Published:Updated:

பெண்களின் திருமண வயதை உயர்த்துவதுதான் தீர்வா?

படத்தில் இருப்பவர்கள் மாடல்கள்...
பிரீமியம் ஸ்டோரி
News
படத்தில் இருப்பவர்கள் மாடல்கள்...

திருமண வயதை உயர்த்துவதற்கு இப்போது எந்தக் காரணமும் இல்லை என்பது எங்கள் கருத்து.

பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21-ஆக உயர்த்த முடிவெடுத்திருக்கிறது மத்திய அரசு. இதற்கென நியமிக்கப்பட்ட ஜெயா ஜெட்லி தலைமையிலான குழு அளித்த அறிக்கையை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டிருக்கிறது. விரைவில் இது சட்டமாகக்கூடும். இந்த மசோதா நிறைவேறும்பட்சத்தில் சிறார் திருமணத் தடைச் சட்டம் உட்பட அனைத்துத் திருமணச் சட்டங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

“நம் மகள்கள் மற்றும் சகோதரிகளின் ஆரோக்கியத்தில் இந்த அரசு அக்கறை கொண்டுள்ளது. நம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் பிறப்பதைத் தடுக்க, சரியான வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்துவைப்பது அவசியம்’’ - 2020 சுதந்திர தின விழாவின்போது பிரதமர் நரேந்திர மோடி இப்படிச் சொன்னார். அதைத் தொடர்ந்து ஜெயா ஜெட்லி தலைமையில் 10 நபர்கள் குழுவை இதற்காக அமைத்தது மத்திய அரசு. இந்தக் குழு கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தது.

‘18 வயதில் திருமணம் செய்துவைப்பதால் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. பாலின சமத்துவம் பாதிக்கப்படுகிறது. தாய்-சேய் இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. பெண்களின் திருமண வயதை ஆண்களுக்கு நிகராக உயர்த்துவதன்மூலம் இவற்றைக் களைய முடியும்’ என்கிறது ஜெயா ஜெட்லி குழுவின் அறிக்கை.

பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மத்திய அரசின் முடிவை பெரும்பாலான பெண்கள் அமைப்புகள் வரவேற்றுள்ளன. சமூக ஊடகங்களிலும் நிறைய பெண்கள் தங்கள் அனுபவத்தை முன்வைத்து மத்திய அரசின் முடிவை வரவேற்று எழுதுகிறார்கள்.

பெண்களின் திருமண வயதை உயர்த்துவதுதான் தீர்வா?

அதேநேரம், ‘காதல் திருமணங்களை முடக்கவும் சிறுபான்மைச் சமூகங்களை அச்சுறுத்தவுமே மத்திய அரசு இந்த மசோதாவைக் கொண்டு வருகிறது’ என்ற குரலும் ஒலிக்கிறது. குறிப்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பெண்களின் திருமண வயது உயர்வை எதிர்க்கிறது. அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சுகந்தியிடம் இதுகுறித்துப் பேசினேன்.

‘`திருமண வயதை உயர்த்துவதற்கு இப்போது எந்தக் காரணமும் இல்லை என்பது எங்கள் கருத்து. ஜெயா ஜெட்லி குழு, குழந்தைகளின் பாலின விகிதம், தாய்-சேய் இறப்பு விகிதம், கருவுறுதல் போன்ற காரணிகளை மட்டுமே முன்வைத்து ஆய்வு செய்திருக்கிறது.

ஆண்-பெண் விகிதம் குறைவதற்கும் திருமண வயதுக்கும் சிறிதும் தொடர்பில்லை. பெண்குழந்தைகளைத் தாழ்வாகப் பார்க்கும் பார்வைதான் அதற்குக் காரணம். கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிவது குற்றம் என்று சட்டம் இருக்கிறது. ஆனால், ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 1 லட்சம் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டிருக்கின்றன’ என்று மாவட்ட ஆட்சியரே அறிக்கை தந்தார். இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் இந்த நிலை இருக்கிறது. ஆண்-பெண் விகிதம் குறைய இதுபோன்ற சூழல்கள்தான் காரணமே ஒழிய பெண்ணின் திருமண வயதல்ல.

பிரசவத்தில் தாய்-சேய் இறப்புக்குப் பிரதான காரணமாக இருப்பது ஊட்டச்சத்துக் குறைபாடு. கருவுறும் பெண்களில் 80 சதவிகிதம் பேர்ஊ ரத்தசோகையால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு அடிப்படையான காரணம், வறுமை. வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்காமல் பெண்ணின் திருமண வயதை உயர்த்துவதால் எந்தப்பயனும் இல்லை. நாங்கள் ஆண்களுக்கும் திருமண வயதை 18 ஆகக் குறைக்கவேண்டும் என்றே வலியுறுத்துகிறோம்.

பெண்களின் திருமண வயதை உயர்த்துவதுதான் தீர்வா?

திருமண வயதை உயர்த்துவதால் பெண்கள் உயர்கல்வி பெற வாய்ப்பிருக்கிறது என்ற கருத்தும் சரியல்ல. திருமண வயது பதினெட்டாக இருக்கும் இந்தத் தருணத்தில்கூட எல்லோரும் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை இந்த அரசு செய்யவில்லை. கல்வி உரிமைச் சட்டம்கூட 14 வயதுவரையிலான கல்வியைத்தான் உறுதிசெய்கிறது. அதிலும் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை, பெண்களைப் பல நூறு ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளுகிறது.

இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பைத் தீர்மானிக்கும் உரிமை 18 வயது நிறைவடைந்தவர்களுக்குத் தரப்பட்டுவிட்டது. வாழ்க்கைத் துணையைத் தேர்வுசெய்வதற்கு மட்டும் 21 வயதை வரம்பாக்குவது ஏன்?’’ என்கிறார் சுகந்தி.

பெண்ணியச் செயற்பாட்டாளர் ஓவியா, ‘`ஜனநாயக மாதர் சங்கத்தின் இந்த எதிர்ப்பு மிகவும் அதிர்ச்சி யளிக்கிறது’’ என்கிறார். ‘`பெண்ணின் திருமண வயதை உயர்த்தவேண்டும் என்பது ஏற்கெனவே பலரும் முன்வைத்த கோரிக்கை. அதை பாரதிய ஜனதா அரசு நிறைவேற்றுகிறது என்பதால் மட்டுமே எதிர்ப்பது நியாயமில்லை. எங்களைப் போன்ற பெண்ணியவாதிகள் முழு மனதோடு வரவேற்கிறோம். எங்கள் தாத்தா காலத்தில் 8-வது படிப்பது பெரிய படிப்பு. நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது எஸ்.எஸ்.எல்.சி பெரிய படிப்பாக இருந்தது. இப்போது பட்டப்படிப்பே குறைந்தபட்சத் தகுதியாக இருக்கிறது. வேலைக்குப் போகிறார்களோ இல்லையோ, அதற்கான தகுதியையாவது பெண்கள் பெற்றிருப்பது எல்லா வகையிலும் பாதுகாப்பு. திருமண வயதை உயர்த்துவதென்பது, ‘பிள்ளைகளைப் படிக்க வையுங்கள்’ என்று பெற்றோருக்குச் சொல்லும் செய்திதான்.

சாதி ஒழிப்புக்குக் காதல் திருமணம் ஒரு வழி. ஆனால் அதுமட்டுமே தீர்வல்ல. 21 வயதில் பெண் இன்னும் பக்குவமாகவும் தெளிவாகவும் தீர்க்கமாகவும் முடிவெடுப்பாள்’’ என்கிறார் ஓவியா.

பெண்களின் திருமண வயதை உயர்த்துவதுதான் தீர்வா?

சென்னையின் பிரதான கல்லூரியொன்றில் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவி சுஜா, “20 வயதுக்குமேல்தான் பெண்ணுடல் மருத்துவரீதியாகப் பக்குவமடையும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். உதவிப் பேராசிரியராக ஆகவேண்டுமென்றால்கூட எம்.பில் முடிக்கவேண்டும். குறைந்தது 28 வயதுவரையாவது படிக்கவேண்டும். பட்டப்படிப்பை முடித்திருந்தால்கூட திருமணத்துக்குப் பிறகு மேலே படிப்பதற்கான தைரியமாவது வரும். இன்று பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவருகின்றன. பெண்ணின் திருமண வயதை 21 ஆக்கும்போது சட்டபூர்வமாகப் பெண்களுக்குப் பாதுகாப்பும் கிடைக்கும்’’ என்கிறார்.

எழுத்தாளரும் திரைக்கலைஞருமான மருத்துவர் சர்மிளா, “பெண்ணின் திருமண வயதை உயர்த்தும் மத்திய அரசு, அந்த மூன்றாண்டுகளில் பெண்களுக்கு என்னமாதிரியான வாய்ப்புகளை உருவாக்கப்போகிறது என்பதையும் சேர்த்து அறிவிக்க வேண்டும்’’ என்கிறார்.

‘‘திருமண வயதை 21ஆக உயர்த்துவதன் மூலம் பெற்றோரின் கட்டாயத்திலோ, சாதி, மத நம்பிக்கைகள் காரணமாகவோ தன்மீது திணிக்கப்படும் திருமணத்தைப் பெண் தைரியமாகத் தடுக்கலாம். வேண்டாவெறுப்பாகச் செய்துகொள்ளும் திருமணங்களும் குறையும். மருத்துவ ரீதியான பார்வையிலும் இந்த முடிவு சரியானதுதான். ஆனால், இங்கே இருவேளை உணவே உறுதியில்லாத பல லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. கோவிட் தாக்கத்துக்குப் பிறகு இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அந்தமாதிரி குடும்பங்களில் பெண் பிள்ளைகளுக்கு எப்படியாவது திருமணம் முடித்துவிட்டால் சரி என்ற எண்ணம்தான் இருக்கும். 21 வயதில்தான் திருமணம் செய்யவேண்டும் என்று சட்டம் இயற்றுவதால் அதுமாதிரியான குடும்பங்களில் பெண்களை சுமையாகக் கருதும் நிலை வந்துவிடும். அதனால் 18-21 வயதுக்குட்பட்ட பெண்களின் கல்வி, வேலைவாய்ப்புக்கென்று திட்டங்களையும் சேர்த்தே இந்தச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும்’’ என்கிறார் அவர்.

சுஜா, சுகந்தி, ஓவியா, சர்மிளா
சுஜா, சுகந்தி, ஓவியா, சர்மிளா

இந்தக் குழுவின் தலைவர் ஜெயா ஜெட்லி சொன்ன ஒரு முக்கியமான விஷயத்தை இங்கே கவனிக்க வேண்டும். ‘`நாங்கள் பல பரிந்துரைகளைக் கொடுத்திருந்தோம். ‘திருமண வயதை உயர்த்த வேண்டும்’ என்பது அதில் ஒன்று. ஆனால், அதுமட்டுமே தீர்வு கிடையாது. பெண்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களுக்குக் கல்வி வசதி கிடைக்கச் செய்ய வேண்டும். பள்ளிகளில் சுகாதாரமான கழிப்பறைகள் மற்றும் நாப்கின்கள் கிடைப்பதை உறுதி செய்து, அவர்கள் பள்ளியிலிருந்து இடைநிற்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தொழிற்கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் பயிற்சிகளும் தர வேண்டும். இந்த எல்லாவற்றையும் செய்யாமல் வெறுமனே திருமண வயதை உயர்த்துவது நியாயமல்ல. நல்ல சாலைகளோ, டிராபிக் சிக்னல்களோ அமைத்துத் தராமல் சாலை விதிகளை அமல்படுத்துவது போன்ற அபத்தம் அது’’ என்றார் ஜெயா ஜெட்லி.

இப்போதும் கிராமப்புறங்களில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பதான சொலவடைகள், பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் மத்தியில் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. திருமண வயதை உயர்த்துவதோடு கடமையை முடித்துக்கொள்ளாமல், பெண்களுக்கான கல்வி, ஊட்டச்சத்து, வேலைவாய்ப்பு, சுகாதாரத் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். பெண்களின் சுதந்திரமும் உரிமையும் காக்கப்படவேண்டும்!

பெண்களின் திருமண வயதை உயர்த்துவதுதான் தீர்வா?

ஆண், பெண் திருமண வயதை நிர்ணயிக்கும் முதல் சட்டம் 1929-ல் கொண்டுவரப்பட்டது. சாரதா சட்டம் எனப்படும் அது, பெண்களுக்கு 14 வயதையும் ஆண்களுக்கு 18 வயதையும் திருமணத்துக்கான தகுதியாக நிர்ணயித்தது. அதன்பிறகு காலத்துக்கேற்றவாறு இச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1978-ல் பெண்களின் திருமண வயது 18 எனவும் ஆண்களின் திருமண வயது 21 எனவும் தீர்மானிக்கப்பட்டது. அதுவே இப்போதுவரை நடைமுறையாக இருக்கிறது.

பெண்களின் கல்வி மற்றும் சுகாதாரம் முன்னேற வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றம் வந்தது. ஆனால், 40 ஆண்டுகள் கடந்தும் பெரிதாக எதுவும் மாறிவிடவில்லை. 2019-21 தேசிய குடும்பநல ஆய்வு ஓர் அதிர்ச்சி உண்மையை அம்பலப்படுத்தியது. ‘இந்தியாவில் 23.3 சதவிகிதப் பெண்களுக்கு 18 வயது நிறைவதற்கு முன்பே திருமணம் ஆகிவிடுகிறது’ என்பதுதான் அது. சிறார் திருமணத் தடைச் சட்டம் என்பது காகிதமாக இருக்கிறதே தவிர, அது நிஜத்தில் செயல்படவில்லை என்ற அவலத்தை இது காட்டுகிறது.

*****

1955-ம் ஆண்டின் இந்து திருமணச் சட்டம், 1872-ம் ஆண்டின் கிறிஸ்தவ திருமணச் சட்டம் ஆகியவை பெண்ணின் சட்டபூர்வ திருமண வயது 18 எனவும், ஆணின் திருமண வயது 21 எனவும் வரையறுத்துள்ளன. கலப்புத் திருமணங்களுக்கான சிறப்புத் திருமணச் சட்டமும் இதையே ஆமோதிக்கிறது. 1937-ம் ஆண்டின் முஸ்லிம் தனிநபர் சட்டம் (ஷரியத்), பருவ வயது எய்திய ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்வதை அனுமதிக்கிறது. 2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிறார் திருமணத் தடைச் சட்டம், பெண்களுக்கு 18 வயதுக்குள்ளும், ஆண்களுக்கு 21 வயதுக்குள்ளும் திருமணம் செய்வதை சட்டவிரோதம் ஆக்கியுள்ளது.