்தும் ஓவியத்தில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. முதலில் மாதிரி ஸ்கெட்ச் ஒன்றை வரைந்து காட்டினோம், அதில் சில கருத்துக்களைச் சொன்னார். மோதிரங்களை இவ்வளவு தெளிவாகக் காட்ட வேண்டுமா என்றார். அதன் பிறகு ஒரு மோதிரத்தை மட்டும் கொஞ்சம் தெளிவாகக் காட்டியிருக்கிறோம்.”

கருணாநிதி -  ஸ்டாலின்
கருணாநிதி - ஸ்டாலின்

``கருணாநிதிக்கு பிடித்த பொருட்களை எல்லாம் ஓவியத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள், சரி. யானை சிலை மீது கை வைத்தது போல் வரைந்ததற்கான காரணம் என்ன?”

”யானை என்பது பலத்தின் அடையாளம். காடுகள் மற்றும் காடு சார்ந்து வாழும் உயிரினங்களுக்கு ஆதாரமாகக் கருதப்படுகிறது யானை. அதுபோல, ’தமிழ் மொழியின் கம்பீரத்தையும், தமிழ் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பவர் முத்தமிழறிஞர் கலைஞர்’ என்று உணர்த்தும் வகையில் யானை சிலை மீது கை வைத்திருப்பது போல் வரையச் சொன்னார் முதல்வர். கோபாலபுரம் வீட்டிலும் யானை சிலை ஒன்று இருக்கிறது.

ஓவியத்தை கவனித்தால், கதவு ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்தக் கதவு, ஓர் அறைக்குள் கலைஞர் நிற்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். ’நூல்கள் நிறைந்த தனது வீடுதான் தன் உலகம்’ என்று அடிக்கடி கலைஞர் கூறுவாராம். அதையே ஓவியமும் குறிக்கிறது.

கலைஞரின் ஓவியத்தை வரைய எங்களுக்கு வாய்ப்பு கொடுத்த முதல்வருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வாய்ப்பு, மகிழ்ச்சியோடு மிகுந்த பொறுப்புணர்வையும் கொடுத்திருக்கிறது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு