Published:Updated:

ராமர் கோயில் பூமி பூஜையை சர்வதேச ஊடகங்கள் எப்படிப் பார்க்கின்றன?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
International media views on ram mandir
International media views on ram mandir ( twitter/@narendramodi, screenshots )

அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா குறித்து சர்வதேச ஊடகங்களின் பார்வை என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த புதன்கிழமை அன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. இதன் காரணமாக அயோத்தி விழாக் கோலம் பூண்டது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அயோத்தியில் பிரதமர் மோடி
அயோத்தியில் பிரதமர் மோடி

இந்தநிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ``அயோத்தியில் கோயில் கட்ட இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து வழங்கிய தீர்ப்பில் குறைபாடு உள்ளது. அந்தத் தீர்ப்பு நீதியை விட, நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக உள்ளது. இந்தியாவில் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் ஓங்கி வருகிறது. அத்துடன் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதலும் அதிகரித்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்...

இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை குறித்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையைப் பார்த்தோம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தூண்டி விடும் பாகிஸ்தானின் இந்தக் கருத்து ஆச்சரியம் அளிப்பதாக இல்லை. தனது நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் வழங்க மறுக்கும் பாகிஸ்தான் இவ்வாறு கூறுவது மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது. இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதையும், மதரீதியாகத் தூண்டிவிடுவதையும் பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்.
அனுராக் ஸ்ரீவஸ்தவாவிடம், வெளியுறவுத் துறை செயலாளர்

பாகிஸ்தான் அறிக்கைக்கு கடும் கண்டனங்களை பா.ஜ.க ஆதரவாளர்கள் பதிவு செய்து வருகின்றனர். இந்தநிலையில் சர்வதேச ஊடகங்கள் அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா குறித்து வெளியிட்டுள்ள செய்திகளில், எவ்வாறு தங்களது கருத்துகளை பதிவுசெய்துள்ளன என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.

தி கார்டியன்

`` சர்ச்சைக்குரிய கோயிலின் பணிகள் தொடங்கியதை `ஒரு புதிய சகாப்தத்தின் விடியல்' என்று வாழ்த்திய மோடி'' என்ற தலைப்போடு கட்டுரை ஒன்றைப் பதிவு செய்துள்ளது பிரிட்டிஷ் ஊடகமான `தி கார்டியன்' பத்திரிகை.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதிலிருந்து 28 ஆண்டுகள் கழித்து ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதையும், அயோத்தி, மோடியை உற்சாகமாக வரவேற்றதையும் சில பத்திகளில் குறிப்பிட்டிருந்தது `தி கார்டியன்' ஊடகம்.

The guardian
The guardian
1528-ல் பாபர் மசூதி... 2020-ல் ராமர் கோயில்... 492 ஆண்டு வரலாற்றுச் சுருக்கம்! #AyodhyaRamMandir

``இந்து தெய்வமான ராமரின் பிறப்பிடமாகக் கருதப்படும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி பல ஆண்டுகளாகப் பிரசாரம் செய்து வருகிறது. இந்த பிரசாரம் இந்தியர்களைப் பிளவுபடுத்தியுள்ளது, முஸ்லிம்களை அந்நியப்படுத்தியுள்ளது, பா.ஜ.க ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற உதவியுள்ளது." என்று `தி கார்டியன்' குறிப்பிட்டுள்ளது.

பா.ஜ.கவின் எதிர்க்கட்சிகளுக்கு, இந்த ராமர் கோயில் கட்டும் திட்டம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ராமர் கோயில் கொண்டாட்டங்களை எதிர்த்துச் சவால்விட எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன. தங்கள் கட்சியின் இந்து ஆதரவாளர்களை இழந்துவிடுவோம் என்ற பயம்தான் இதற்குக் காரணம். மதநம்பிக்கை அடிப்படையில் பா.ஜ.க அரசியல் லட்சியங்களைக் கையாண்டு வெற்றிபெறுவது எதிர்க்கட்சிகளைப் பதற்றமடையச் செய்கிறது.
தி கார்டியன்

மேலும், ``ராமர் கோயில் கட்டுவது மதரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மோடிக்கும் பா.ஜ.கவுக்கும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது." என்றும் கார்டியன் பத்திரிகையின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தி வாஷிங்டன் போஸ்ட்

``இந்தியாவின் மாற்றத்துக்கான மோடியின் தேடலில், ஒரு பெரிய இந்துக் கோயில் எழுகிறது'' என்ற தலைப்பு கொண்டு செய்தி வெளியிட்டுள்ளது அமெரிக்கப் பத்திரிகையான `தி வாஷிங்டன் போஸ்ட்'.

அயோத்தி விழாவின் பிரமாண்டத்தையும், பிரதமர் மோடியின் உரையையும் பற்றி முதல் சில பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது `தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை.

கடந்த புதன்கிழமை அன்று, புதிய கொரோனா தொற்றுகள் எண்ணிக்கையில், கடந்த 24 மணிநேரக் கணக்குப்படி இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது என்று `உலக சுகாதார நிறுவனம்' தெரிவித்துள்ளது. நோய்த் தொற்று அதிகரித்து வரும் இந்த நிலையில், பொருளாதாரம் ஊசலாடிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடக்க நிகழ்வு இந்தியாவின் சக்திவாய்ந்த பிரதமரான மோடிக்கு வரவேற்கக்கூடிய திசை திருப்பலாக அமைந்துள்ளது.
தி வாஷிங்டன் போஸ்ட்

மேலும், அந்தச் செய்தியில், ``சரியாக ஓராண்டுக்கு முன்னர், இந்தியாவின் ஒரே முஸ்லிம் பெரும்பான்மை பகுதியான ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தார் மோடி. காஷ்மீர் விஷயத்தில் 70 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொள்கையை உடைத்தெறிந்தார். கடந்த டிசம்பரில், புலம்பெயர்ந்த முஸ்லிம்களை வெளியேற்றும் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது மோடி அரசு. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், டெல்லியில் இந்து-முஸ்லிம் கலவரம் வெடித்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தலைநகரில் நடந்த மிக மோசமான வன்முறை இது.

Washington post
Washington post
`மோடியின் வெற்றி', `பி.ஜே.பி. பிளான்'... அயோத்தி பற்றி சர்வதேச ஊடகங்கள் பார்வை!

இந்திய முஸ்லிம்கள் இந்த முன்னேற்றங்களையெல்லாம் எச்சரிக்கையுடன் பார்த்து வருகின்றனர். ஏறக்குறைய 20 கோடி முஸ்லிம் மக்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர் என்றாலும், இந்திய மக்கள் தொகையில் அவர்கள் வெறும் 14 சதவிகிதம் மட்டுமே. வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு வசதிகளில் அவர்கள் பாகுபாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்திய முஸ்லிம்கள் சமூக பொருளாதார முன்னேற்றத்திலும் மிக மோசமான நிலையில் உள்ளனர். தாங்கள் அனைவரும் இரண்டாம் தரக் குடிமக்களாக மாறி வருவதாக நினைத்து அச்சம் கொண்டுள்ளனர். ராமர் கோயில் கட்டுவது இதற்கு ஓர் உதாரணம். இந்தப் பிரச்னையில் மதம் மற்றும் அரசியலைக் கலவையாக இணைத்துக் கையாண்டுள்ளது பா.ஜ.க. இந்தக் கலவை பயனுள்ளதுதான் என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது." என்றும் `தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல் ஜசீரா

``மோடி ராமர் கோயில் கட்டும் பணிகளைத் தொடங்கி வைத்திருப்பது, புதிய ஜனநாயகத்தின் மீது அச்சத்தை ஏற்படுத்துகிறது'' என்பது போன்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது கத்தார் ஊடகமான `அல் ஜசீரா'.

அயோத்தி நிலப் பிரச்னைகளை ஆண்டு வாரியாக முதல் 4 பத்திகளில் விவரித்துள்ள `அல் ஜசீரா', அடுத்தடுத்த பத்திகளில் இந்தியாவின் மதச்சார்பின்மை குறித்து அலசியுள்ளது.

இந்தியா தனது மதச்சார்பின்மையை இழந்து கொண்டிருக்கிருக்கிறது என்ற அச்சத்திற்கு மத்தியில் சர்ச்சைக்குரிய கோயில் கட்டுமானத்தைத் தொடங்கி வைக்கவிருக்கிறார் இந்து தேசியவாத தலைவர்.
அல் ஜசீரா
பாபர் மசூதி இடிப்பு வழக்கு எந்த நிலையில் இருக்கிறது?

``பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சட்ட விசாரணை இன்னும் முடிவடையவில்லை. மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து நடந்த கலவரத்தில் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களுக்கும் சொத்தை இழந்தவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை. இது நவீன இந்தியாவின் இருண்ட பக்கங்கள்" என்று அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

Aljazeera
Aljazeera

``பா.ஜ.க ஆட்சியில் பேசப்படாத ஒரு உண்மை என்னவென்றால், 18 மற்றும் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த முஸ்லிம் மன்னர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட நிலங்களில்தான் அயோத்தியில் உள்ள பெரும்பாலான இந்துக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன" என்றும் `அல் ஜசீரா' அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

மோடி - ராமர் கோயில்
மோடி - ராமர் கோயில்
twitter/@narendramodi

மேலும், `தி வாஷிங்டன் போஸ்ட்' குறிப்பிட்டதைப் போலவே ``முஸ்லிம் பெரும்பான்மை வாய்ந்த ஒரே இந்தியப் பகுதியான ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நாளும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்குத் தேர்வு செய்பட்ட நாளும் ஒத்திருக்கிறது" என்று அல் ஜசீராவும் குறிப்பிட்டுள்ளது.

`வாழ்விழந்து போன காஷ்மீர் தெருக்கள்!' - பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு #Article370

சர்வதேச ஊடகங்களில், முக்கியமான இரண்டு ஊடகங்கள், 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதியன்று காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து `பிரிவு 370' ரத்து செய்ததையும் அதே நாளில் இந்த ஆண்டு ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதையும் நினைவு கூர்ந்து பேசியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டன் செய்தி ஊடகமான `பி.பி.சி', அமெரிக்க செய்தி ஊடகமான `தி நியூயார்க் டைம்ஸ்' உள்ளிட்ட சர்வதேச செய்தி நிறுவனங்களும் அயோத்தியில் நடைபெற்ற நிகழ்வு மற்றும் பிரதமர் மோடியின் உரை ஆகியவற்றை செய்தியாகப் பதிவு செய்திருந்தன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு