Published:Updated:

` ஆதார் இருந்தால்தான் சாலையில் நடக்கவே முடியும்!' - உச்சக்கட்ட பாதுகாப்பில் மாமல்லபுரம்

உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் பலமணி நேரமாகத் தவித்தனர். ஆதார்கார்டு இருந்தால் மட்டுமே சாலைகளில் நடந்து செல்ல முடியும்.

மாமல்லபுரம்
மாமல்லபுரம்

மோடி-ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இதனால் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் மாமல்லபுரம் வந்திருக்கிறது. உள்ளூர் பிரமுகர்கள்கூட அருகில் உள்ள வீடுகளுக்குச் செல்ல முடியாதவாறு கெடுபிடிகள் தொடர்கின்றன.

மாமல்லபுரம்
மாமல்லபுரம்

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் சந்திக்கும் வரலாற்று நிகழ்வுக்காக, கடந்த ஒரு மாதமாகவே ஆய்வுகள், தூய்மைப் பணிகள், விழா ஏற்பாடுகள் என விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தன. சீன அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 9-ம் தேதி வெளியுறவுத்துறை அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டது. மோடி மற்றும் ஜின்பிங் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் பற்றிய விவரங்களையும் அறிவித்தனர். நேற்று மாலையில் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் செல்லும் கான்வாய் வாகனங்கள் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இதற்காக நேற்று மாலை 3 மணியிலிருந்து மாமல்லபுரம் நகருக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பூஞ்சேரியிலேயே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு பழைய மாமல்லபுரம் சாலை வழியாகத் திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் வாகனங்களில் சென்ற உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் பலமணி நேரமாகத் தவித்தனர். ஆதார்கார்டு இருந்தால் மட்டுமே சாலைகளில் நடந்து செல்ல முடியும். அதுவும் பல மணிநேரம் காத்திருப்புக்குப் பிறகுதான் அனுப்பப்பட்டார்கள். மாலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாமல்லபுரம் பகுதிகளை ஆய்வு செய்தனர்.

வாகன சொதனை
வாகன சொதனை

ஐந்து ரதம், கடற்கரை கோயில் பகுதிகளில் காய்கறி, பூக்கள் மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்று அதிகாலை முதல் உள்ளூர் மக்களுக்கான கெடுபிடிகள் சற்று தளர்த்தப்பட்டது. மீண்டும் இன்று காலை 10 மணியிலிருந்து சாலைகளில் யாரும் நடமாட முடியாதவாறு கெடுபிடிகள் இருந்துவருகின்றன.

கடைகளில் வேலை செய்யும் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், வெளியூர் நபர்கள் என அனைவரும் மாமல்லபுரத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மத்திய பாதுகாப்புப் படையினர் நேற்று இரவு மாமல்லபுரம் வந்தனர். தொல்லியல் சின்னங்கள், பிரதமர் வரும் வழி என அனைத்துப் பகுதிகளும் மத்திய பாதுகாப்புப் படையின் வசம் வந்துவிட்டது.

நிசப்த நிலையில் உள்ளது மாமல்லபுரம்!