Published:Updated:

கனிமொழி குறித்த ஹெச்.ராஜாவின் பதிவு... ரவிக்குமார் எம்.பி-யின் பதில்... உண்மை என்ன? #VikatanFactCheck

கனிமொழி
கனிமொழி

ஹெச்.ராஜா அந்த ட்விட்டர் பதிவில், ``திரு.தேவிலால் தமிழகம் வந்தபோது அவரது இந்தி உரையைத் தமிழில் மொழிபெயர்த்தது கனிமொழி அவர்கள்" என்று பதிவிட்டிருந்தார். ஆனால், உண்மை என்ன?

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் தி.மு.க-வின் மகளிரணிச் செயலாளருமான கனிமொழி, நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டுச் செல்லும்போது, அங்கிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்) தலைமை பெண் காவலர் ஒருவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கனிமொழியிடம் இந்தியில் விவரித்துள்ளார். இதற்குப் பதிலளித்த கனிமொழி, `நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை. ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்' எனக் கூறியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் காவலர், `நீங்கள் இந்தியர்தானே?' எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

பின்னர் இந்தச் சம்பவம் குறித்து கனிமொழி தன் ட்விட்டர் பக்கத்தில்,``எனக்கு இந்தி தெரியாததால், மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரியிடம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கூறினேன். அதற்கு அவர், `நீங்கள் இந்தியர்தானே?’ என்று கேட்டார். இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்பது எப்போதில் இருந்து முடிவு செய்யப்பட்டது என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" எனக் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். உடனே இது விவாதப் பொருளானது. தி.மு.க தலைவர் ஸ்டாலின், ப.சிதம்பரம் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலையா எனத் தமிழ் ஆர்வலர்களும் தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியிருந்தனர்.

இதையடுத்து, டெல்லி விமான நிலையத்தில் கனிமொழி இறங்கியபோது, சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவத்துக்கு சி.ஐ.எஸ்.எஃப் சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை, தனது ட்விட்டர் பதிவில், ``உங்களுடைய விரும்பத்தகாத அனுபவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எந்தவொரு மொழியையும் வலியுறுத்துவது மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் கொள்கை அல்ல" எனப் பதிவிட்டிருந்தது.

இதோடு இந்தச் சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது என நினைத்துக் கொண்டிருந்த வேளையில், சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை இப்போதே தொடங்கிவிட்டார் கனிமொழி என பா.ஜ.க தலைவர்கள் கருத்து தெரிவிக்க, விவாதம் இன்னும் சூடுபிடித்தது. பா.ஜ.க மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ``தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 8 மாதங்கள்தான் இருக்கின்றன. இப்போது இருந்தே தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்டது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

கனிமொழி அவர்களின் ட்வீட் ஒரு பொய் மொழி. ஏனெனில் திரு.தேவிலால் 1989ல் தமிழகம் வந்த போது அவரது இந்தி உரையை தமிழில்...

Posted by H Raja on Monday, August 10, 2020

விமானங்களில் பயணிக்கும் நபர்களிடம் செக்யூரிட்டி நபர்கள் மொழி குறித்து பேசுவதில்லை. ஆனால் தூத்துக்குடி எம் பி யின் ட்வீட்...

Posted by H Raja on Monday, August 10, 2020

தொடர்ந்து, பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, ``கனிமொழி அவர்களின் ட்வீட் ஒரு பொய் மொழி. ஏனெனில், திரு.தேவிலால் 1989-ல் தமிழகம் வந்தபோது அவரது இந்தி உரையைத் தமிழில் மொழிபெயர்த்தது கனிமொழி அவர்கள். எனவே, அவருக்கு இந்தி தெரியாது என்று பொய்யுரைத்துள்ளது போல் சம்பவமே மலிவான மொழி சர்ச்சையே என்பது தெளிவு. தேசிய கல்விக் கொள்கை பற்றிய சர்ச்சையைத் தி.மு.க மற்றும் அதன் இலவச இணைப்புகள் எழுப்பியதும் இவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி போதிக்கப்படுவது மற்றும் இவர்கள் குழந்தைகள், பேரக் குழந்தைகள் 3 மொழிகள் படிப்பது பற்றி நாம் கேள்வி எழுப்பியதும் தங்கள் போலி முகத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியே இந்த பொய் மொழி'' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், ``விமானங்களில் பயணிக்கும் நபர்களிடம் செக்யூரிட்டி நபர்கள் மொழி குறித்து பேசுவதில்லை. ஆனால், தூத்துக்குடி எம்.பி-யின் ட்வீட் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சி.ஐ.எஸ்.எஃப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அது கனிமொழி அவர்களையும் அழைத்து விசாரிக்க வேண்டும். ஏனெனில், தற்போது கறுப்பர் கூட்டம் என்கிற அயோக்கியன்கள் கூட்டத்தின் கயமையைக் கண்டித்து எழுந்துள்ள எழுச்சியைத் திசை திருப்பும் முயற்சியாகவும் இது இருக்கலாம்'' என்றும் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

பெண் காவலரின் சர்ச்சைப் பேச்சு; கண்டித்த ப.சி! - உயர் அதிகாரிக்கு கனிமொழியின் வேண்டுகோள்

இந்தநிலையில் இந்தச் சம்பவம் குறித்து, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தன் முகநூல் பக்கத்தில் `ஒரு ஃபேக் நியூஸ் ஒரு விளக்கம்' என்கிற தலைப்பில் விளக்கமொன்றை பதிவு செய்திருக்கிறார். அதில் ``1989-ல் தேவிலால் சென்னை வந்தபோது அவர் சென்னை கடற்கரைக் கூட்டத்தில் இந்தியில் பேசியதாகவும் அதைக் கனிமொழி அவர்கள் அப்போது தமிழில் மொழிபெயர்த்ததாகவும் ஒரு பொய்ச் செய்தியை சில நபர்கள் சமூக வலைதளங்களில் பரப்பிக்கொண்டுள்ளனர். அதுகுறித்து மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களிடம் கேட்டேன். ``நான் தமிழும் ஆங்கிலமும்தான் கற்றேன்" என்று பதில் சொன்னார்'' என்று கருத்து தெரிவித்துள்ளார். ``ஹெச்.ராஜாவின் இந்தக் கருத்து ஆதாரமற்றது'' எனக் கனிமொழி கருத்து தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு ஃபேக் நியூஸ் ஒரு விளக்கம் 1989 இல் தேவிலால் சென்னை வந்தபோது அவர் சென்னை கடற்கரைக் கூட்டத்தில் இந்தியில்...

Posted by Ravi Kumar on Monday, August 10, 2020

இந்தச் சம்பவத்தின் உண்மைத்தன்மையை நாம் ஆராய்ந்தோம்.

அப்போதைய ஹரியானா முதல்வர் தேவிலால் 1988-ம் ஆண்டில்தான் சென்னை வந்ததாக `இந்தியா டுடே' பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், ஹெச்.ராஜா அந்த ட்விட்டர் பதிவில், ``திரு.தேவிலால் தமிழகம் வந்தபோது அவரது இந்தி உரையைத் தமிழில் மொழிபெயர்த்தது கனிமொழி அவர்கள்" என்று பதிவிட்டிருந்தார். ஆனால், அந்த `இந்தியா டுடே' செய்தியில், ``மெட்ராஸ் மெரினா கடற்கரையில் தி.மு.க ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்வில், தேவிலால் இந்தியில் பேச ஆரம்பித்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதால் ஆங்கிலத்தில் பேசினார்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும், கனிமொழி கூட்டத்தில் கருணாநிதிக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பதாகப் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் சுற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால், இது நடிகர் சிவகுமாரின் வீட்டில், அவருடைய ஓவியத்தைக் காண்பதற்காக, கருணாநிதியும் கனிமொழியும் சென்றபோது எடுத்த புகைப்படம் என நடிகர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

கட்சி சார்பாக தவறான தகவல்களை, அந்தக் கட்சியின்பால் தீரா அன்பு கொண்ட தொண்டர்கள் செய்து வந்த நிலை தாண்டி, ஒரு கட்சியின் முக்கியப் பிரமுகரே செய்வது வேதனைக்குரியது. அதே சமயம், மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற வள்ளுவன் குறலுக்கேற்ப செய்தியின் உண்மைத் தன்மை அறிந்து பகிர்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

அடுத்த கட்டுரைக்கு