Published:Updated:

``ஒரு தெருவுக்குக்கூட பாட்டி பெயரை வைக்கவில்லை!’’ - வி.என்.ஜானகி பேரன் வருத்தம்

வி.என்.ஜானகியுடன் குமார் ராஜேந்திரன்
வி.என்.ஜானகியுடன் குமார் ராஜேந்திரன்

``அவர் கொடுத்த இடத்தில்தானே இன்று கட்சி அலுவலகம் இயங்குகிறது. அதை அனுபவிப்பவர்கள் என் பாட்டியின் பிறந்த நாளின்போதும் நினைவு நாளின்போதும் மரியாதை செய்வதுதானே நியாயம்?" என்கிறார் வி.என்.ஜானகியின் தம்பி வழிப் பேரனான வழக்கறிஞர் குமார் ராஜேந்திரன்.

இன்று வி.என்.ஜானகியின் 97-வது பிறந்த தினம். இவர் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவி மட்டுமல்ல, தமிழக அரசியல் வரலாற்றில் தமிழ்நாட்டை ஆண்ட முதல் பெண் முதலமைச்சரும்கூட. வி.என்.ஜானகியின் தம்பி வழிப் பேரனான வழக்கறிஞர் குமார் ராஜேந்திரன், தன்னுடைய சமூக வலைதளத்தில், ``தமிழ்நாட்டை ஆண்ட முதல் பெண்மணியான என் பாட்டியின் பிறந்த நாளுக்கும் நினைவு நாளுக்கும் முறையான மரியாதை கிடைக்கவில்லை" என்று வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார். அவரிடம் பேசினோம்.

வி.என்.ஜானகி
வி.என்.ஜானகி

``முதலமைச்சர் அறைக்கு வெளியே இதுவரை தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்களின் பெயர் பட்டியல் இருக்கிறது. தினமும் அந்தப் பட்டியலைப் பார்த்துவிட்டுதான் முதல்வர் உள்ளே செல்கிறார். ஆனால், என் பாட்டிக்கான மரியாதை ஏனோ கிடைப்பதில்லை. என் பாட்டிக்கான அரசு மரியாதையைச் செய்ய வேண்டி முதலமைச்சரிடம் கடிதம் கொடுத்தபோது உடனே செய்வதாகச் சொல்லியிருந்தார். ஆனால், அவருக்கடுத்து இதைச் செய்ய வேண்டிய இடத்திலிருப்பவர்கள் செய்யவில்லை. அதனால், முதல்வர் மீது குறை சொல்ல முடியாது. இப்போதும்கூட என் பாட்டியை எல்லோருக்கும் நினைவூட்டத்தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்’’ என்றவர் தொடர்ந்தார்.

``பாட்டி இறந்தபோது அரசு மரியாதையுடன்தான் அடக்கம் செய்தார்கள். கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு, கேபினட் மீட்டிங் நடக்கும் அறையில் என் பாட்டியின் புகைப்படம் இல்லையென்றதும், ``அவர் முதலமைச்சராக இருந்தவர். அதனால், அவருடைய புகைப்படமும் இந்த அறையில் இருக்க வேண்டும்" என்று சொன்னார். அதையடுத்து, பாட்டியின் புகைப்படம் அந்த அறையில் வைக்கப்பட்டது.

முதல்வர் தம்பதி
முதல்வர் தம்பதி

பாட்டி எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவர். இறப்பதற்கு முன்னால், ``என்னால் பொது மக்களுக்குத் தொல்லை வரக்கூடாது" என்றார். அதன் காரணமாகவே அவருடைய பூத உடலை ஊர்வலமாகக்கூட நாங்கள் கொண்டு செல்லவில்லை. அவர் வாழ்ந்த தோட்டத்து வீட்டிலேயே இறுதி மரியாதையோடு அடக்கம் செய்தோம்.

அவருக்கு அரசியலுக்கு வருவதில் விருப்பமே இல்லை. அப்போது இருந்த அரசியல் தலைவர்கள் வற்புறுத்தியதால்தான் அவர் அரசியலுக்கு வந்தார். கட்சியின் சின்னம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டபோது தானே முன்வந்து தன்னுடைய பதவியை விட்டுக் கொடுத்தார். இதற்காக அவர் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. எனக்குப் பதவி வேண்டும். என்னுடைய அணியில் இருப்பவர்களுக்குப் பதவி வேண்டும் என்றெல்லாம் என் பாட்டி கேட்கவில்லை. அவர் கொடுத்த இடத்தில்தானே இன்று கட்சி அலுவலகம் இயங்குகிறது. அதை அனுபவிப்பவர்கள் என் பாட்டியின் பிறந்த நாளின்போதும் நினைவு நாளின்போதும் மரியாதை செய்வதுதானே நியாயம்? ஒரு தெருவுக்குக்கூட அவருடைய பெயரை வைக்கவில்லையே அரசு’’ என்கிறார் வருத்தத்துடன்.

தம்பி குடும்பத்துடன் வி.என்.ஜானகி
தம்பி குடும்பத்துடன் வி.என்.ஜானகி

``பாட்டியின் தம்பி நாராயணனின் முதல் பேரன் நான். அதனால் என் மீது பாட்டிக்குப் பாசம் அதிகம். பாட்டிக்கு உடல்நலமில்லாமல் டயாலிசிஸ் நடந்துகொண்டிருந்த கடைசி நான்கு மாதங்கள் நான் அவருடன்தான் இருந்தேன். அப்போது நான் ப்ளஸ் டூ மாணவன். அந்த நேரத்தில் என் கை ஃபிராக்ச்சர் ஆகியிருந்தது. அறுவை சிகிச்சை செய்துகொண்டு நான் என் பாட்டியுடன் தங்கி இருந்தேன். அப்போது நான் சரியாகப் படிக்க மாட்டேன். ஒரு முறை `கார் லைசென்ஸ் வாங்கணும் பாட்டி. டெஸ்ட்டுக்கு போயிட்டு வரேன்’ என்று சொன்னேன். அதற்கு பாட்டி `எல்லா வண்டிகள் ஓட்டறதுக்கும் லைசென்ஸ் எடுத்துடுப்பா. படிப்பு வரலைன்னாலும் வண்டியோட்ற இந்த லைசென்ஸாவது உனக்கு சோறு போடும்’ என்றார். இன்னொரு முறை `சொத்தெல்லாம் நிரந்தரம் கிடையாது. ஒரு ரெய்டு வந்தா சொத்து போயிடும். வாடகைக்கு வந்தவங்க காலி பண்ணலைன்னா சொத்து போயிடும். படிப்போ, ஒரு கலையோ கத்துக்கிட்டா அது வாழ்க்கை முழுக்க உனக்கு சோறு போடும்’ என்று அடிக்கடி சொல்வார் பாட்டி. மனதளவில் பாட்டி இந்தளவுக்கு எளிமையாகத்தான் வாழ்ந்தார். அவருக்கான மரியாதையை நானும் கேட்கவில்லையென்றால் எப்படி?’’ என்கிறார் வழக்கறிஞர் குமார் ராஜேந்திரன்.

அடுத்த கட்டுரைக்கு