Published:Updated:

`டாஸ்மாக்குக்கு ஓகே... விநாயகர் சதுர்த்திக்குத் தடையா?' - கொதிக்கும் இந்து முன்னணி!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களைத் தடை செய்திருக்கிறது தமிழக அரசு. ஆனால், ``டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டவர்கள், விநாயகர் சதுர்த்தியைத் தடை செய்யலாமா...’’ எனக் கொதிக்கின்றனர் இந்து முன்னணியினர்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்றாலே ஆண்டுதோறும் பரபரப்பு பற்றிக்கொள்ளும். இது கொரோனா காலகட்டம் என்பதால், தடை, சவால் என்று கூடுதல் விறுவிறுப்பு வேறு எகிறிவருகிறது.

கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலத்துக்குத் தடைவிதித்து உத்தரவிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. ஆனால், ``தமிழக அரசின் தடைகளைத் தகர்த்து, விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு சிலைவைத்து ஊர்வலம் நடத்துவோம்" என்று சவால் விடுத்திருக்கிறது இந்து முன்னணி அமைப்பு.

``விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சென்னையில் மட்டும் 5,501 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும்'' என்று சூளுரைத்திருக்கிறார் இந்து முன்னணியின் சென்னை மாநகரத் தலைவர் ஏ.டி.இளங்கோவன். அவரிடம் பேசினோம்...

இளங்கோவன்
இளங்கோவன்

`` `தமிழக அரசின் தடையை மீறி, சென்னையில் மட்டும் 5,501 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வோம்’ என்று எந்த நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லியிருக்கிறீர்கள்?''

``வழக்கம்போல், பிரமாண்ட சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கு இந்த ஆண்டு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலைகள் என்றாலும்கூட பரவாயில்லை... கிடைக்கும் சிலைகளையெல்லாம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று இந்து முன்னணியின் சார்பில் முடிவு செய்திருக்கிறோம். நிச்சயம் செய்து முடிப்போம்!''

``விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவல்லிக்கேணியில் நடைபெற்ற காப்பு கட்டும் நிகழ்ச்சியில், இந்து முன்னணியினரின் `பந்தல்கால் நடும்' முயற்சியை போலீஸார் தடுத்துவிட்டனரே..?''

``காப்பு கட்டுகிற பெரும்பான்மையான இடங்களில் பந்தல்கால் நடும் பழக்கமும் இருக்கும். சில இடங்களில் வேண்டுமானால் அது போன்ற பழக்கங்கள் இருக்காது. அப்படிப் பார்க்கும்போது, `புதுப்பேட்டை’ என்று சொல்லக்கூடிய கோமளீஸ்வரன் பேட்டையில் பந்தல்கால் நட்டுவிட்டோமே...’’

விநாயகர்
விநாயகர்

``தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்பது, மதக் கலவரத்தை ஏற்படுத்தி, அ.தி.மு.க அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் முயற்சி என்கிறார்களே..?''

``விநாயகர் சதுர்த்தி என்றாலே மதக்கலவரம் என்று சொல்லக்கூடியவர்கள், மற்ற மதப் பண்டிகைகளைப் பற்றி எதுவும் சொல்வதில்லையே ஏன்? அண்மையில்கூட, தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலயத் திருவிழாவை நடத்தியிருக்கிறார்கள். கலெக்டர், எஸ்.பி முன்னிலையிலேயே, விழா பற்றி பாதிரியார் பேட்டியே கொடுக்கிறார். இப்படி, பனிமய மாதா திருவிழா நடைபெறுவதற்கு அரசே உறுதுணையாக இருக்கிறது. ஆனால், எங்களை மட்டும் கேள்வி கேட்கிறீர்களே ஏன்?''

``கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பனிமய மாதா திருவிழா நடைபெறுகிறது. ஆனால், நீங்கள் தமிழக அரசு விதித்திருக்கும் தடையை மீறுவோம் என்கிறீர்களே?''

`` `கொரோனா தடுப்புக்கான அரசின் விதிமுறைகளை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்’ என்று ஏற்கெனவே நாங்கள் தெரிவித்துவிட்டோம். ஆனாலும், `பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடக் கூடாது' என்கிறது தமிழக அரசு. நாங்களோ எங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காமல் `வருடந்தோறும் ஏற்கெனவே சிலை அமைக்கப்பட்ட இடங்களில் விநாயகர் சிலையை நிறுவி வழிபடுவோம்’ என்கிறோம். இது ஒன்றுதான் இரு தரப்புக்கிடையிலான பிரச்னை.’’

விநாயகர் சிலைகள்
விநாயகர் சிலைகள்

``கொரோனா காலகட்டத்தில், `பொது இடங்களில் சிலை நிறுவக் கூடாது; கூட்டம் கூடக் கூடாது' என்ற அரசு உத்தரவை நீங்கள் மீறுவது எந்தவகையில் நியாயம்?’’

``சிறுபான்மையினரின் திருவிழா என்றால், கலெக்டரும் எஸ்.பியுமே உடனிருந்து விழாவை நடத்திக் கொடுப்பீர்கள். ஆனால், இந்து மதப் பண்டிகை என்றால் மட்டும், `அனுமதிக்க மாட்டோம்' என்று சொல்வதற்கு நீங்கள் யார்? டாஸ்மாக்கைத் திறந்துவிட்ட அரசுக்கு, ஒரேயொரு நாள் விநாயகர் சதுர்த்தியை நடத்துவதற்கான அனுமதியைக் கொடுப்பதில் மட்டும் என்ன தப்பு வந்துவிடப் போகிறது?''

``அரசு உத்தரவுக்கு எதிராகச் செயல்பட்டு பரபரப்பை உண்டு பண்ணுவதும், அதன் மூலம் அரசுக்கு நெருக்கடியைக் கொடுப்பதுவும்தான் உங்கள் திட்டம் என்கிறார்களே?''

``எங்கள்மீது குற்றச்சாட்டு வைப்பவர்களின் பின்னணி என்ன என்பது எங்களுக்குத் தெரியும். ஓட்டுப் பிச்சை எடுப்பவர்களைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. `இந்து முன்னணி', அரசியல் கட்சி அல்ல. யாரிடமும் ஓட்டு கேட்டுப்போய் நாங்கள் நிற்பதும் கிடையாது. அ.தி.மு.க-வோ, தி.மு.க-வோ... யாருடைய ஆட்சியென்றாலும் இந்துக்களின் உரிமைக்கு பிரச்னை வரும்போது போராடும் இயக்கம்தான் எங்கள் இயக்கம்.''

விநாயகர் சிலைகள்
விநாயகர் சிலைகள்

``உயிரைப் பறிக்கும் தொற்றுநோய் சென்னையில் அதிதீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கும் சூழலில், இதுபோல் நீங்கள் பிடிவாதமாகச் செயல்படுவதை சாமானிய மக்களே ஏற்றுக்கொள்வார்களா?''

``சாமானிய மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை... ஏற்றுக்கொள்ளாமலிருந்தால், இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், டாஸ்மாக்கைத் திறந்துவைத்த அரசு, `சாமி கும்பிடக் கூடாது' என்று சொல்வது எந்தவகையில் நியாயம்? அ.தி.மு.க., தி.மு.க என இந்த இரண்டு அரசாங்கங்களுமே இந்துக்களுக்கு எதிராகச் செயல்படக்கூடிய அரசாங்கங்கள்தான்.’’

தூத்துக்குடி: `4 வாரங்களில் 25 வழக்குகள்; 34 பேர் கைது!’ - பதறவைக்கும் போதைப் பொருள் கடத்தல்

``பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இந்து மக்களுக்கு விரோதமாக தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் ஏன் செயல்பட வேண்டும்?''

``தி.மு.க இந்துக்களின் விரோதி; அ.தி.மு.க இந்துக்களின் துரோகி. ஏனெனில், இந்து கோயில்களின் சொத்துகளைக்கூட அறநிலையத்துறை வசம்தான் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். கோயில் வருமானத்துக்கு இவர்களிடம் கணக்கு இல்லை. இந்து கோயில் நிலங்களை இந்த இரண்டு கட்சிகளுமே வாரியிறைத்துக் கொண்டிருக்கின்றன. இந்து மக்கள் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதற்காக சாதிரீதியாக அவர்களைப் பிரித்தாள்கிற சூழ்ச்சியையும் இந்த இரண்டு கட்சிகளும் செய்துவருகின்றன.''

விநாயகர் சிலைகள்
விநாயகர் சிலைகள்

``சாதிரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி வைத்திருப்பதே இந்து மதம்தான் என்று எதிர்த்தரப்பினர் சொல்கிறார்களே..?''

``ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தோன்றியதைப் பற்றி இப்போது பேசி பிரயோஜனம் இல்லை. `காய்த்த மரம்தான் கல்லடி படும்’ என்பதுபோல, பழைமையான இந்து மதத்தைப் பற்றி எல்லோரும் குறை சொல்கிறார்கள். மற்றபடி திராவிடக் கட்சிகள்தான் மாவட்டச் செயலாளர்களில் ஆரம்பித்து வேட்பாளர் தேர்வு வரை சாதி பார்த்து நியமிக்கிறார்கள்.''

வேலூர்: `காட்டன் மாஃபியா; குற்ற வழக்கு!’ - 2 தி.மு.க நிர்வாகிகள் பதவிப் பறிப்பு பின்னணி

`` இட ஒதுக்கீட்டு உரிமையை மீட்டெடுக்கப் போராடாத இந்து அமைப்புகள், மதரீதியாக மட்டுமே மக்களைப் பிளவுபடுத்துவதாக திராவிடக் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே..?''

``அப்படித்தான் சொல்வார்கள். அண்மையில், பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமைக்காக நாங்கள் நீதிமன்றம் சென்று போராடவில்லை என்று அவர்கள் சொல்வதெல்லாம் நியாயமான விஷயம்தான். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் சாதியினருக்கான 10 சதவிகிதத்தினருக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்றுதான் நாங்கள் சொல்கிறோம். ஆனால், திராவிடக் கட்சிகளோ நாடாளுமன்றத்தில் ஏற்பு தெரிவித்துவிட்டு, வெளியில் வந்து அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டோடு போராடிக்கொண்டிருக்கின்றன. இது இரட்டை நிலைப்பாடு!''

அடுத்த கட்டுரைக்கு