வதந்திகளை நம்ப வேண்டாம்... மின் கட்டணம் கணக்கிடப்படும் முறை இதுதான்! #VikatanFactCheck

தவறான முறையில் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என்பது போன்ற போலியான சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
கடந்த சில மாதங்களாக உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதை மே 17 வரை நீட்டித்திருக்கிறது இந்திய அரசு. தற்போது, மேலும் புது வழிமுறைகளோடு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அதே போல் தமிழகத்திலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவதற்குத் தமிழ்நாடு மின்சார வாரியம் மே 6-ம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. மேலும், மார்ச் 25 முதல் உள்ள தொகையை அபராதமின்றிக் கட்டலாம் என்றும் தமிழக மின்சார வாரியம் அறிவித்திருந்தது. இணையதளம், மொபைல் செயலி உள்ளிட்ட, `டிஜிட்டல்' முறையில், மின் கட்டணம் செலுத்தும் வசதிகள் இருந்தாலும், பலரும், மின் கட்டண மையங்களில்தான், கட்டணத்தைச் செலுத்துகின்றனர். எனவே, ஆன்லைன் மூலமாகக் கட்டணம் செலுத்துமாறும் கேட்டுக் கொண்டது தமிழக மின்சார வாரியம். இந்தியா முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், தாழ்வழுத்த மின் கட்டணத்தைச் செலுத்துவதற்கான அவகாசத் தேதியை மே 22-ம் தேதி வரை நீட்டித்துள்ளதாகக் கடந்த 5-ம் தேதி தமிழக மின்சார வாரியம் அறிவித்திருந்தது.
கோவிட் - 19 காரணமாக மீட்டர் ரீடிங் எடுப்பதற்கு ஊழியர்கள் வர முடியாத சூழல் ஏற்பட்டதால், மார்ச் - ஏப்ரல் மாதத்திற்கு, முந்தைய மாதக் கட்டணத்தையே கட்டலாம் என மின்சார வாரியம் தெரிவித்திருந்தது. முந்தைய மாதக் கணக்கீட்டின்படி, தாழ்வழுத்தத் தொழிற்சாலை மற்றும் வணிக மின் நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை, மே மாதம் 22-ம் தேதி வரை செலுத்த அவகாசத்தையும் நீட்டித்தது.

ஆனால், வணிக மின் நுகர்வோரும் தாழ்வழுத்த தொழிற்சாலைகளைச் சேர்ந்த அமைப்புகளும், `முழுக் கதவடைப்பு காரணமாக மின் உபயோகமே செய்யாதிருக்கும் சமயத்தில் கடந்த மாதத்திற்கான தொகையைச் செலுத்தச் சொல்வது நியாயமில்லை என்றும் அப்படிச் செலுத்தினால் தற்போதுள்ள மின் நுகர்வை விட அதிக தொகை செலுத்த வேண்டி வருமென்றும்' தமிழக முதல்வரிடம் முறையிட்டனர். இந்த முறையீட்டைக் கணக்கில் கொண்டு தமிழக மின்சார வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், `மீட்டர் ரீடிங்கை தொழிற்சாலைகளைச் சேர்ந்தவர்களே புகைப்படமாகவோ, எழுத்து வடிவிலோ எடுத்து குறுஞ்செய்தி, வாட்ஸ் அப் அல்லது மின்னஞ்சல் வாயிலாக அந்தந்த ஏரியாக்களுக்கான மின்சாரப் பிரிவு உதவிப் பொறியாளருக்கு அனுப்பிவைக்க வேண்டும். அந்த மின் அளவீட்டைப் பெற்ற பின்னர் அந்த அதிகாரி தங்களுக்கான மின் கட்டணத்தை அனுப்பி வைப்பார். அந்தக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகச் செலுத்திக் கொள்ளலாம்' என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வீட்டு உபயோகத் தாழ்வழுத்த மின் நுகர்வோர்களைப் பொறுத்தவரை எங்கெல்லாம் கடந்த மாதக் கணக்கீட்டுத் தொகையின்படி மின் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதோ, அந்த நுகர்வோர்களுக்கு அடுத்த மின் அளவீடு கணக்கெடுக்கப்படும் போது, மின் கணக்கீடானது இரண்டு இருமாத (அதாவது 4 மாதங்கள்) மின் அளவீட்டிற்கு மேற்கொள்ளப்படும். அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட மின் அளவீட்டிற்கான தொகையில், முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது சரி செய்யப்படும் எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

அடுத்த இரு மாதங்களுக்கான மின் அளவீடு எப்படி எடுக்கப்படும். அதற்கான தொகை எவ்வாறு கணக்கிடப்படும் என்பதைக் கீழுள்ள அட்டவணை உதாரணம் கொண்டு விளக்குகிறது.
இதற்கிடையே சமூக வலைதளங்களில் சில போலியான தகவல்கள் பரவி வருகின்றன. அதில், தவறான முறையில் கணக்கீடு செய்யப்பட்டு, அதிகளவு தொகை கட்டவேண்டும் எனப் போலியான தகவல் பரவி வருகிறது. மேலும், இதனை மீட்டர் ரீடிங் எடுப்பவரிடம் தெரிவித்து, கட்டிய பணத்தைக் கழிக்காமல், அதற்கான யூனிட்டைக் கழிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் போலியான தகவலாகும்.


தமிழக மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ள மின் கட்டணக் கணக்கீட்டின்படி, தங்களின் மின்சாரக் கட்டணத்தைக் கட்டினால் போதுமானது. தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.