Election bannerElection banner
Published:Updated:

கும்ப மேளா: `யார் செத்தால் என்ன, ஜோதிடமே முக்கியம்!' - பா.ஜ.க அரசுகள் மக்களை பணயமாக்கியது எப்படி?

Kumbh Mela 2021
Kumbh Mela 2021 ( AP Photo/Karma Sonam )

இந்தியாவில் கோவிட் இரண்டாம் அலை வரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில்கூட, முழுமையாக ஓராண்டிற்கு முன்னாலேயே கும்பமேளாவை நடத்த ஏன் முடிவெடுத்தார்கள்? அதுவும் மிக ஆபத்தான இந்த ஆண்டில் ஏன் நடத்தினார்கள்?

பொது சுகாதாரத்தை விட ஜோதிடர்களை திருப்திப்படுத்த மத்திய அரசாங்கமும், மாநிலஅரசாங்கமும் முடிவெடுத்ததால், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனுசரிக்கப்படுகிற கும்பமேளா ஹரித்வாரில் இம்முறை 11 ஆண்டுகள் முடிந்ததுமே நடத்தப்பட்டது.

கும்பமேளாக்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன. ஹரித்வார் கும்பமேளா கடைசியாக நடந்தது 2010-ம் ஆண்டில். எனவே,`தற்போதைய’ இந்தக் கும்பமேளாவை நடத்த வேண்டிய ஆண்டு 2021அல்ல, 2022.

ஆனால், இந்தியாவில் கோவிட் இரண்டாம் அலை வரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில்கூட, முழுமையாக ஓராண்டிற்கு முன்னாலேயே கும்பமேளாவை நடத்த ஏன் முடிவெடுத்தார்கள்? அதுவும் மிக ஆபத்தான இந்த ஆண்டில் ஏன் நடத்தினார்கள்?

அதுவும், பெருந்தொற்று குறித்த ஆய்வுகள், எப்போதுமே முதலாம் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலைத் தொற்றுகள் மோசமாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டிய பிறகும் ஏன் நடத்தப்பட்டது? காரணத்தை நான் சொல்கிறேன்.

 Kumbh Mela
Kumbh Mela
AP Photo/Karma Sonam

ஜோதிடக் கணிப்புகளின்படி, `சூரியன் மேஷ ராசிக்கும்’, `குரு (வியாழன்) கும்ப ராசிக்கும்’ இந்த ஆண்டில் இந்தக் காலகட்டத்தில் இடம்பெயர்கிறார்களாம். நாட்காட்டிக்கும், சோதிட கணிப்புக்கும் இருக்கும் இடைவெளியை சரிக்கட்ட ஓராண்டு முன்கூட்டியே நடத்தப்பட்டதாம்.

83 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி நிகழுமாம். இந்தக் கணக்கின் சூட்சுமங்களை விளக்கும் திறன் எனக்கில்லை. உங்களுக்கு தலைவலி வர வேண்டாம் என்றால், அந்த வேலையில் நீங்களும் இறங்காதீர்கள். எனவே, இந்திய அரசாங்கமும், உத்தரகண்ட் மாநில அரசாங்கமும் கும்பமேளாவை நடத்தாமல் இருந்திருக்கலாம்.

பல கோடி மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த கோவிட் சூப்பர் தொற்று நிகழ்ச்சியை மிகச் சாதாரணமாகத் தவிர்த்திருக்க முடியும். இது 11-வது ஆண்டுதான். ஹரித்வாரில் கும்பமேளா நடந்து இன்னும் 12 ஆண்டுகள் முடியவில்லை எனச் சொல்லி, மிகச் சாதாரணமாக இந்த ஆண்டில் நடப்பதைத் தடுத்திருக்கலாம்.

வாய்ப்பிருந்தால் 2022-ம் ஆண்டில், இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை நடத்தும் புறச்சூழ்நிலையை உருவாக்குவதற்காக, இந்த முழு ஆண்டையும்கூட பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், அந்த இரண்டு அரசாங்கங்களும் அப்படிச் செய்யாமல், இன்னும் கொடூரமான காரியங்களைச் செய்தன.

அகில பாரதிய அக்காதா பரிஷத்திடம் ஆலோசனை நடத்தி, 2022-ம் ஆண்டு நடக்க வேண்டிய நிகழ்வை ஓராண்டு முன்கூட்டியே நகர்த்தி 2021-ம் ஆண்டில் நடத்தின. இந்தப் பெருந்தொற்றின் ஆபத்துகள் அனைத்தையும் அறிந்திருந்தும்கூட, சில மாபெரும் ஜோதிடக் கிறுக்குகள் விருப்பப்பட்டதால், இந்தக் காரியத்தை அந்த இரண்டு அரசாங்கங்களும் செய்தன.

ஒரு கிரிமினல் அத்துமீறலுக்குப் (பாபர் மசூதி இடிப்பைக் குறிப்பிடுகிறார் கட்டுரையாளர்) பரிசாக ஒரு கட்டுமானத் திட்டத்தை (ராமர் கோவில் கட்டுமானத்தைக் குறிப்பிடுகிறார் கட்டுரையாளர்) உச்சநீதிமன்றமே வழங்குவதற்கு வழிவகுத்த ஓர் அரசியல் சட்டப் பிரிவு இருக்கிறதல்லவா?

அவர்களுக்கு மிகவும் பிடித்த `ஆச்சாரம்/நம்பிக்கை’ என்ற அதே அரசியல் சட்டப்பிரிவுதான், தற்போதும் இந்திய அரசாங்கத்தையும், உத்தரகண்ட் மாநில அரசாங்கத்தையும், மிகப் பிரம்மாண்டமான அளவில், மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான காரியத்தைச் செய்வதற்குத் தூண்டியது.

பெருந்தொற்று வரலாறு கொண்ட கும்பமேளா

பெருந்தொற்று பரவல் நடக்கும் இடம் என வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வு கும்பமேளா. இருந்தும், இந்திய அரசாங்கம் சில சமயங்களில் சிறப்பாகச் செயல்பட்டு, கும்பமேளா போன்ற நிகழ்வால் ஏற்படும் பொது சுகாதாரப் பிரச்னைகளைத் திறமையாகவும், அக்கறையுடனும் கையாண்டிருக்கின்றன.

அப்படி 2013-ம் ஆண்டின் அலகாபாத் மகா கும்பமேளா எந்தவிதமான மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தாமல் நடந்து முடிந்ததாக, ஹார்வர்டு பொது சுகாதாரப் பள்ளி நடத்திய பெருந்தொற்றுகள் குறித்த ஆழமான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஆனால், அப்போது படுவேகமாகப் பரவிய பெருந்தொற்றுப் பிரச்சனை எதுவும் இல்லை. 2020-ம் ஆண்டில் இருந்து கோவிட் காட்டுத்தீயென பரவி வருகிறது. இந்நேரத்தில், கும்பமேளா நீராடலைப் போன்ற ஒரு நிகழ்வு, கொரோனா சுனாமியையே உருவாக்கும் திறன் பெற்றது என்பதையும், இரண்டாம் அலையின் மையப்புள்ளியாக இருக்கும் என்பதையும் ஊகிப்பதற்கு முனைவர் பட்டம் வேண்டுமா என்ன?

People queue up for COVID-19 vaccine
People queue up for COVID-19 vaccine
AP Photo / Rafiq Maqbool

இந்தியாவில் அனைவருமே, இன்னும் சொல்லப்போனால், உலகில் எல்லோருமே இப்போது ஆபத்தை எதிர்கொள்கிறோம். ஏன்? தில்லியிலும், டேராடூனிலும் உள்ள சில அறிவிலிகள் எடுத்த முட்டாள் தனமான முடிவுகளால்!

`மிச்சமிருக்கும் கும்ப உற்சவத்தை அடையாள உற்சவமாக நடத்துங்கள், எனத் தாமதமாகவும், அரை மனதோடும்' என நரேந்திர மோடியைக் கேட்கத்தூண்டிய நிலைமை உட்பட, இன்று நாம் எதிர்கொள்ளும் எதுவும் எதிர்பாராத நிகழ்வுகள் அல்ல.

சின்மை தும்பேயின் சமீபத்திய நூலான, ``பெருந்தொற்றுகளின் காலம்: அவை எப்படி இந்தியாவையும் உலகத்தையும் வடிவமைத்தன (The Age of Pandemics: How They Shaped India and the World)”, பெருந்தொற்றுகளையும், கும்பமேளாக்களையும் பற்றிய குறிப்பிட்ட விவாதத்தை உள்ளடக்கி இருக்கிறது.

மேலும், 1986-ம் ஆண்டில் வெளிவந்த டேவிட் ஆர்னால்டின், `காலராவும், பிரிட்டிஷ் இந்தியாவில் காலனியமும்’ என்ற கட்டுரையும், காமா மெக்லீனின் `புனித யாத்திரைகளும் அதிகாரமும்: அலகாபாத்தில் கும்பமேளா, 1765-1954’ என்ற 2008-ல் வெளியான நூலும் மிகவும் பயனுள்ளது.

கும்பமேளா மற்றும் தொற்றுகள் குறித்த வரலாறு பல ஆண்டுகளாக மிகச் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனத்திடம் உள்ள காலரா குறித்த மோனோகிராஃபில் கும்பமேளாவைப் பற்றிய தனி அத்தியாயமே இருக்கிறது.

1895-ம் ஆண்டு இந்திய மருத்துவ கெஸட்டில், ஹரித்வார் காலரா தொற்றுகள் குறித்த இயற்கை வரலாறு என்ற கட்டுரையும், `கும்பமேளா பற்றிய விரிவான ஆய்வு: தொற்றுநோய்ப் பரவலுக்கான ஆபத்துகளைக் கண்டறிவது – 2015’ என்ற சமீபத்திய ஆய்வுத்தாளும் கூட இருக்கின்றன.

எனவே, இவ்வளவு பெரிய ஆபத்தான வழியில் செல்வதற்கு, பிரதம மந்திரி மற்றும் அவருடைய ஆலோசகர்களின் அறியாமைதான் காரணமா? அல்லது ஆபத்துகளை அறிந்திருந்தும் எடுக்கப்பட்ட அப்பட்டமான அரசியல் முடிவா?

அரசாங்கத்துக்கு இந்த ஆபத்துகள் எல்லாம் நன்றாகவே தெரியும். உத்தரகண்ட் மாநில அரசாங்கம் கடந்த ஓராண்டாக, கும்பமேளாவை நடத்துவது குறித்தும், நடத்தப்படும் விதம் குறித்துப் பேசியது, பொது சுகாதார ஆபத்துகள் பற்றிய அதன் புரிதலை நன்கு வெளிப்படுத்துகிறது.

2020 ஜூலையில் அப்போதைய முதல்வர், திரிவேந்திர சிங் ராவத் (பா.ஜ.க), அகில பாரதிய அக்காதா பரிஷத்திடம் வழக்கம்போல கும்பமேளா நடைபெறும் என்று வாக்குறுதி அளித்தார். (எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்லும் நிலையில் அவர் அப்போது கிடையாது. எனவே அப்படிப்பட்ட உறுதிமொழிகளை அள்ளிவீசும் நிலையிலும் அவர் அன்றைக்கு இருக்கவில்லை!). எனினும் அப்போதைய கொரோனா சூழலைப் பொறுத்து அது நடத்தப்படும். பாரம்பரியமான முறைகளில் சில மாற்றங்கள் இருக்கலாம்” என பி.டி.ஐ செய்தி நிறுவனம் அவரைச் சுட்டிக்காட்டியது.

செப்டம்பர் 2020-ம் ஆண்டில் திரிவேந்திர சிங் ராவத் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் இருக்கும் என்றார். டிசம்பர் 2020-ம் ஆண்டில், அக்காதா பரிஷத்தின் `துறவிகள்’, அரசாங்கம் மேற்கொள்ளும் கும்பமேளா ஏற்பாடுகள் தங்களுக்கு `அதிருப்தி’ தருவதாகச் சொன்னார்கள்.

வரக்கூடிய பேரிடரை உணர்ந்திருந்ததால் அதை நடத்த முனைப்புக் காட்டாமல் கூட உத்தரகண்ட் மாநில அரசாங்கம் இருந்திருக்கக்கூடும்; கடைசி நேரத்தில் `போதிய தயாரிப்புகள் இல்லை’ என்ற காரணத்தைப் பயன்படுத்தி நடத்தாமல் இருக்கும் எண்ணத்தில்கூட இருந்திருக்கலாம். எனினும், பரிஷத் `எங்கள் வழியில் நாங்கள் நடத்துவோம்' என மிரட்டியது.

2021 மார்ச் 9-ல், திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா செய்தார். அடுத்ததாகப் பதவிக்கு வந்த தீரத் சிங் ராவத், `அதெல்லாம் எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது, புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு ஒரு கட்டுப்பாடும் இருக்காது, கங்கை அன்னை அருளால், இந்தத் தொற்று நோயை வென்றுவிடுவோம்' என்றார்.

திரிவேந்திர சிங் ராவத் பதவியை விட்டு விலகிய பிறகு, கும்பமேளாவிற்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் திரும்பப்பெறப்பட்டது தொடர்பாக அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

 தீரத் சிங் ராவத்
தீரத் சிங் ராவத்

இந்தியாவில் `கோவிட் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த மாதிரியான பிரம்மாண்டமான மத நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது, மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று அவர் சொன்னதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

அவருடைய கூற்று, கும்பமேளாவைக் கையாள்வது குறித்து, பாஜகவின் மத்திய தலைமைக்கும், உத்தரகண்ட் மாநில பா.ஜ.கவின் ஒரு சில கோஷ்டிகளுக்கும் இருந்த கருத்து வேறுபாடு, ராவத் பதவிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாக இருந்திருக்குமோ என்று நினைக்கத் தூண்டுகிறது.

ஏப்ரலில் இந்த நிகழ்வு தொடங்கியபோது, மத்திய குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் கலவையான செய்திகளையே அனுப்பியது. ஏப்ரல் 6-ம் தேதி, அரசால் ஆதரிக்கப்படுகிற செய்தி ஏஜென்சியான ஏ.என்.ஐ, `சூப்பர் தொற்று பரவல் நிகழ்வாக’ கும்பமேளா இருப்பது குறித்து, மூத்த அரசு அதிகாரிகள் கவலை தெரிவிப்பதாக செய்தி ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிக்கையில் சிறிய மாற்றங்களைச் செய்து, பல்வேறு செய்தித் தளங்களும், இந்தியா டுடே உள்ளிட்ட இதழ்களும் செய்தி வெளியிட்டன. `இந்தியா டுடே செய்தி போலியானது' என்று மறுநாளே மத்திய குடும்பநலம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. மிகச் சுருக்கமான அந்த மறுப்பு, ஒரு அரசு அதிகாரியின் கூற்று தவறாக சித்தரிக்கப்பட்டதா இல்லையா என்று கூட தெளிவுபடுத்தவில்லை.

இந்திய அரசாங்கம் தீவிர பொது சுகாதார அவசர நிலையை கும்பமேளா ஏற்படுத்தக்கூடும் என்பதை மறுக்கும் மனநிலையில் மட்டுமே இருக்கிறது. அதற்காக ஒரு மூத்த அதிகாரியின் கூற்றைக் கூடத் திரும்பப் பெறும் அளவுக்குச் செல்கிறது என்ற எண்ணத்தையே அந்த ட்விட்டர் செய்தி ஏற்படுத்தியது.

அரசியல் குற்றம்

ஆரம்பத்தில் கோவிட் 19 பெருந்தொற்று எண்ணிக்கையை சரியாகக் குறிப்பிடுவதில் நடந்த தவறுகளுக்கு சீன அரசாங்கம் பொறுப்பாக இருக்கலாம். ஆனால், அவர்கள் நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தார்கள், நோயை அதிகரிக்கக்கூடிய எதையும் அவர்கள் செய்யவில்லை.

ஆனால், இந்தியாவை ஆளும் இந்தத் தரப்பு, தொற்றுகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டிருக்கிறது. இதைத் தவிர்த்திருக்கலாம்.

சீன அரசாங்கத்தைப் போல, முற்றிலும் எதிர்பாரா நிலையில் இதெல்லாம் நடந்துவிட்டது என்று இந்திய அரசாங்கம் இம்முறை சொல்லவும் முடியாது.

இரண்டாம் அலை வரும் என்பதை அறிந்துகொள்வதற்கு அவசியமான அனைத்து அறிவையும் இந்திய அரசாங்கம் பெற்றிருந்தது. அது மட்டுமல்லாமல், இந்த நேரத்தில் கும்பமேளாவை நடத்தத் தேவையே இல்லை என்ற நிலை இருந்தும்கூட, அதை நடத்தி உண்மையில் இரண்டாம் அலை ஏற்படுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.

பல்வேறு அரசாங்க அமைப்புகள் ஒன்றுக்கொன்று முரணாகச் செயல்பட்டதும், முரணான செய்திகளை வெளியிட்டதும் பாதிப்புகளை ஏற்படுத்தப் போதுமானதாக இருந்தன. (உதாரணமாக பிரதமர், மேற்கு வங்கத்தில் மிகப்பெரும் தேர்தல் கூட்டங்களுக்கு மக்களை வரவழைத்துக்கொண்டே, மிச்சமுள்ள கும்பமேளாவின் பூஜைகளை அடையாள நிகழ்வாக நடத்திக்கொள்கிறீர்களா என, அதுவும் மிகத் தாமதமாகவே கேட்டார்)

எது மிக மோசமானது என்றால், செய்ய வேண்டிய நேரத்தில் ஒன்றுமே செய்யாமல் இருப்பதும், ஒன்றுமே செய்யத் தேவையில்லாத நேரத்தில் மிக அதிகமாகச் செய்வதும், இல்லையென்றால் எண்ணிக்கையில் குளறுபடிகள் செய்வதும், இல்லையென்றால் அப்பட்டமான பொய்களைச் சொல்வதும்தான் (கடந்த சில நாட்களாக உத்தரப் பிரதேசத்தின் இறப்பு எண்ணிக்கை).

இந்திய அரசாங்கமும், உத்தரகண்ட் மாநில அரசாங்கமும் மிகப் பெரும் அளவில் சொதப்பிவிட்டது என்று எல்லோரும் சொன்னார்கள். 83 ஆண்டுகள் முடிந்ததோ இல்லையோ, இந்த ஆண்டு கும்பமேளாவை 11 ஆண்டு முடிந்த நிலையில் ஓராண்டு முன்கூட்டியே நடத்த எந்தவொரு நியாயமும் இல்லை.

மேலும், தடுப்பூசித் திட்டத்தின் அமலாக்கம் மிக மிகத் தொடக்க நிலையில் இருக்கும் போது இப்படியொரு நிகழ்வை நடத்தி இருக்கிறார்கள். கும்பமேளா போன்ற மிகப்பிரம்மாண்டமான அளவில் ஒரு பெருங்கூட்டத்தை நடத்தியதை எவர் ஒருவராலும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

oxygen level i
oxygen level i
AP Photo / Rafiq Maqbool

தேர்தலுக்கும் இதுதான் பொருந்தும்

முதுகெலும்பிருந்தால், அல்லது மூளை இருந்திருந்தால் தேர்தல் ஆணையம் தேர்தல்களைத் தள்ளிவைக்க வலியுறுத்தி இருக்க முடியும், அல்லது குறைந்தது பெரிய கூட்டங்கள், பேரணிகளுக்காவது தடைவிதித்திருக்க முடியும். ஆனால், இதெல்லாம் நடக்கவில்லை.

ஜோதிடம் பொது சுகாதாரத்தை நசுக்க அனுமதிக்கப்பட்டது ஏன்?

இதற்கு முன்னர் கும்பமேளா ஓராண்டிற்கு முன்னதாக நடத்தப்பட்டிருக்கிறதா? ஆமாம். 1938, 1855-ம் ஆண்டில், இதேபோல `ஜோதிட இடப்பெயர்வுகள்’ நடந்தபோது இப்படி செய்யப்பட்டிருக்கிறது. நாம் என்ன 1938-லும், 1855-லுமா வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?

காற்றால் பரவும் பெருந்தொற்றை நாம் 1938-ம் ஆண்டில் எதிர்கொண்டோமா?

1855-ம் ஆண்டில் கும்பமேளா வந்தபோது காலரா பெருந்தொற்று இருந்தது. அந்தக் கும்பமேளா நிகழ்வு காலராவின் தாக்கத்தைப் பெருமளவில் அதிகப்படுத்தவும் செய்தது. பெருந்தொற்று தொடர்பான அறிவு குறைவாக இருந்த அந்தக்காலத்தில்கூட, இதைப் பற்றிப் பேசப்பட்டிருக்கிறது. 1866-ம் ஆண்டில் இஸ்தான்புல்லில் நடைபெற்ற உலகத் தூய்மைப்பணி சிறப்பு மாநாடு (International Sanitary Convention) குறிப்பாக கும்பமேளா புள்ளியில் தொடங்கிய நோய்த் தொற்றைக் குறித்த அறிக்கைகள் மீது கவனம் செலுத்தியது.

1866-ம் ஆண்டில் உருவான சர்வதேச ஒருமித்தக் கருத்தின்படி, `கங்கை ஆற்றை ஒட்டிய இந்தியப் புனித யாத்திரைத் தளங்கள் காலரா தொற்றை உருவாக்கிய இடங்களாக இருந்தன என்றும், அதன் பிறகு அங்கிருந்து முதலில் மெக்காவுக்கும், பிறகு எகிப்துக்கும் சென்று, பிறகு ஐரோப்பாவின் மத்திய தரைக்கடல் பகுதி துறைமுகங்கள் வாயிலாக ஐரோப்பாவில் புகுந்து, முக்கிய ஐரோப்பிய நகரங்களைத் தாக்கியது’ – என, 1866-ம்ஆண்டில், அன்றைய ஒட்டோமான் துருக்கிய அரசின் தலைநகராக இருந்த இஸ்தான்புல்லில் பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை நடைபெற்ற சர்வதேச தூய்மைப்பணி சிறப்பு மாநாட்டின் உரைத் தொகுப்புகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

பெருந்தொற்றுகள் பற்றி 1938 அல்லது 1855-ல் பெற்றிருந்த அறிவைக் காட்டிலும் கூடுதல் அறிவை நாம் 2021-ம் ஆண்டில் பெற்றிருக்கும் நிலையில், பகுத்தறிவு பெற்ற, அறிவார்ந்த அரசாங்கம், `புனிதர்கள்’ என்று தங்களைத்தாமே நியமித்துக்கொண்ட ஒரு சிறிய குழுவினரை, தன்னுடைய அனைத்து வகையான சக்திகளையும் பயன்படுத்தி சம்மதிக்க வைத்திருக்க முடியும். இந்த ஒரே முறை மட்டும் ஜோதிடத்தை சற்று தள்ளிவைத்துவிட்டு, எளிமையாக நாட்காட்டிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் முறையையே பின்பற்றி இருக்கலாம். பொது அறிவுக்கும், நம்பிக்கைக்கும் இடையிலான முறையான, பகுத்தறிவு அடிப்படையிலான விவாதத்துக்கு உதாரணமாக இது இருந்திருக்க முடியும்.

`இப்படி ஒரு பேரிடர் ஏன், எப்படி நிகழ்ந்தது’ என்று எந்தவொரு விளக்கத்தையும் தங்களுடைய துறையான ஜோதிடத்தில் இருந்து, இந்தியாவின் ஒட்டுமொத்த ஜோதிடர்களாலும் தரமுடியாத நிலையில், நாம் இப்போது சற்று தள்ளி இருப்போம் என அவர்கள் முடிவெடுத்திருக்கலாமே? அதுவும் குறிப்பாக, `ஒரு சூப்பர் பெருந்தொற்று நிகழ்வை’ அரசாங்கம் ஆதரிப்பதா வேண்டாமா என்பது குறித்து முக்கிய, பெரிய கொள்கை முடிவை எடுக்கும் வரையாவது நாம் தலையிடாமல் இருப்போம் என இருந்திருக்கலாமே? அதற்குத் தேவை கொஞ்சம் பொது அறிவுதானே?

1942: கும்பமேளாவைத் தடை செய்த போர்

இறுதியாக, கடந்தகாலத்தில் அரசாங்க முகமைகள் திறமையாகச் செயல்பட்டு, கும்பமேளா நிகழ்வுகளைத் தடுத்திருக்கின்றனவா? இந்த ஆண்டு நாம் நடத்த வேண்டாம் என முடிவெடுத்ததற்கான உதாரணங்கள் இருக்கின்றனவா? இருக்கின்றன.

அலகாபாத்தில் 1942-ம் ஆண்டில் நடைபெற்ற, கும்பமேளாவும், மகாமேளாவும் இணைந்த நிகழ்விற்காக, இந்திய அரசாங்கம் எந்த ஒரு ஏற்பாடுகளையும் செய்து தரவில்லை. அந்தக் கும்பமேளா நடைபெற்ற காலம் முழுவதும் அலகாபாத்துக்கு ரயில் டிக்கெட்டுகள் ஏதும் விற்பனை செய்யப்படவில்லை.

இதன் வாயிலாக, கும்பமேளாவுக்குப் போகும் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. `ஜப்பானிய விமானப்படை குண்டு வீசக்கூடும்' என்ற காரணம் காட்டி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கும்பமேளா பகுதியில் மக்களுக்கு எந்தவோர் ஏற்பாடுகளும் செய்து தரப்படவில்லை. விளைவாக, அந்தக் கும்பமேளாவில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. அரசாங்கம் ஆதரவு தர முடியாது என்ற முடிவெடுத்ததற்கு, அன்றைக்கு அக்காதா-க்கள் ஒன்றும் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அன்றைக்கு அனைத்து தரப்பினரும், இந்த மாதிரியான ஒரு சூழலில், இப்படியொரு முடிவை எடுக்க வேண்டியது இயல்புதான் எனப் புரிந்துகொண்டார்கள். இம்முறையோ, ரயில்களை ரத்து செய்வதற்குப் பதிலாக, இந்திய ரயில்வே டேராடூனுக்கும், ரிஷிகேஷுக்கும் இடையில் சிறப்பு ரயில்களை இயக்கியது.

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi
AP Photo/Anupam Nath
கொரோனா லாக்டெளன்: முடிவுகள் எடுப்பதைச் சாதுர்யமாக மாநில அரசுக்குத் தள்ளிவிடுகிறதா மோடி அரசு?

மேலும், அரசாங்கம் பெரும் எண்ணிக்கையில் கூடுவதைத் தூண்டும் வகையில் செய்தித்தாள், ரேடியோ, தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்தது.

இந்த ரயில்களை இயக்க வேண்டாம் என்றோ, இந்த நிகழ்வுக்கு விளம்பரம் செய்ய வேண்டாம் என முடிவுசெய்திருந்தாலே மிகப் பெரிய வேறுபாடு ஏற்பட்டிருக்கும்.

ஆனால், அப்படிச் செய்யவில்லை. அதை எப்படிச் செய்யமுடியும்? இவர்களுக்கு வெல்ல வேண்டிய தேர்தல்கள் இருக்கின்றன. இந்தப் புனிதச் சாமியார்களின் ஆதரவு இவர்களுக்குத் தேவைப்படுகிறது; அதே போல, கான்ட்ராக்ட்களில் இருந்தும் பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது; லட்சக்கணக்கானோரை நோய்வாய்ப்படச் செய்யும் திறன்படைத்த இந்த நிகழ்வில் இருந்து விளம்பர வருவாயைப் பெற முடியும்.

எனவே இந்திய அரசாங்கத்திலும், உத்தரகண்ட் மாநில அரசாங்கத்திலும் தலைமையில் உள்ள மனிதர்கள் மரணப் பொறியை வைத்தார்கள். அவர்களுக்குத் தாங்கள் என்ன செய்கிறோம் என நன்றாகவே தெரியும். அந்த `புனிதர்களுக்கும்’ கூட என்ன நடக்கிறது என்பது முழுமையாகத் தெரியும்.

`மரணம் தவிர்க்க முடியாதது, நமது பாரம்பரியத்தை நாம் தொடர வேண்டும்’ என ஜூனா அக்காதாவின் தலைமை சாமியார் மகந்த் நாராயண் கிரி ஏப்ரல் 17-ம் தேதி அன்று சொன்னார். தானும் தன்னுடைய `புனித’ சாமியார்களும், ஏன் கும்பமேளாவிற்குக் கூடுவதைத் தடுக்க வேண்டுகோள் விடுக்கவில்லை என்று விளக்கியபோது, அவர் இப்படிச் சொன்னதுடன், `எனக்கு ஹரித்வாரில் இது ஒரு வழக்கமான நிகழ்வுதான்’ என்று வேறு சொல்லி இருக்கிறார். `சாக வாருங்கள்!’ என்ற இப்படிப்பட்ட திறந்த அழைப்பு ஏன் எல்லா தளங்களிலும் கண்டிக்கப்படவில்லை எனச் சில மென்மையான மனங்கள் கேள்வி கேட்கலாம்.

modi
modi
‘’கொரோனா பரவல்… மோடி அரசு இந்திய மக்களைக் கைவிட்டுவிட்டது” - விமர்சிக்கும் சர்வதேச ஊடகங்கள்!

அதுவும், இதைவிடக் குறைவாகப் பேசியதற்காக, தப்லிக் ஜமாத் அடித்துத் துவைக்கப்பட்டதை நாம் அறிவோம். உண்மையான சனாதன மனங்களுக்கு இது ஏன் என்று புரியும்?

கர்ம வினையையும், மறுபிறவியையும் நம்பும் `நல்ல இந்துக்கள்’, வாழ்க்கை எனும் விளையாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். மரணம் தவிர்க்க முடியாததாக இருக்கலாம், ஆனால், ஜூனா அக்காதா போன்ற தெய்வீகத்தன்மையின் மகிமைக்குக்கூட, மரணம் என்பது மாற்ற முடியாத ஒன்றுதான்.

நீங்கள் இன்றைக்கு இறக்கலாம். ஆனால், நரேந்திர மோடிக்கு ஓட்டுப் போட்டதால் நீங்கள் சேர்த்த உங்கள் கர்மவினை, நாளையே உங்களுக்கு மறுபிறவியைத் தரப்போகிறது. அதனால், உங்கள் கர்ம வினையை இன்னும் வலுப்படுத்த, இன்னும் நீண்ட நேரம், இன்னும் ஆழமாக நீங்கள் ஏன் கும்பமேளா மரணக்குழியில் மூழ்கக்கூடாது. நீங்கள் வாழுங்கள், மரணியுங்கள், நீங்கள் வாழுங்கள், தொற்றைப் பிறர்க்குப் பரப்புங்கள், இப்படியே தொடருங்களேன்.

நம்மில் சிலர் அந்தளவுக்கு அருள் பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள். ஏனெனில், கடவுள் நம்பிக்கையிலும் சரி, கடவுள் நம்பிக்கை இல்லா சிந்தனையிலும் சரி, ஒரு பிறப்பில் ஒரு முறைதான் வாழ்க்கை. அதன்படி, நமக்குக் கொடுக்கப்பட்ட காலத்தை இன்னும் நீட்டித்து, நம்முடைய வாழ்க்கையைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும்.

அதே போல், மற்றவர்களின் வாழ்க்கையை நீட்டிக்கவும், பாதுகாக்கவும் முயற்சிகள் எடுக்க வேண்டும். குறிப்பாக, மாஸ்க் அணிவதன் மூலமும், கூட்டம் கூடுவதைத் தவிர்த்தும், சமூக இடைவெளியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடைப்பிடித்தும், இந்த நோயைப் பரப்பும் விஷயங்களில் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு தள்ளி இருந்தும், குறிப்பாக, நம்முடைய வாழ்க்கையையும், இறப்பையும் சர்வ சாதாரணமாகக் கருதும் இந்த மதங்களில் இருந்தும் அரசாங்கத்திடம் இருந்தும் நம்மை நாம் விலகி இருக்க வேண்டும்.

ஆனால், இந்த `அன்பிற்குரிய இந்தியர்களும், அன்பிற்குரிய இந்துக்களும்தான்' உங்கள் தலைவர்களாக இருக்கிறார்கள், உங்களுடைய புனித குருக்களாக இருக்கிறார்கள். அவர்கள்தான் உங்களின் கண்ணாடியாகவும், உங்களின் மரண விருப்பமாகவும் இருக்கிறார்கள். அவர்களின் தரிசனத்தைப் பெறுங்கள். ஏனெனில் அவர்கள் உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

உங்களைப் பார்த்து சிரிக்க வேண்டிய தேவையை உணராமல் நட்சத்திரங்கள் சொர்க்கத்தில் அலட்சியமாக இருக்கின்றன. வெளிப்படையாகச் சொல்வதென்றால், நீங்கள் அவற்றைப் பற்றி என்ன நினைத்தாலும், அவை உங்களை சட்டையே செய்யாது.உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கு எனது வாழ்த்துகள்!

`The Wire' இணையதளத்தில் சுத்தபிரதா சென்குப்தா என்பவர் எழுதிய `Kumbh 2021: Astrology, Mortality and the Indifference to Life of Leaders and Stars' கட்டுரையின் தமிழாக்கமே இந்தக் கட்டுரை.

தமிழில்: நர்மதாதேவி / தீக்கதிர்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு