Published:Updated:

``கோயம்பேடு சந்தையா, கொரோனா மந்தையா?'' - பதறவைக்கும் வைரஸ்... பயப்படாத மக்கள்

கோயம்பேடு சந்தை
கோயம்பேடு சந்தை

சென்னை முழுக்க காய்கறி விநியோகம் செய்துவந்த கோயம்பேடு மார்க்கெட், கடந்த சில நாள்களாக தன்னை அறியாமல் கொரோனாவையும் சேர்த்தே `விநியோகம்' செய்துவந்திருக்கும் தகவல் திடுக்கிட வைத்திருக்கிறது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடும் கோயம்பேடு காய்கறி சந்தையின் வழியே கொரோனா தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் பணியாற்றிவந்த சிலர், தங்கள் சொந்த ஊர் திரும்பியிருந்த நிலையில் அவர்களுக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்தவகையில், கடலூரில் மட்டும் சுமார் 600 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

koyambedu
koyambedu

மேலும், கோயம்பேடு பூ மார்க்கெட்டிலிருந்து பூ வாங்கிவந்து, வடபழனி முருகன் கோயில் வாசலில் பூ விற்பனை செய்துவந்த 6 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுதவிர, 2 தினங்களுக்கு முன்பு, கோயம்பேடு வியாபாரிகளோடு சி.எம்.டி.ஏ அதிகாரிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வியாபாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதன் முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்குக் கிளம்பிய ஆயிரக்கணக்கான பயணிகளால், பிதுங்கி வழிந்தது கோயம்பேடு பேருந்து நிலையம். அப்போதே பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது இந்நிகழ்வு. இதன்பிறகு ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்ட நாள்களிலும் கோயம்பேடு காய்கறிச் சந்தையில், தனி மனித இடைவெளி மறந்து மக்கள் கூட்டம் கூட்டமாக பொருள் வாங்கிச் செல்லும் நிகழ்வுகள் அச்சுறுத்தும் செய்திகளாயின.

நேற்று (மே 3) அறிவித்த எண்ணிக்கை வரை, கோயம்பேடு சந்தையை மையமாகக் கொண்டு கொரோனா தொற்று பரவியவர்கள் எண்ணிக்கை சென்னையில் மட்டும் 63 பேர் ஆகவும், தமிழகம் முழுவதும் அந்த எண்ணிக்கை 146 ஆகவும் உயர்ந்துள்ளது. கோயம்பேட்டிலிருந்து பல்வேறு ஊர்களுக்குச் சென்றவர்களில் தஞ்சாவூரில் ஒருவர், கடலூர் 17 பேர், அரியலூர் 22 பேர், விழுப்புரம் 32 பேர், காஞ்சிபுரம் 7 பேர் என தமிழகம் முழுவதும் கொரோனா பரவியுள்ளது.

இப்படித் தொடர்ந்து கொரோனா தொற்றுப் பாதிப்பின் மூலமாக கோயம்பேடு, திகழ்ந்து வந்ததையடுத்து நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் மளமளவென அதிகரித்தது. மேலும், இந்நோய்த் தாக்கமானது இங்கிருந்து தமிழகம் முழுக்கப் பரவிவருவதையடுத்து, `கொரோனா நோய்ப் பரவுதலின் Cluster-ஆக உருமாறி நின்று மிரட்டுகிறது கோயம்பேடு!'

இந்த நிலையில், கோயம்பேடு சந்தையில் அளவுக்கதிகமான எண்ணிக்கையில், மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும்பொருட்டு, சென்னைப் பெருநகரத்தின் பல பகுதிகளுக்கும் காய்கறிச் சந்தையைப் பிரித்து செயல்பட வைக்கும் பணியில் இறங்கியுள்ளது சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம். இதன் ஒருகட்டமாக பூ மற்றும் பழச்சந்தை மாதவரம் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வண்டலூரையடுத்து, மற்றொரு காய்கறி சந்தையை உருவாக்கும் பணியிலும் அரசுத் தரப்பு தீவிரமாகிவருகிறது.

கோயம்பேடு -  சென்னை
கோயம்பேடு - சென்னை

இதற்கிடையில், அரசின் இந்த முயற்சிக்கு கோயம்பேடு வியாபாரிகள் மத்தியில் ஒருமித்த ஆதரவு ஏற்படவில்லை. இதனால், மாதவரம் பகுதிக்கு மாற்றப்பட்ட பூ மற்றும் பழச் சந்தை வியாபாரிகள் இன்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. இப்பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காணும் நோக்கோடு, அரசு அதிகாரிகள், தொடர்ந்து வியாபாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கோயம்பேடு சந்தையை இரண்டு, மூன்று பிரிவுகளாகப் பிரித்து செயல்பட முனையும் அரசின் முயற்சிக்கு, ஒருதரப்பு வியாபாரிகள் ஆதரவு கொடுக்காதது ஏன் என்ற கேள்விக்கு விடைதேடி, `கோயம்பேடு வெங்காய வியாபாரிகள் சங்க' உப தலைவர் நடராஜனிடம் பேசியபோது, ``பிரிக்கிறோம் என்று சொல்வது ரொம்பவும் எளிதான வார்த்தை. ஆனால், நடைமுறையில் ஆண்டாண்டுகாலமாக தொழில் செய்துவரும் வியாபாரிகளுக்கு இது எவ்வளவு பெரிய சிக்கலை உண்டுபண்ணும் என்பது அதிகாரிகளுக்குத் தெரியவில்லை.

`தேனியில் இட்லிக்கடை பெண்ணுக்கு கொரோனா’ -கான்டாக்ட் லிஸ்ட் எடுக்கும் சுகாதாரத்துறை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேளம்பாக்கம் அல்லது கொளப்பாக்கத்துக்கு காய்கறிச் சந்தையை மாற்றலாம் என்று அரசுத் தரப்பில் சொல்கிறார்கள். அரசு சொல்லும் அந்தப்பகுதி, பொட்டல் காடாக இருக்கிறது. அங்கே கடைகள் அமைப்பதற்கான தகரக் கொட்டகைகள்கூட இல்லை. ஆண்டுக்கணக்கில் இங்கே நிரந்தரமாக கம்ப்யூட்டர் பில் வசதியோடு தொழில் செய்துவருகிறவர்கள், எந்த வசதியும் இல்லாத இம்மாதிரியான இடங்களுக்கு எப்படி திடீரென வியாபாரத்தை மாற்றிக்கொண்டு செல்ல முடியும்? அடுத்ததாக, இதுபோன்ற புதிய இடங்களுக்கு வாடிக்கையாளர்களை எப்படி வரவழைப்பது? ஏற்கெனவே அங்கேயுள்ள ரவுடிகளின் தொல்லைகளிலிருந்து வியாபாரிகளை யார் பாதுகாப்பது?

நாங்கள் வெங்காயம் மொத்த வியாபாரம் செய்துவருகிறோம். தினம்தோறும் வெளி மாநிலங்களிலிருந்து சரக்குகள் எங்களுக்கு வந்து சேருகிறது. இந்த நிலையில், அரசுத் தரப்பு சொல்வதுபோல், திடீரென கடையை இடம் மாற்றினால், வெளிமாநிலத்திலிருந்து எங்களுக்கு வந்து சேரும் சரக்குகள் மற்றும் வாங்கிச் செல்லும் வியாபாரிகளிடையே கடுமையான குழப்பங்கள் நிலவும்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

பொதுவாக வியாபாரத்தைப் பொறுத்தவரை, நிலையாக ஒரே இடத்தில் கடை அமைத்து பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட பிறகுதான், அவரவருக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடிக்கமுடியும். பிடித்துவிட்ட அந்த இடத்தையும் தக்கவைக்க நாங்கள் தொடர்ந்து போராடி வரவேண்டும். இதுதான் நிலைமை என்கிறபோது, திடீரென சம்பந்தமே இல்லாத ஓர் இடத்துக்கு கடையை மாற்றம் செய்தால், பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதோடு, வியாபாரமும் கடுமையாகப் பாதிக்கும். இந்த நடைமுறைச் சிக்கல்களையெல்லாம் அதிகாரிகளிடம் எடுத்துப் பேசியபிறகு அவர்களும் இதிலுள்ள சிரமங்களைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றே நினைக்கிறோம்.

தற்போது, கோயம்பேட்டில் மொத்த விற்பனை மட்டுமே நடந்துவருகிறது. அதிலும்கூட நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தவகையில், `கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும்' என்ற நல்லெண்ணத்தோடுதான் அரசுத் தரப்பு இதைச் செய்கிறது. நாங்களும்கூட இதை வரவேற்கவே செய்கிறோம். அதேசமயம், வியாபாரிகளின் பிரச்னைகளையும் கேட்டறிந்து அவர்களுக்கான வசதிகளை முன்னேற்பாடாக செய்துதந்து உதவினால் மட்டுமே, அரசு நினைப்பதுபோல் கோயம்பேடு காய்கறிச் சந்தையை இரண்டு மூன்று பிரிவுகளாக பிரிப்பது சாத்தியமாகும்'' என்றார் தெளிவாக.

வியாபாரிகளின் சிரமங்களை முன்னிறுத்திப் பேசப்படுகிற இதுபோன்ற கருத்துகளுக்கு மத்தியில், அரசின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துப் பேசுகிற வியாபாரிகளும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் தங்கம் செல்வராஜ். `கோயம்பேடு வியாபாரிகள் சங்க'த் தலைவரான இவர், இப்பிரச்னை குறித்துப் பேசும்போது, ``கொரோனா வைரஸ் பரவும் இந்தக் காலகட்டத்தில், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் என தினம்தோறும் லட்சக்கணக்கானவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களது இந்தப் பணியையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், தினம்தோறும் கோயம்பேடு காய்கறி சந்தையில் வியாபாரிகள் கடைகளைத் திறந்துவைத்து வியாபாரம் செய்வதும், மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடுவதையும் பார்க்கும்போது மனம் பதறுகிறது. கோயம்பேடு சந்தையா அல்லது கொரோனா மந்தையா என்று நினைக்குமளவுக்கு கூட்டம் கூட்டமாக பயமின்றி மக்கள் வந்துசெல்கிறார்கள். காய்கறிகளோடு சேர்த்து, கொரோனாவையும் இவர்கள் வாங்கிச் சென்றிருக்கிறார்கள் என்பதை அண்மையில் வரக்கூடிய நோய்த்தொற்றின் பாதிப்புகள் தெளிவாக உணர்த்தி வருகிறது. எனவே, வியாபாரிகள் - மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். அந்த விழிப்புணர்வு இல்லாதவர்களை அரசுதான் கடுமையான சட்டங்கள் மூலம் திருத்த வேண்டும். நெருக்கடியான இந்தச் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு வியாபாரிகள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

தங்கம் செல்வராஜ்
தங்கம் செல்வராஜ்

ஆண்டாண்டுகாலமாக அரும்பாடுபட்டு வளர்த்துவந்த தொழில், ஒரேயடியாக முடங்கிப் போய்விடுமோ என்று வியாபாரிகள் பயப்படுகிறார்கள். அவர்களது பயம் நியாயமானதுதான். ஆனால், தொழில் முக்கியமா... உயிர் முக்கியமா? இந்த உண்மையைப் புரிந்துகொண்ட 60 சதவிகித வியாபாரிகள் தங்கள் கடைகளை மூடிவிட்டனர். எங்கள் சங்கத்தைச் சேர்ந்த வியாபாரிகளிலேயேகூட சிலர், `கடை மூடப்பட வேண்டும்' என்ற எங்கள் நிலைப்பாட்டை எதிர்க்கத்தான் செய்கிறார்கள். வரப்போகிற நாள்களில், கொரோனாவின் தீவிரத்தை கண்கூடாகப் பார்த்தபிறகு, அவர்களும்கூட புரிந்துகொள்வார்கள்'' என்கிறார்.

கோயம்பேடு காய்கறிச் சந்தை வியாபாரிகளோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவந்த சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இப்பிரச்னை குறித்துப் பேசும்போது, ``கோயம்பேடு சந்தையை சென்னையின் 3 இடங்களில் பிரித்து செயல்பட அனுமதிக்கலாம் என்று முதலில் முடிவு செய்திருந்தோம். ஆனால், பேச்சுவார்த்தை மற்றும் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு பூ மற்றும் பழ வியாபாரத்தை மட்டும் மாதவரம் பகுதிக்கு மாற்றியிருக்கிறோம். சில்லறை வியாபாரிகளுக்கு மாநகராட்சியின் மைதானங்கள் உள்ளிட்ட இடங்களைப் பிரித்துக்கொடுத்து விற்பனையைத் தொடர வழிவகை செய்திருக்கிறோம்'' என்றார்.

மலேசிய நாய்க்குட்டிக்கு அரிய வகை நோய்! -அறுவை சிகிச்சைக்கு வீடியோ காலில் இணைந்த கேரள மருத்துவர்கள்

மாதவரம் சந்தை இன்னும் முழு அளவில் செயல்பாட்டுக்கு வருவதற்கு வியாபாரிகளின் ஒத்துழைப்பு இல்லையே என்ற கேள்வியை `சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும' செயலாளர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, ``தற்போது வாழைப்பழ வியாபாரிகள் மாதவரம் மார்க்கெட்டுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். மேலும் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையினர் சங்கத்தின் மூலமாக 10 கடைகள்வரை திறக்கவிருக்கிறார்கள்.

கோயம்பேடு காய்கறி சந்தை வளாகம்
கோயம்பேடு காய்கறி சந்தை வளாகம்

கோயம்பேட்டிலுள்ள பழக்கடை மற்றும் பெருவணிகர்கள் கடைகளை மூடி 2 நாள்கள் ஆகிவிட்டன. தற்போது காய்கறி மொத்த வியாபாரம் மட்டுமே கோயம்பேட்டில் செயல்பட்டுவருகிறது. பழ வியாபாரிகளும் பெருவணிகர்களும் இனிமேல்தான் படிப்படியாக மாதவரம் செல்வார்கள். கேளம்பாக்கம் பகுதியில், ஒரு பிரிவு வியாபாரத்தை ஆரம்பிக்கலாம் என்ற முடிவைத் தள்ளிவைத்துவிட்டோம். எனவே, இப்போதைக்குத் தற்காலிகமாக தீர்வு ஏற்பட்டிருக்கிறது'' என்றார் தெளிவாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு