Published:Updated:

வீடுகளில் மின் கட்டணம் அதிகரிக்க காரணம் என்ன? விளக்கம் இதோ!

கொரோனா ஊரடங்கையொட்டி, 4 மாத மின் கட்டணமும் மொத்தமாக வசூலிக்கப்பட்டுவருகிறது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள மின் கணக்கீட்டு குழப்பங்களுக்கு விடையளிக்கிறது இந்தக் கட்டுரை.

வீடுகளில் மின் கட்டணம் அதிகரிக்க காரணம் என்ன? விளக்கம் இதோ!

கொரோனா ஊரடங்கையொட்டி, 4 மாத மின் கட்டணமும் மொத்தமாக வசூலிக்கப்பட்டுவருகிறது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள மின் கணக்கீட்டு குழப்பங்களுக்கு விடையளிக்கிறது இந்தக் கட்டுரை.

Published:Updated:

மின்சாரக் கட்டண `ஷாக்'கிலிருந்து இன்னும் பொதுமக்கள் விடுபடவில்லை. மின்வாரிய அலுவலகங்களில், கட்டணம் செலுத்துவோர் வரிசையைவிடவும், அதிகாரிகளிடம் கணக்குக் கேட்டு, வாதம் செய்வோர் எண்ணிக்கை நீள்கிறது.

கொரோனா ஊரடங்குக்கு முந்தைய காலகட்டமான கடந்த பிப்ரவரி மாதம் மின் கட்டணம் செலுத்தியவர்கள், மீண்டும் 4 மாத இடைவெளிக்குப் பிறகு மின் கட்டணம் செலுத்த வந்திருப்பதுதான் இத்தனை குழப்பத்துக்கும் காரணம். இதற்கிடையே, `மின் கட்டணத்தை இரண்டு இரண்டு மாதங்களாகத் தனித்தனியே கணக்கிட வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணையில், `தமிழ்நாடு அரசு, இதுகுறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூன் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

`மின்வாரியம் கடந்த 4 மாத (மார்ச்-ஏப்ரல், மே-ஜூன்) மின் பயன்பாட்டையும் ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டு, வசூல் செய்வதால், வழக்கமான மின் கட்டணத்தைவிடவும் பல மடங்கு கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது' என்பது பொதுமக்களின் குமுறல். மேலும், நடிகர் பிரசன்னா உள்ளிட்ட பிரபலங்கள் சிலரும்கூட, மின் கட்டண முறை குறித்து சந்தேகம் எழுப்ப... அவர்களுக்கெல்லாம் தனித்தனியே விளக்கம் கொடுத்தது, மின் வாரியம்.

அமைச்சர் தங்கமணி
அமைச்சர் தங்கமணி

இதற்கிடையே, மக்களின் இந்த ஆதங்கத்தைப் பிரதிபலிக்கும் விதமாக, எதிர்க்கட்சிகளும் `மின்வாரிய கட்டணக் கொள்ளை' என்று அறிக்கைகள் மூலமாக ஆளுங்கட்சிக்கு குடைச்சல் கொடுத்தன. `கொரோனா காலத்திலும் மின்சார வாரியம், மக்களிடம் 'மங்காத்தா' ஆடிவருகிறது' என்று மின்சார வாரியத்தின் மின் கணக்கீட்டுக்கு எதிராக கொதிப்பான அறிக்கையை வெளியிட்டது தி.மு.க.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, ``மின் கட்டணம் வசூலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. ஊரடங்கு காலகட்டமான கடந்த 4 மாத கால மின் பயன்பாட்டையும் மொத்தமாகக் கணக்கிட்டு, அதை இரண்டால் வகுத்துத்தான் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை" என்று விளக்கம் கொடுத்தார். ஆனாலும்கூட, பொதுமக்களின் குழப்பம் தீர்ந்தபாடில்லை. காரணம்.... தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் கணக்கீடுகளில் உள்ள குழப்பமான நடைமுறைதான்.

மற்ற மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படாத விநோத கணக்கீட்டு முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 4 ஆண்டுகளாகக் கடைப்பிடித்துவருகிறது. இதுகுறித்து விளக்கமாகத் தெரிந்துகொள்ள, கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலிலிருந்து நாம் பார்க்க வேண்டியுள்ளது. அதாவது, கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, `100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்' என்றதொரு அறிவிப்பை வெளியிட்டு தேர்தலைச் சந்தித்தது அ.தி.மு.க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்த அ.தி.மு.க அரசு, தான் கொடுத்திருந்த இலவச மின்சாரம் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்றியது. அதாவது, மின் கட்டணம் என்பது 2 மாதங்களுக்கு ஒருமுறை வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தி, கட்டண நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த வகையில், 2 மாதங்களிலும் சேர்த்து ஒரு வீட்டில் 100 யூனிட் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்த 100 யூனிட்டுகளுக்கான மின் கட்டணம் முழுவதும் இலவசம். ஆனால், 100 யூனிட்டுகளுக்கு மேலாக மின் செலவு இருந்தால், 101-வது யூனிட்டில் ஆரம்பித்து 200 யூனிட்டுகள் வரையிலாக உள்ள ஒவ்வொரு யூனிட்டுக்கும் 1 ரூபாய் 50 காசு வசூலிக்கப்பட்டது.

உதாரணமாக, ஒரு வீட்டில் 150 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருந்தால், முதல் 100 யூனிட் மின்சாரத்துக்குக் கட்டணம் கிடையாது. 101-வது யூனிட்டிலிருந்து 150-வது யூனிட் வரையிலான 50 யூனிட்டுகளுக்கு மட்டும் கட்டணம் உண்டு. அதாவது ஒரு யூனிட்டுக்கு 1 ரூபாய் 50 காசு என்ற வகையில், 50 யூனிட்டுக்குமாக மொத்தம் 75 ரூபாய். இதனுடன் நிரந்தரக் கட்டணம் 20 ரூபாயைச் சேர்த்து மொத்தமாக 95 ரூபாயை அம்மாதத்துக்கான மின் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Electricity (Representational Image)
Electricity (Representational Image)

அடுத்ததாக, இந்தக் கட்டண விதிமுறைகளிலேயே இன்னும் பல பிரிவுகள் இருக்கின்றன. அதாவது, முதல் 100 யூனிட் (0-100) மின்சாரம் இலவசம். 100 யூனிட்டுகளுக்கு மேல் 200 யூனிட்டுகளுக்குள்ளாகப் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 1 ரூபாய் 50 காசு கட்டணம் என்பதையும் ஏற்கெனவே பார்த்தோம். இதற்குமேலாக மின்சாரம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் உள்ள தனித்தனியான கட்டண விதிமுறைகள் பற்றி கீழே பார்க்கலாம். (2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கட்டணங்கள் மீண்டும் 2017-ம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்டன. அந்த வகையில், திருத்தியமைக்கப்பட்ட கட்டணங்களையே கீழே காண்போம்)

200 யூனிட்டிலிருந்து 500 யூனிட்டுகளுக்கு உள்ளாகப் பயன்படுத்துபவர்களுக்கு கட்டண விதிமுறைகள் மாறுகின்றன. அதாவது, இவர்களுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம். 101-வது யூனிட்டிலிருந்து 200-வது யூனிட் வரையிலாக ஒவ்வொரு யூனிட்டுக்கும் 2 ரூபாய் கட்டணம். அடுத்து, 201-வது யூனிட்டிலிருந்து 500 யூனிட் வரையிலான ஒவ்வொரு யூனிட்டுக்கும் 3 ரூபாய் கட்டணம். இந்த மொத்தக் கட்டணத்தோடு நிரந்தரக் கட்டணம் 30 ரூபாயும் சேர்த்து வசூலிக்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்ததாக, 500 யூனிட்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு, முற்றிலும் வேறான கட்டண நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, இவர்களுக்கும் முதல் 100 யூனிட் வரை இலவசம். 101-வது யூனிட்டிலிருந்து 200 யூனிட் வரையிலாக ஒவ்வொரு யூனிட்டுக்கும் 3 ரூபாய் 50 காசு கட்டணம். 201-வது யூனிட்டிலிருந்து 500-வது யூனிட் வரையிலாக ஒவ்வொரு யூனிட்டுக்கும் 4 ரூபாய் 60 காசு கட்டணம். 500 யூனிட்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு யூனிட்டுக்கும் 6 ரூபாய் 60 காசுகள் வசூலிக்கப்படுகின்றன. மேலும் இந்த மொத்தக் கட்டணத்தோடு நிரந்தரக் கட்டணத் தொகையாக 50 ரூபாயும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.

சாதாரணமாக, வீடுகளில் வசூலிக்கப்படும் மின் கட்டண நடைமுறை இதுதான். இது தவிர உள்ளாட்சி அமைப்புகள், வணிக நிறுவனங்கள், கைத்தறி தொழில், ஆன்மிக தலங்கள் என ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியே கட்டண விதிமுறைகள் பின்பற்றப்பட்டுவருகின்றன. இனி, இப்போதைய பிரச்னைக்கு வருவோம்.

மின் வாரிய அட்டவணை
மின் வாரிய அட்டவணை

கொரோனா ஊரடங்குக்கு முந்தைய காலகட்டமான கடந்த பிப்ரவரி மாதம், மின்சார வாரியம் முறையாக கணக்கெடுப்பு நடத்தி கட்டணத்தை வசூல் செய்திருந்தது. அதன்பிறகு, மார்ச் மாதம் 22-ம் தேதி முதல் கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் விதமாக தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவானது அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டுக்கொண்டும் வந்தது. இதனால், மார்ச் - ஏப்ரல் மாத மின் பயன்பாட்டுக் கட்டணம் குறித்த கணக்கெடுப்புப் பணி தமிழ்நாடு முழுக்கவே நடைபெறவில்லை.

எனவே, மின் நுகர்வின் அளவு என்னவென்று தெரியாமல், மின் கட்டணம் வசூலிப்பதில் மின்வாரியத்துக்கு குழப்பம் ஏற்பட்டது. மேலும், கொரோனா ஊரடங்கினால், வருமானமின்றி வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த மக்களிடம் மின் கட்டணம் வசூல் செய்வதிலும் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் செலுத்திய அதே தொகையை மார்ச்-ஏப்ரல் மாத மின் கட்டணமாக பொதுமக்கள் செலுத்தலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு. ஆனால், `ஊரடங்கினால் வருமானமின்றி தவித்துவரும் மக்களிடம் அரசே மின் கட்டணம் வசூலிக்கலாமா...' என்று கேள்வி கேட்டு எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து ஊரடங்கு காலகட்டத்துக்குப் பிறகு மொத்த மின் கட்டணத்தையும் செலுத்திக்கொள்ளுமாறு தளர்வை அறிவித்தது தமிழக அரசு.

இதையடுத்து, தொடர்ந்து 4 மாத ஊரடங்குக்குப் பிறகு ஜூன் மாதம் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. எனவே, இந்த மாதம்தான் மின்வாரிய ஊழியர்கள் வீடு வீடாக கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர். இப்போது, மார்ச்-ஏப்ரல், மே-ஜூன் என 4 மாதங்களுக்கும் சேர்த்து மொத்தமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள மின்சார அளவையும் மின் கட்டண அட்டையில் குறித்துச் சென்றனர். பின்னர், இந்த மொத்த மின் அளவையும் இரண்டால் வகுத்து கிடைத்த மின் அளவுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஒரு வீட்டில் மேற்கண்ட 4 மாதங்களிலும் பயன்படுத்தப்பட்ட மொத்த மின் அளவு 620 யூனிட் என்று வைத்துக்கொள்வோம். மின் கட்டண விதிமுறைகளின்படி, இந்த 620 யூனிட்களுக்கு மொத்தம் 1,652 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், இது முறையானது அல்ல. ஏனெனில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்தான் கடந்த மார்ச்-ஏப்ரல் மாத மின் கட்டணத்தை மக்கள் செலுத்தவில்லை. எனவே, இப்போது 4 மாதங்களுக்கும் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ள மொத்த மின் அளவினை இரண்டால் வகுத்தால், மார்ச்-ஏப்ரல் மாதம் நாம் பயன்படுத்திய மின் அளவு கிடைத்துவிடும். அந்த வகையில், மேற்கண்ட 620 யூனிட்டை இரண்டால் வகுத்தால், மார்ச்-ஏப்ரல் மாதம் பயன்படுத்திய மின் அளவு என்பது 310 யூனிட்டுகள். அதேபோல், மே-ஜூன் மாத மின் அளவு 310 யூனிட்டுகள் என்பதாகிவிடுகிறது.

மின்வாரிய அட்டவணை
மின்வாரிய அட்டவணை

இப்போது, மார்ச்-ஏப்ரல் மாத 310 யூனிட் மின்சாரத்தில் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாகிவிடுகிறது. அடுத்ததாக 101-லிருந்து 200 வரையிலான யூனிட்டுகளில் ஒவ்வொரு யூனிட்டுக்கும் 2 ரூபாய் வீதம் கணக்கிட்டால் மொத்தம் 200 ரூபாய். அடுத்து, 201-வது யூனிட்டிலிருந்து 310-வது யூனிட் வரையிலாக ஒவ்வொரு யூனிட்டுக்கும் 3 ரூபாய் வீதம் கணக்கிட்டால் மொத்தம் 330 ரூபாய். ஆக மொத்தம் 530 ரூபாய். இதனோடு நிரந்தரக் கட்டணம் ரூபாய் 30-ஐ சேர்த்தால் மொத்தம் 560 ரூபாய்.

இதேபோல், மே-ஜூன் மாத மின்சார அளவான 310 யூனிட்டுக்கும் 560 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. ஆக மேற்கண்ட 4 மாதங்களுக்கும் சேர்த்து மொத்தமாக செலுத்தவேண்டிய தொகை என்பது 560 + 560= 1,120 ரூபாய். அவ்வளவுதான். (தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள மின் கட்டண அட்டவணையைப் பார்க்கவும்)

தமிழ்நாடு மின்சார வாரியம் நிர்ணயித்திருக்கும் இந்தக் கட்டண விதிமுறைகளைப் பின்பற்றித்தான் கடந்த சில ஆண்டுகளாக வீடுதோறும் மின் கட்டணம் செலுத்திவருகிறோம். ஆனாலும்கூட, திடீரென இப்போது மக்களிடையே மின் கட்டணம் செலுத்துவதில் குழப்பங்கள் எழ ஆரம்பித்ததன் பின்னணி நிலவரம் என்ன... என்ற கேள்விக்கு விடை கேட்டு மின்வாரியத் துறையின் முன்னாள் அதிகாரியும் (சீனியர் கெமிஸ்ட்) சி.ஐ.டி.யூ மாநில துணைத் தலைவருமான விஜயனிடம் பேசியபோது,

``இத்தனை ஆண்டுகளாக இந்தக் கட்டண விதிமுறைகள்தான் நடைமுறையில் இருந்துவருகிறது. ஆனால், கொரோனா ஊரடங்கினால், மொத்தமாக 4 மாதங்களுக்கும் சேர்த்து கணக்கெடுத்து வசூலித்ததால்தான் பிரச்னையாகிவிட்டது. அடுத்ததாக, ஊரடங்கினால் மக்கள் அனைவருமே வீடுகளுக்குள் முடங்கிவிட்டார்கள் என்கிறபோது, வீடுதோறும் மின் பயன்பாடு இன்னும் அதிகரித்துவிட்டது. இது கோடை காலம் என்பதால், ஃபேன், ஏசி போன்ற சாதனங்களை நாள் முழுவதும் மக்கள் பயன்படுத்தியுள்ளனர். இதனாலும் மின் பயன்பாடு அதிகரித்து, செலுத்தவேண்டிய மின் கட்டணமும் கூடுதலாகியுள்ளது.

விஜயன்
விஜயன்

ஆக, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த கணக்கீட்டின்படிதான் மின்சார வாரியம், மின் கட்டணம் வசூல் செய்கிறது. வியாபார ரீதியாக இது சரி; ஆனால், தார்மீக அடிப்படையில் பார்த்தால், இது அரசு செய்கிற மாபெரும் தவறு.

ஏனெனில், அரசே ஊரடங்கை அறிவித்ததால்தான் கடந்த 4 மாதங்களாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்கள். இத்தனை மாதங்களாக வருமானமில்லாமல் முடங்கிக் கிடந்தவர்களிடம் திடீரென இவ்வளவு பெரிய மின் கட்டண தொகையை செலுத்தச் சொல்லி கட்டாயப்படுத்தினால், இது எப்படி மக்கள் நலன் சார்ந்த அரசாக இருக்கமுடியும்.?'' என்றார் ஆதங்கத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism