Published:Updated:

அலட்சிய பதில், மிக மோசமான சேவை; யாருக்காகச் செயல்படுகிறது ஆதார் சேவா கேந்திரா?

Aadhaar Registration
News
Aadhaar Registration ( Photo: Vikatan )

எங்கு சென்றாலும் ஆதார் கட்டாயம் என்று அறிவித்துவிட்டார்கள். ஆனால், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள சேவை மையத்தை அணுகுவோரைத் தெருவில் நிறுத்தித் திண்டாட வைக்கின்றனர். இந்த அவலத்தை யாரிடம் சென்று முறையிடுவது?

அலட்சிய பதில், மிக மோசமான சேவை; யாருக்காகச் செயல்படுகிறது ஆதார் சேவா கேந்திரா?

எங்கு சென்றாலும் ஆதார் கட்டாயம் என்று அறிவித்துவிட்டார்கள். ஆனால், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள சேவை மையத்தை அணுகுவோரைத் தெருவில் நிறுத்தித் திண்டாட வைக்கின்றனர். இந்த அவலத்தை யாரிடம் சென்று முறையிடுவது?

Published:Updated:
Aadhaar Registration
News
Aadhaar Registration ( Photo: Vikatan )

ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்காகக் கடந்த 7-ம் தேதியன்று கோயம்பேடு பேருந்து நிலையம் அருகிலிருக்கும் `டென் ஸ்கொயர்' மாலில் செயல்படும் ஆதார் சேவை மையத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். பெயர்தான் சேவை மையம். `சேவை என்றால் கிலோ என்ன விலை?' என்று கேட்கும் அளவுக்குத்தான் அங்கிருந்த ஒவ்வோர் ஊழியரும் நடந்துகொண்டார்கள்.

காத்திருக்கும் இடத்தில் ஆதார் சம்பந்தமான வழிகாட்டல்களும் நம் கண்ணில் படவில்லை. சேவை மையத்தைத் தேடி வருபவர்களுக்கு வழிகாட்டுவதற்காக வரவேற்பறை மற்றும் தகவல் பரிமாறும் இடம் போன்ற தோற்றத்தில் ஒரு மேஜை இருந்தது. ஆனால், மணிக்கணக்காகக் காத்திருந்தும் அங்கே எவரும் வரவில்லை. மொத்தத்தில் `யாருக்காகவோ’ செயல்படுவது போலிருந்தது அந்த சேவை மையத்தின் தோற்றமும் அதன் நடைமுறைகளும்.

ஆதார் சேவா கேந்திரா சென்னை
ஆதார் சேவா கேந்திரா சென்னை

நீண்ட நேரத்துக்குப் பிறகு, முதல் மாடிக்குச் செல்ல வேண்டும் என்று ஒரு புண்ணியவான் வழிகாட்டினார். அங்கு சென்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஊழியர்கள் என்று யாரையும் காணவில்லை. வழிகாட்டுவதற்கு என்று தனியாகப் பணியாளர்களும் அங்கு இல்லை. கையில் துடைப்பத்துடன் இருந்த ஒரு பெண்ணிடம் கேட்டதற்கு, `என்ன வேண்டும்?’ என்று வழக்கமான அரசு அலுவலகத்துக்கே உரிய மிரட்டல் குரலில் கேட்டார். ` ஆதாரில் முகவரி மாற்றம் செய்ய வேண்டும்.' என்றோம்.

ஆன்லைனில் `ரிஜிஸ்டர் செய்தாச்சா?’ என்று கேட்டார். `இல்லை. அதுகுறித்து தெரியவில்லை' என்றோம். எங்களை மேலும் கீழுமாகப் புழுவைப் போல பார்த்த அவர், `கீழே போய் ஃபார்ம் வாங்கிட்டு வாங்க’ என்றார். மீண்டும் கீழ் தளத்துக்குச் சென்றோம். ஆங்காங்கே ஆளாளுக்கு நடமாடுகிறார்களே தவிர, நின்று பதில் சொல்ல யாரும் தயாராய் இல்லை. யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட ஆளுள்ள அத்துவானக் காடு!

ஆதார் சேவா கேந்திரா சென்னை
ஆதார் சேவா கேந்திரா சென்னை

ஒரு வழியாய் ஊழியரைப் போல தெரிந்த ஒரு பெண்ணைத் தேடி(?)க் கண்டுபிடித்து ஃபார்ம் வேண்டும் என்றபோது, எமர்ஜென்சி படிக்கட்டு பக்கமாகக் கைகாட்டி அங்கே போகச் சொன்னார். அங்கே சென்றால் ஏறக்குறைய மூத்திரச் சந்து எஃபெக்ட்! படிக்கட்டுகளுக்கிடையில் சிறிய சமதளத் தரை இருக்கும். அதில் இரண்டு பெண்கள் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தனர். அங்கிருந்து வெளிப்பக்கமாகக் கூட்டமாக இருந்தது. அந்த பெண்களிடம், `ஃபார்ம் வேண்டும்' என்று கேட்டதுதான் தாமதம், அவர்களின் ஒரு பெண் `வள்’ளென்று எரிந்து விழுந்தார்.

அப்புறம்தான் தெரிந்தது அந்த `வள்’ளுக்கு அர்த்தம் `வெளியில போய் வரிசையில வாங்க’ என்பது! வெளியே வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது... வெயிலில் நீண்ட நேரமாக, நீளமாக வரிசைகட்டி நின்றுகொண்டிருந்த பொதுமக்களின் துயரம். சற்றுக் கோபம் மேலிட, `மேனேஜரைப் பார்க்க வேண்டும்‘ என்றேன். மறுபடியும் அற்பப் புழுவைப் போலப் பார்த்தார் அந்தப் பெண்மணி. முதல் மாடிக்குச் சென்று சற்று சத்தமாக மேனேஜர் எங்கே என்று குரல் கொடுத்தேன். துடைப்பத்துடன் நின்ற அதே பெண்மணி, `என்ன விஷயம்?’ என்று கேட்டார்.

Aadhaar
Aadhaar

அவரைத் தவிர்த்துவிட்டு சற்று தூரத்தில் வாக்குவாதத்திலிருந்த வேறொரு பெண் ஊழியரிடம், `மேனேஜர் எங்கே?' என்ற அதே கேள்வியைக் கேட்க, அவரும் `என்ன விஷயம்?’ என்று அதே கேள்வியை என்னிடம் திருப்பிக் கேட்க... `எங்களால் வெளியில், வெயிலில் நீண்ட நேரம் நிற்க முடியாது’ என்று உரத்த குரலில் கூறினேன். மீண்டும் ஒருமுறை அவர்களது கேவலமான பார்வையைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஒரு வழியாய் சலசலப்பு அடங்கியது.

இறுதியில், மேனேஜரை பார்க்காமலே வெளியேறினோம். இந்தத் தகவலை நண்பர்களிடம் பகிர்ந்தபோது, `ஆன்லைனில் விண்ணப்பம் செய்து பணத்தைக் கட்டிவிட்டு, அந்தப் பிரதியைக் கொண்டு சென்றால் வெயிலில் நிற்க வேண்டிய தேவை இருக்காது' என்றனர். அப்போதும்கூட அங்கு வேலை பார்ப்பவர்களின் இழி பார்வைக்கு உள்ளாக வேண்டியிருக்காது என்பதைச் சொல்லவில்லை.

தமிழகத்தில் சென்னையிலும் மதுரையிலும் மட்டுமே இருக்கிறது இந்த ஆதார் சேவை மையம் (Aadhaar Seva Kendra). ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சேவை மையத்துக்கு வந்து செல்கின்றனர். அவர்கள் அனைவரும் ஆன்லைன் சேவையைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை. ஆன்லைன் சேவையைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களில் பலருக்கும் அங்கு செல்ல முன்பதிவு செய்ய வேண்டும் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இப்படி அறியாதவர்கள் தெரியாதவர்களுக்காகத்தான் சேவை மையம் செயல்படுகிறது என்பதும் அவர்களுக்கு வழிகாட்டுவது நம் கடமை என்பதையும் அங்குள்ள ஊழியர்களிடம் யார் எடுத்துச் செல்வது? எங்கு சென்றாலும் ஆதார் கட்டாயம் என்று அறிவித்துவிட்டார்கள். ஆனால், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள சேவை மையத்தை அணுகுவோரைத் தெருவில் நிறுத்தித் திண்டாட வைக்கின்றனர். இந்த அவலத்தை யாரிடம் சென்று முறையிடுவது?

Jayalalitha
Jayalalitha

சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, 2 லட்சம் அரசு ஊழியர்களை அதிரடியாக டிஸ்மிஸ் செய்தார். அப்போது பொதுமக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள். அதன் அர்த்தம் அரசு ஊழியர்கள் மக்களை அந்தளவுக்கு அலட்சியப்படுத்தினார்கள் என்பதே. அரசு ஊழியர்களுக்கு இன்னும்கூடவா உறைக்கவில்லை?

- கஸாலி