Published:Updated:

புதுக்கோட்டை: ``அவர் மழையில் நனையாமல் பேசட்டும்!" - கட்சி நிர்வாகிக்குக் குடைபிடித்த எம்.எல்.ஏ!

ஜெகன் நன்றியுரை ஆற்றும் வரை எம்.எல்.ஏ சின்னத்துரை அவருக்குக் குடைபிடித்தவாறு நின்று, அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்படுத்தினார்.

புதுக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9-வது நகர மாநாடு, புதுக்கோட்டையிலுள்ள தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அன்றிரவு புதுக்கோட்டை பி.யூ.சின்னப்பா பூங்காவில் முன்னாள் நகரச் செயலாளர் அடைக்கலசாமி தலைமையில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ-வுமான சின்னத்துரை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். எம்.எல்.ஏ சின்னத்துரை பேச ஆரம்பித்தபோதே கருமேகம் சூழ்ந்து மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

திறந்தவெளி மேடையில் நடைபெற்ற கூட்டம் என்பதால், சிறப்புரை முடிக்கப்பட்ட நிலையில், வேகமாகக் கூட்டத்தை முடிக்க முடிவு செய்தனர். கீழே இருந்த தொண்டர்களெல்லாம், கடைகளின் ஓரமாக ஒதுங்கிக் கூட்டத்தை கவனித்தனர். கடைசியாக நகரக்குழு உறுப்பினர் ஜெகன் நன்றியுரை ஆற்றுவதற்காக எழுந்து வந்தபோது, மழை பெய்யத் தொடங்கியது.

`போராட்டம் நடத்தியும் நடக்காததை, நானே நிறைவேற்றியதில் மகிழ்ச்சி’ -  நெகிழும் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ
குடைபிடிக்கும் எம்.எல்.ஏ சின்னத்துரை
குடைபிடிக்கும் எம்.எல்.ஏ சின்னத்துரை

இருப்பினும், உரையாற்றுவதில் முனைப்பாக இருந்த ஜெகன் மேடைக்கு வேகமாக ஏறி, பேசத் தொடங்கினார். இந்த நிலையில், ஜெகன் மழையில் நனைவதைக் கண்ட கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ சின்னத்துரை, இருக்கையிலிருந்து எழுந்து சென்று நன்றியுரை ஆற்றிக் கொண்டிருந்த ஜெகனுக்குக் குடைபிடித்தவாறே நின்றார். ஜெகன் நன்றியுரை ஆற்றும் வரை அவருக்குக் குடைபிடித்தவாறு அருகிலேயே நின்று அங்கிருந்த அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். எம்.எல்.ஏ-வின் எளிமையை அங்கிருந்த அனைவரும் பாராட்டினர்.

எம்.எல்.ஏ குடைபிடித்தது குறித்து அந்தக் கட்சித் தொண்டர்களிடம் கேட்டபோது, ``கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த காலகட்டத்திலேயே எம்.எல்.ஏ சின்னத்துரை மிகவும் எளிமையான மனிதராக இருந்தவர்தான். எப்போதும் தொண்டர்களின் நலனில் அக்கறைகொண்டவர் அவர். எம்.எல்.ஏ-வான பிறகும், எப்போதும்போல எளிமையாக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சிதான்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு