Published:Updated:

``காப்பிரைட் பிரச்னை செய்து என் ட்விட்டர் கணக்கை முடக்கிவிட்டார்கள்!" - காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

``என் ட்விட்டர் அக்கவுன்ட்டில் நான் என்ன வேண்டுமென்றாலும் பேசுவேன். அதைப்பற்றி இவர்களுக்கு என்ன? நான் பேசினால் பயமாக இருக்கிறதா?" - காயத்ரி ரகுராம்

நடிகையும் அரசியல்வாதியுமான காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு இரண்டாவது முறையாக சென்ற வாரம் முடக்கப்பட்டது. முதல்முறை, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் பற்றி விமர்சனம் செய்ததால். இந்த முறை மனுநூல் சர்ச்சை தொடர்பாக வீடியோ வெளியிட்டதால். அவரிடமே பேசினோம்.

தொல் திருமாவளவன்
தொல் திருமாவளவன்

``இந்தியா மட்டுமல்ல, இந்த உலகமே ஆணாதிக்கம் கொண்டதுதான். ரொம்ப காலமாகவே இதற்கு எதிராகப் பெண்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். இந்தக் காலத்தில் ஆணாதிக்கத்திற்கு எதிராகப் பெண்கள் பேசினால், அவர்களுடைய ட்விட்டர் கணக்கை முடக்கி விடுகிறார்கள், அவ்வளவுதான். இதற்காக பயந்து கொண்டு என் கருத்துகளை வெளிப்படுத்தாமலோ, சமூக வலைதளங்களைவிட்டே ஓடவோகூடிய நபர் நான் கிடையாது'' என்று நகைத்தவர் பேச்சைத் தொடர்ந்தார்.

``இன்றைக்கு நாமெல்லாம் பாபா சாகிப் இயற்றிய சட்டத்தைதான் ஃபாலோ செய்துகொண்டிருக்கிறோம். ஆனால், மிஸ்டர் திருமாவளவன் மட்டும்தான் மனு ஸ்மிருதியைப் படித்துக்கொண்டிருக்கிறார். அதிலும், பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்தபோது, வில்லியம் ஜோன்ஸ் என்பவர் மொழிபெயர்த்த மனு ஸ்ருமிதி புத்தகத்தைப் படித்துவிட்டுப் பேசிக்கொண்டிருக்கிறார். சம்ஸ்கிருதத்தில் ஓர் எழுத்துக்கும் ஓர் உச்சரிப்புக்கும்கூட பல அர்த்தங்கள் இருக்கும். அதில் இருக்கிற புள்ளிகளுக்குக்கூட அர்த்தம் இருக்கும். அப்படிப்பட்ட மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட புத்தகத்தைப் படித்துவிட்டுப் பேசிக்கொண்டிருக்கிறார்.

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

தவிர, மனு ஸ்மிருதி என்பது சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட சட்டம். அதை யார் எழுதியது என்பதே யாருக்கும் தெரியாது. அதேபோல், யார் வேண்டுமானாலும் மனுநூலைப் பற்றியோ, அதை மொழிபெயர்த்தோ புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கலாம். இவற்றுக்கெல்லாம் ஆதாரமும் கிடையாது, அங்கீகாரமும் கிடையாது. இவற்றில் ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு, அதன் அடிப்படையில் பெண்களைப்பற்றி தவறான கருத்துகளைப் பரப்பிக்கொண்டிருக்கிறார். உங்களுடைய சொந்தக் கருத்துகளை இந்து தர்மம் சொல்லியிருக்கிறது என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் திருமாவளவன்?

நம் இந்து தர்மத்தை அழிக்க வேண்டுமென்று முகலாயர்களும் ஆங்கிலேயர்களும் நினைத்தார்கள். அவர்களை விரட்டியடிக்கும் அளவுக்கு நம் இந்து தர்மம் வலுவாக இருந்தது. இனியும் இருக்கும். எதிரியைக்கூட மன்னிக்கலாம். ஆனால், இந்து மதத்திலேயே இருந்துகொண்டு அதற்கே துரோகம் செய்பவர்களை மன்னிக்கவே கூடாது. அதற்காகத்தான் உங்களை கைது செய்ய வேண்டும் என்று சொல்கிறோம்'' என்று படபடக்கிறார் காயத்ரி ரகுராம்.

``மனுநூல் சர்ச்சை தொடர்பாக என்னுடைய போனில் எடுத்த வீடியோவை என்னுடைய ட்விட்டர் கணக்கில் போஸ்ட் செய்தேன். அதை அவர்களுடைய வீடியோ என்று சொந்தம் கொண்டாடி காப்பி ரைட் பிரச்னை செய்து என் ட்விட்டர் கணக்கை முடக்கினார்கள். அதுவொரு கோழைத்தனமான செயல். என் ட்விட்டர் அக்கவுன்ட்டில் நான் என்ன வேண்டுமென்றாலும் பேசுவேன். அதைப்பற்றி இவர்களுக்கு என்ன? நான் பேசினால் பயமாக இருக்கிறதா?

அதே அரசியல், அதே நாடகம்... உங்கள் மேல் பரிதாபம்தான் வருகிறது குஷ்பு! #VoiceOfAval

குஷ்பு, சிதம்பரத்துக்கு வந்து போராட்டம் நடத்துவதை ஏன் தடுக்கப் பார்க்கிறீர்கள் திருமாவளவன்? ஒரு சிட்டிங் எம்.பி.யாக குஷ்புவுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டிய பொறுப்பில் நீங்கள்தான் இருக்கிறீர்கள். சிதம்பரம் எல்லாருக்கும் சொந்தமானது. அந்த ஊருக்கு நீங்கள் மட்டுமே சொந்தக்காரர் கிடையாது.

பெண்களைப்பற்றி இழிவாகப் பேசிவிட்டு, இவருடைய கட்சியினர்தாம் பெண்களுக்காகப் போராடுகிறார்களாம். திருமாவளவனுடைய வளர்ப்பு அப்படி. அவருடைய கட்சியில் இருப்பவர்கள், பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை இவரிடமிருந்து கற்றுக்கொள்ளவே கூடாது. மோசமான உதாரணம் இவர்'' கோபமாகப் பேசி முடித்தார் காயத்ரி ரகுராம்.

அடுத்த கட்டுரைக்கு