திஷாவுக்கு எதிராக மதவெறுப்பு பிரசாரம்; நிகிதாவுக்கு ஜாமீன்...`டூல்கிட்' விவகாரத்தில் என்ன நடக்கிறது?

திஷாவின் முழுப் பெயர் திஷா ரவி `ஜோசப்' என்ற வதந்திகள் ஒரு புறம் கிளம்பிக்கொண்டிருக்க, நிகிதாவுக்கு பெயில் வழங்கியுள்ளது மும்பை உயர் நீதிமன்றம். என்னதான் நடக்கிறது?
டெல்லி விவசாய போராட்டம் தொடர்பாக ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க் பகிர்ந்த `டூல்கிட்' தொடர்பாக, பெங்களூரைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டார். இதே காரணத்துக்காக மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப் மீது ஜாமின் பெற முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தது டெல்லி காவல்துறை.
இந்நிலையில், திஷாவின் முழுப் பெயர் திஷா ரவி `ஜோசப்' என்ற வதந்திகள் ஒரு புறம் கிளம்பிக்கொண்டிருக்க, நிகிதாவுக்கு பெயில் வழங்கியுள்ளது மும்பை உயர் நீதிமன்றம். என்னதான் நடக்கிறது?
பெங்களூரைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர், 22 வயதேயான திஷா ரவி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பெங்களூரு போலீஸாருக்கு கடைசி வரை தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக எல்லாவற்றையும் செய்து முடித்திருக்கின்றனர் டெல்லி காவல்துறையினர்.
திஷா ரவி கைது செய்யப்பட்டு விமானத்தில் ஏற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகுதான் பெங்களூரு காவல்துறைக்கு விஷயமே தெரிய வந்திருக்கிறது. இதற்காக 2 பெண் போலீஸார் உட்பட 5 பேர் கொண்ட போலீஸ் குழு டெல்லியிலிருந்து பெங்களூரு வந்து வடக்கு பெங்களூரில் உள்ள சிக்கபனவரா பகுதியில் வசித்து வரும் திஷா ரவியின் வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்து டெல்லி கொண்டு சென்றுள்ளது.

இதில், திஷா வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் அவரது லேப்டாப் மற்றும் மொபைல் போனை ஆய்வு செய்தனர். ஒருவர் நடந்த நிகழ்வு முழுவதையும் வீடியோவில் படமாக்கினார். பிறகு இந்த வழக்கு தொடர்பாக திஷா கைது செய்யப்பட்டது தொடர்பாக அவரின் தாயார் மஞ்சுளாவிடம் ஒரு காவலர் கையெழுத்து வாங்கினார்.
இத்தனை நடந்தும் எதுவும் பெங்களூரு போலீஸாருக்குத் தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டெல்லி போலீஸார், ``டூல்கிட்டை உருவாக்கியவர்களில் திஷாவும் ஒருவர். அவரை போலீஸார் டெல்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் இவர்தான் முதல் கைது. மேலும் சிலருக்கும் இதில் தொடர்பு உள்ளது" எனத் தெரிவித்திருக்கின்றனர்.
திஷாவை டெல்லி கோர்ட் 5 நாள் போலீஸ் காவலில் அனுமதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் சாந்தனு மற்றும் நிகிதா ஜேக்கப் என மேலும் 2 பேரை போலீஸார் தேடி வந்தனர். இது தொடர்பாக மும்பை மற்றும் வேறு சில இடங்களில் ரெய்டுகள் நடந்தன. இவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே, திஷா ரவி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள், பல்வேறு பிரிவு ஆர்வலர்கள் புகார் கூறியுள்ளனர். இதுதொடர்பாக கர்நாடக டிஜிபி அனுசேத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக திஷா ரவி விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இது தொடர்பாக பெங்களூரை சேர்ந்த வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு டிஜிபி அனு சேத்திடம் புகார் மனு அளித்துள்ளது.

அதில், ``கைது வாரன்ட் உத்தரவு, தேடுதல் வாரன்ட் உத்தரவு, முதல் தகவல் அறிக்கையின் நகல், கைது செய்யப்பட்டபோது இருந்த பொது சாட்சி, போலீஸ் டயரி உள்ளிட்டவற்றை பகிரங்கமாக வெளியிட வேண்டும்.
திஷாவுக்கு தனது வக்கீலுடன் ஆலோசிக்கக்கூட அவகாசம் வழங்கப்படவில்லை. பெங்களூரு போலீஸார் திஷா ரவிக்கு சட்ட ரீதியாக செய்ய வேண்டிய உரிமைகளை செய்து தரவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், 70-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட மனு டிஜிபியிடம் அளிக்கப்பட்டுள்ளது. திஷாவை அருகில் உள்ள மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தாமல் நேரடியாக டெல்லிக்குக் கூட்டிச் சென்றது மிகப் பெரிய சட்ட மீறல் என்றும் இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் நிறுத்தப்பட்ட திஷா ரவி நீதிபதி முன்பு உடைந்து அழுதுள்ளார். கிரெட்டா துன்பர்க் வெளியிட்ட டூல் கிட்டில் 2 வரிகளை மட்டுமே தான் திருத்தி வெளியிட்டதாக அவர் கூறினார்.
யார் இந்த திஷா ரவி?
பெங்களூரைச் சேர்ந்த திஷா, மவுன்ட் கார்மல் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர். கடந்த 2018-ம் ஆண்டில் கிரெட்டா துன்பெர்க்கால் தொடங்கப்பட்ட `எதிர்காலத்துக்கான வெள்ளிகள் (Fridays For Future)' என்ற காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு குழுவில் பங்களித்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டில் `எதிர்காலத்துக்கான வெள்ளிகள்' இந்திய பிரிவைத் தொடங்கி அதன் நிறுவனர் ஆனார்.
திஷா காலநிலை மாற்றம் குறித்து இந்தியா முழுவதும் பல்வேறு பிரசாரங்களையும் ஒருங்கிணைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், காலநிலை பிரச்னைகள் குறித்து பெங்களூரில் போராட்டங்களை நடத்தியுள்ளார். காலநிலை மாற்றத்தின் பாதகமான தாக்கங்கள் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு ஊடகங்களில் எழுதியுள்ளார்.
சுற்றுச்சூழல் நீதிக்கான இந்திய அமைப்பு திஷா ரவி கைது குறித்து கூறுகையில், ``இது மிகவும் அநீதியானது, அவரை எங்கு வைத்துள்ளனர் என்றுகூட தெரிவிக்கவில்லை" என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலுமிருந்து 78 சுற்றுச்சூழல், சமூக ஆர்வலர்கள் கையெழுத்திட்ட கூட்டறிக்கை ஒன்றையும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், `திஷாவின் முழுப்பெயர் திஷா ரவி ஜோசப். அவர் ஒரு கிறிஸ்துவர்' என்று சொல்லி நூற்றுக்கணக்கான ட்வீட்கள் பதிவு செய்யப்பட்டன. திஷாவின் குடும்பம் அதை மறுத்து, திஷா ஓர் இந்து எனவும், அவரின் முழுப்பெயர் திஷா அன்னப்பா ரவி என்றும் விளக்கம் கொடுத்துள்ளது. `டூல்கிட் பிரச்னைக்கும் திஷாவின் மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தால் என்ன? அவர் மீதான வெறுப்பைத் தூண்ட மதம் அரசியலாகப் பயன்படுத்தப்படுவது கண்டனத்துக்கு உரியது' என்று திஷா தரப்பும், சமூக ஆர்வலர்களும் வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில், கிரேட்டா துன்பெர்க் டூல்கிட் வழக்கில் மற்றொரு ஆர்வலரான, மும்பை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப் மீது டெல்லி காவல்துறையினர் ஜாமின் பெற முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை அறிந்த நிகிதா ஜேக்கப் தலைமறைவாக உள்ளதாகவும், அவருக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பித்துள்ளதாகவும் தலைநகர வட்டாரங்கள் தெரிவித்தன.
நிகிதா ஜேக்கப்பை கைது செய்ய டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு தேடி வருவதாகவும், ஏற்கெனவே கடந்த 11-ம் தேதி காவல்துறையின் ஒரு குழு, நிகிதா ஜேக்கப்பின் வீட்டுக்குச் சென்று தேடியதாகவும், ஆனால் மாலை நேரத்தில் வந்ததால், அதிகாரிகளால், பெண்ணான நிகிதா ஜேக்கப்பிடம் விசாரணை நடத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நிகிதா ஜேக்கப் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.

நிகிதா ஜேக்கப்பின் பின்னணி என்ன?
30 வயதான நிகிதா ஜேக்கப் ஒரு வழக்கறிஞர். 7 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லாத இவர் ஒரு என்ஜிஓ மூலமாக சுற்றுச்சூழல் ஆர்வலராகச் செயல்பட்டு வருகிறார்.
புனேவில் உள்ள ஐஎல்எஸ் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தவர் நிகிதா. சிவில் கேஸ்களைக் கையாண்டு வருகிறார். இவர் கடைசியாக ஜூனியராகப் பணியாற்றியது மூத்த வழக்கறிஞர் கிரிஷ் கோட்பலேவின் அலுவலகத்தில்தான். அவர் நிகிதா குறித்து கூறுகையில், ``இந்த விவகாரமே ஆச்சர்யமாக இருக்கிறது. என்னிடம் 3 வருடங்கள் ஜூனியராகப் பணியாற்றினார் நிகிதா. வேலையில் கெட்டிக்காரர். ஆனால், அவர் மீது இப்படி ஒரு கிரிமினல் வழக்கு வரும் என்று நாங்கள் நினைத்ததே இல்லை'" என்றிருக்கிறார்.
நிகிதாவுக்கு ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்பு இருப்பதாக டெல்லி போலீஸார் கூறியுள்ளதை, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ப்ரீத்தி சர்மா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ``மும்பையில் அப்படி ஒரு பெயரைக்கூட நாங்கள் கேள்விப்பட்டதில்லை. எங்களது கட்சியிலும் நிகிதா என்ற பெயரில் யாரும் இல்லை. எங்களது சட்ட அணியில் கூட யாரும் இல்லை" என்று தெரிவித்துள்ளார். அதேபோல, ஆம் ஆத்மி தலைவர் சத்தாவும்கூட நிகிதாவின் பெயரில் யாரும் தனது கட்சியில் இல்லை என்றிருக்கிறார்.

டெல்லி சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து நிகிதாவின் சமூக வலைதளப் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. அவரது லிங்க்ட்இன் பக்கத்தில், அவர் எஸ்.கே. லீகல் அசோசியேட்ஸ் நிறுவனத்திடம் 2 வருடங்களுக்கு பணியாற்றியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்றம் நிகிதாவுக்கு இன்று பெயில் வழங்கியுள்ளது. மூன்று வாரங்களுக்குள் நிகிதா டெல்லி கோர்ட்டை அணுக அது அவகாசம் அளித்துள்ளது. நிகிதாவின் வழக்கறிஞர், ``நிகிதா தலைமறைவாகிவிட்டார் என்ற தவறான தகவலின் அடிப்படையில் டெல்லி போலீஸ் அவர் மீது ஜாமீன் பெற முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது" என்று தெரிவித்தார். ``ஒரு நாள் முழுக்க நிகிதாவை தேடியும் காத்திருந்தும், பின்னரே அப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தோம்" என்று டெல்லி போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னர், நிகிதாவுக்கு பெயில் வழங்கியுள்ளது மும்பை உயர் நீதிமன்றம்.
- ஆனந்தி ஜெயராமன்