Published:Updated:

`ஜெயலலிதா உதவினார்; எடப்பாடி கண்டுகொள்ளவில்லை!' - வேதனையில் ஹெச்.ஐ.வி நோயாளிகளின் குடும்பங்கள்

சகாயராஜ் மு

`தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 2 லட்சம் பேர் இருக்கின்றனர். இவர்களைச் சார்ந்து 8 லட்சம் பேர் உள்ளனர். அவர்களின் நல்வாழ்வுக்குத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற குரல் எழுந்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு மாநில ஹெச்.ஐ.வி பாஸிட்டிவ் கூட்டமைப்பின் தலைவர் பால்ராஜிடம் பேசினோம். "ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயம், விபத்தின் மூலம் ஏற்படும் காயங்கள், டயாலிசிஸ், தலைக் காயம், எலும்பு முறிவு உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு 5 லட்ச ரூபாய் வரையில் செலவாகிறது. இதற்காகத் தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தின்படி 4 லட்ச ரூபாய் வரையில் கிடைப்பதற்கு அரசு உத்தரவிட வேண்டும். மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கிடைப்பதற்கும் வழிவகை செய்ய வேண்டும். இதன்மூலம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நல்லபடியாக உயிர் வாழ்ந்து அவர்களுடைய குடும்பத்தினரைக் காப்பாற்றவும் உதவியாக இருக்கும்.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் நிதி உதவியுடன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளைப்பாறுதல் (DIC) திட்டம் வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் உலக வங்கி நிதிக் குறைப்பின் காரணமாக 2012-ம் ஆண்டு நிறுத்தப்பட்டுவிட்டது. அதனால் பல ஆயிரக்கணக்கானோர் சேவை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் கூட்டமைப்பு

ஹெச்.ஐ.வி உள்ளவர்களுக்குச் சிறப்பு சிகிச்சை, சத்தான உணவு, மனரீதியான ஆதரவு மற்றும் ஏ.ஆர்.டி மருந்தால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு ரத்தசோகை, கல்லீரல் செயல்பாடு (liver function), தோல் அலர்ஜி, காசநோய், நிமோனியா காய்ச்சல், மூளைக் காய்ச்சல், தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கான சிகிச்சையை மேற்கொள்ளும் வகையில் சமூகசேவை மனப்பான்மை கொண்ட தொண்டு நிறுவனங்களுக்கு அரசு உதவ வேண்டும்.

ஆதரவற்ற நிலையில் உள்ள நிலையில் உள்ள ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெரியவர்கள், குழந்தைகள் அனைவருக்கும் மண்டலவாரியாக ஒருங்கிணைந்த பராமரிப்பு மையத்தைக் கொண்டு வருவதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். நோயின் தன்மையால் முடியாமல் இருக்கும் ஆண்கள், பெண்களை அரசு உதவி பெறும் ஆதரவற்ற மையங்களில் சேர்த்துக்கொள்வதில்லை. இதனால் பலர் அநாதையாக இறந்துவிடுகின்றனர்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வளவு எளிதாக வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை. வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு தமிழக அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி உதவினால் சிறப்பாக இருக்கும். ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு இலவச உயர்கல்வி கற்பதற்கு புதிய திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இப்படிச் செயல்படுத்தும்போது பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயர்கல்வி பெற்று வாழ்க்கையைச் செம்மையாக நடத்துவதற்கு இயலும்.

எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவரின் குழந்தைகள் பல ஆண்டுகளாகப் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கின்றனர். இக்குழந்தைகளுக்குத் தொழிற்பயிற்சி கிடைப்பதற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் நிதி உதவியுடன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளைப்பாறுதல் (DIC) திட்டம் வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் உலக வங்கி நிதிக் குறைப்பின் காரணமாக 2012-ம் ஆண்டு நிறுத்தப்பட்டுவிட்டது. அதனால் பல ஆயிரக்கணக்கானோர் சேவை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு மாநில ஹெச்.ஐ.வி பாஸிட்டிவ் கூட்டமைப்பின் தலைவர் பால்ராஜ்
தமிழ்நாடு மாநில ஹெச்.ஐ.வி பாஸிட்டிவ் கூட்டமைப்பின் தலைவர் பால்ராஜ்

மேலும் ஹெச்.ஐ.வி நோய்த் தொற்றின் சதவிகிதமும் அதிகரித்து வருகிறது. ஆந்திரா, புதுச்சேரியில் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம்தோறும் 2,000 ரூபாய் பென்ஷன் கொடுக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் மட்டும் 1,000 ரூபாய் கொடுக்கிறார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. உழவர் பாதுகாப்பு திட்டத்திலும் சென்னை நீங்கலாக எனக் குறிப்பிட்டுள்ளனர். சென்னையிலும் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உழவர் அட்டையே கிடையாது. உழவர் அட்டை இருந்தால்தான் பென்ஷன் என்று சொல்கிறார்கள். உழவர் அட்டை 10 வருடங்களாகக் கொடுக்கவே இல்லை. இதுதொடர்பாகப் பல கோரிக்கைகளை முதல்வருக்கு அனுப்பியிருக்கிறோம். முதல்வரை நேரில் சந்திக்கவும் நேரம் கேட்டிருந்தோம்.

முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்திருந்தோம். அந்த மனுக்களை அதிகாரிகள், முதல்வருக்கு அனுப்பாமல் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பிவிடுகிறார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மனுவை கிடப்பில் போட்டுவிடுகின்றனர். தற்போது சட்டப்பேரவை நடப்பதால் முதல்வரின் பார்வைக்குக் கொண்டு செல்கிறோம்" என வேதனையோடு பேசி முடித்தார். இதுதொடர்பாக, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் திட்ட இயக்குநர் டாக்டர் கே.செந்தில் ராஜிடம் பேசினோம். "தமிழகத்தில் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட 1,00,018 பேருக்கு சிகிச்சை அளித்துக்கொண்டு இருக்கிறோம். 55 இடங்களில் ஏ.ஆர்.டி சென்டர் இருக்கிறது. அங்கு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம்
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம்

மாத்திரை வாங்காதவர்களுக்கு மாவட்ட ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் (positive) கூட்டமைப்பினர் மூலம் கவுன்சலிங் கொடுத்து அவர்களை மீண்டும் அழைத்து வந்து மருந்து, மாத்திரைகளைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். அவர்கள் வந்து செல்வதற்காகத் தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் மூலம் இலவச பஸ் பாஸ் கொடுத்துள்ளோம். உழவர் பாதுகாப்பு அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் உதவி செய்து வருகிறோம். கணவரை இழந்தவர்களுக்கு பென்ஷன் பெற்றுத் தருகிறோம். கூட்டமைப்பினர் கூறும் குறைகளைப் படிப்படியாக நிவர்த்தி செய்து வருகிறோம்" என்றதோடு முடித்துக் கொண்டார்.