‘2021 ஏப்ரல் மாதம் வரை, குரூப் ஏ, பி, சி என மத்திய அரசின் எந்தப் பணிநிலை (கேடர்) அதிகாரிகளுக்கும் சுழற்சி முறை டிரான்ஸ்ஃபர் என்ற பேச்சுக்கே இடமில்லை’
- இப்படியோர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம்.
மத்திய அரசின் முக்கியமான பதவிகளில் உள்ள அதிகாரிகள், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறை இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது விதி. கொரோனா நெருக்கடி நேரத்தில் அது அவசியமில்லை எனக் கருதி, இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து, உத்தரப்பிரதேசம் அரசாங்கமும் அனைத்துத் துறை களுக்கும் இதே உத்தரவை மே 13-ம் தேதி பிறப்பித்தது.
‘‘இதேபோன்று அனைத்து மாநிலங்களும் மத்திய அரசின் அனைத்துத் துறைகளும் முடிவு எடுத்தால், அதன்மூலம் பல கோடி ரூபாய் அரசுக்கு ஏற்படும் செலவு தவிர்க்கப்படும்’’
என்கிறார்கள் மத்திய அரசின் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் சிலர். ‘‘கொரோனா நெருக்கடியால், நாடே ஸ்தம்பித்துப்போயிருக்கும் இந்த நேரத்தில், அரசு அதிகாரிகளுக்கு டிரான்ஸ்ஃபர் வழங்குவது, அரசுக்கு தேவையில்லாத செலவு. அதை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தலாம். தவிர, கொரோனா உள்ளிட்ட பணிகளில் தேவையற்ற குழப்பத்தையும் தொய்வையும் இந்த இடமாறுதல் உண்டாக்கும்’’ என்கிறார்கள் அவர்கள்.
இதுகுறித்து, மத்திய அரசில் உயர் பொறுப்பு வகித்துவரும் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ‘‘ஒருபுறம், ‘பி.எம் கேர்ஸ்’ மூலமாக மக்களிடம் நிதி கேட்டுக்கொண்டிருக்கிறோம். அரசு அதிகாரிகளிடம் ஒருநாள் கட்டாய சம்பளப் பிடித்தம் செய்து கொரோனா தடுப்புக்காகப் பயன்படுத்திவருகிறோம். அந்த அளவுக்கு மத்திய அரசுக்கு நிதி நெருக்கடி இருக்கும் வேளையில், மறுபுறம் அரசு அதிகாரிகளுக்கு இடமாறுதல் வழங்கி, தேவை யில்லாமல் பணத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.

மத்திய அரசின்கீழ் பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் டிரான்ஸ்ஃபருக்கு, அரசுக்கு 3.5 லட்சம் ரூபாய் செலவாகும். அவருக்குப் பதிலாக வரும் மற்றொரு அதிகாரிக்கு 3.5 லட்சம் என மொத்தம் 7 லட்சம் ரூபாய் செலவாகும். குரூப் ஏ கேடரில், ஒரு ஆர்டரில் குறைந்தது 15 பேர் இடமாறுதல் செய்யப்படுவார்கள். இது ஒரு துறையில்தான். இதேபோல் 30-க்கும் மேற்பட்ட அமைச்சகம் உள்ளது. ஒவ்வோர் அமைச்சகத்திலும் நான்கு ஐந்து துறைகள் உள்ளன. அதேபோல், பி, சி கேடர்களில் உள்ளவர்களுக்கும் இந்த டிரான்ஸ்ஃபர் நடைபெறும். குரூப் ஏ-யைவிட குரூப் பி-யில் அதிகம் பேர் டிரான்ஸ்ஃபர் செய்யப்படுவர். குரூப் சி-யில் அதைவிட அதிகமானோர் டிரான்ஸ்ஃபர் செய்யப்படுவர்.
இதற்காக ஆகும் செலவை மொத்தமாகக் கணக்கிடும்போது, பல கோடியைத் தாண்டும். அவசரத் தேவைகளைத் தவிர்த்து வழக்கமான நடைமுறைக்காக இந்த நேரத்தில் டிரான்ஸ்ஃபர் செய்வது தேவையற்ற செலவுதான். அதேபோல் வேலையில் தொய்வு, தேவையற்ற பயணம், கொரோனா நேரத்தில் குடும்பத்தைப் பிரிவது போன்ற பல சிக்கல்களும் இருக்கின்றன.
இந்த நேரத்தில் அனைத்து முக்கிய அறிவிப்புகளையும் மத்திய உள்துறை அமைச்சகம்தான் வெளியிடுகிறது. அதனால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில், அனைத்து டிரான்ஸ்ஃபர் களையும் ஒரு வருடத்துக்குத் தள்ளிவைக்கும் உத்தரவை வெளியிட வேண்டும். மத்திய அரசின் அனைத்துத் துறைகளும், அனைத்து மாநிலங்களும் இதை கடைப்பிடிக்கும்படி உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான தேவசகாயத்திடம் இதுகுறித்துப் பேசினோம். ‘‘உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளை டிரான்ஸ்ஃபர் செய்யும்போது அதிகம் செலவாகும் தான். தேவையில்லாமல் செய்யப்படும் டிரான்ஸ்ஃபர்களால் அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவு களைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை டிரான்ஸ்ஃபர் எனும் நடைமுறை கொண்டுவரப் பட்டது. பேரிடர் காலங்களில் அதை கண்டிப்பாகக் கடைப்பிடித்தே ஆகவேண்டும் என்கிற அவசியமில்லை. பணிக்காலத்தை நீட்டித்துக்கொள்ளலாம். இதனால், தேவையற்ற செலவுகள் தவிர்க்கப்படும்; வேலைகள் பாதிக்கப்படாது’’ என்றார்.
தமிழக அரசுத் தரப்பில் விசாரித்தபோது, ‘‘அரசு அதிகாரிகள் இடமாறுதலுக்குத் தடை போன்ற முடிவுகள் தமிழக அரசால் எடுக்கப்பட வில்லை. அதற்கான அவசியமும் இல்லை. முக்கியமாகத் தேவைப்படும் இடங்களில் மட்டும் இடமாற்றம் நடைபெறுகிறது’’ என்றார்கள்.
‘`அனைத்துத் துறைகளிலும் இடமாறுதலுக்குத் தடை என்றொரு முடிவை எடுத்தால் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகள் தவிர்க்கப்படும்தானே?’’ என்று தமிழக பா.ஜ.க-வின் மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசினோம். ‘‘மத்திய அரசின் ஓர் அமைச்சகத்தில் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார்கள் என்றால், கண்டிப்பாக பிரதமர் அலுவலகத்தில் அனுமதி வாங்கித்தான் எடுத்திருப்பார்கள். மற்ற அமைச்சகத்திலும் இதுகுறித்து யோசித்து வருவார்கள். ஆனால், ஒவ்வோர் அமைச்சகத்தின் நிர்வாக முறை என்பது வேறானது. அதைப் பொறுத்துதான் முடிவெடுப்பார்கள். ஆனாலும், மத்திய அரசு ஒட்டுமொத்தமாக இப்படியொரு முடிவெடுக்க விரைவில் வாய்ப்பிருக்கிறது என்றே நினைக்கிறேன்’’ என்றார்.