Published:Updated:

`வயது காரணமாக சென்னை மாணவருக்கு நிபந்தனை ஜாமீன்; மகனைக் கெடுத்த தந்தைக்கு ஜாமீன் கிடையாது!'- நீதிபதி

``டாக்டர் வெங்கடேசனுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்புதான் ஜாமீன் மனுவை பரிசீலிக்க முடியும். மகனின் வாழ்க்கையைக் கெடுத்தவர் அவர்தான்''

உயர் நீதிமன்றக் கிளை
உயர் நீதிமன்றக் கிளை

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறையால் முதன்முதலில் கைது செய்யப்பட்ட சென்னை மாணவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.

உயர் நீதிமன்றக்கிளை
உயர் நீதிமன்றக்கிளை

கடந்த செப்டம்பர் 18-ம் தேதி தேனி அரசு மருத்துவக் கல்லூரியில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து பயின்றுவந்த சென்னை மாணவர் ஒருவரும் அவரின் தந்தை டாக்டர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டனர். அதன்பின் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக இதுவரை 5 மாணவர்கள் உட்பட 10 பேர் கைதாகியுள்ளனர்.

அவர்கள் தலைமறைவானபோது தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவையே ஜாமீன் மனுவாக எடுத்துக்கொண்டது உயர்நீதிமன்றக் கிளை. கடந்த 15-ம் தேதி விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் சென்னை மாணவர் தரப்பில், ``உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் படிப்பைத் தொடர முடியவில்லை. அதனால்தான் கடந்த மாதம் 12-ம் தேதி விலகிக்கொள்வதாக கல்லூரி முதல்வரிடம் கடிதம் எழுதிக் கொடுத்தேன்.

நீட்
நீட்

அதோடு கல்லூரிக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன். இந்த நிலையில்தான், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக திட்டமிட்டு என் மீது பழி போடப்பட்டுள்ளது. என் போன்ற வெளியான புகைப்படங்கள் தவறானது. இந்தக் குற்றச்சாட்டில் என் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ய எந்தவித முகாந்திரம் இல்லை. இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இதற்கு அரசுத் தரப்பில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

``இந்த வழக்கில் தந்தையே வில்லனாகி உள்ளார். அது மன்னிக்க முடியாத குற்றம். இந்த வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது" என்று கூறி வழக்கை ஒத்திவைத்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

தேனி மருத்துவக் கல்லூரி
தேனி மருத்துவக் கல்லூரி

சென்னை மாணவரின் வயது காரணமாக அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குவதாகவும், தினமும் மதுரை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் கையொப்பமிட வேண்டும் என்றும் உத்தரவிட்டவர், அவர் தந்தை டாக்டர் வெங்கடேசனுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்புதான் ஜாமீன் மனுவை பரிசீலிக்க முடியும். மகனின் வாழ்க்கையைக் கெடுத்தவர் அவர்தான்'' என்றார்.