Published:Updated:

``ரஜினி அல்ல; நான்தான் ரியல் அண்ணாமலை!"- ஹெச்.ராஜா

அருண் சின்னதுரை
வி.சதிஷ்குமார்

``ரீல் லைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி அண்ணாமலை என்றால் ரியல் லைப்பில் அண்ணாமலையாக வாழ்ந்தவன் நான்" என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

ஆடிப் பெருக்கையொட்டி, அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் முதல்முறையாக நடத்தும் ‘வைகைப்பெருவிழா–2019’ மாநாடு மதுரையில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. மதுரை புட்டுத்தோப்பு மைதானத்தில் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று நடந்த கோபூஜையில் பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு பேசுகையில், "இன்றைய சூழலில் இயற்கை விவசாயத்தை மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாட்டுக்கு அகத்திக்கீரை கொடுக்கும் ராஜா
மாட்டுக்கு அகத்திக்கீரை கொடுக்கும் ராஜா

இந்நாட்டில் எல்லாமே தெய்வத்தின் அம்சங்கள். மண், மலை, மரம், விலங்கு என்று எல்லாம் புனிதத்தன்மைதான். இயற்கையும் அது சார்ந்த விசயங்கள் தெய்வமாகப் பார்க்கப்படும்போதுதான் காப்பாற்றப்படுகிறது. பாரதத்தில் விவசாயத்தின் அடிப்படையே நாட்டு மாடுகள்தான். அப்படிப்பட்ட நாட்டு மாடுகளின் இனம் அழிக்கப்பட்டுவருகிறது. பசு பாதுகாப்பு மாநாடு ஒரு சிலருக்கு பெரிய பிரச்னையாக உள்ளது.

Vikatan

இன்று நடைபெறும் மாநாட்டின் மூலம் மாடுகளைப் பாதுகாக்க வேண்டும், மண்வளம் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நடக்கிறது. நஞ்சு இல்லாத உணவைக் கொடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் கடமை. மாற்றுப்பாதை என்று சொல்லி ரசாயன உரம், பூச்சிக்கொல்லி என்று சொல்லி கொஞ்சம்கொஞ்சமாக நஞ்சை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ரீல் லைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி அண்ணாமலை என்றால் ரியல் லைப்பில் அண்ணாமலையாக வாழ்ந்தவன் நான்.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

மாட்டுத்தொழுவத்தில் பிறந்து, பால் விற்று படித்தவன் நான். பகுத்தறிவு என்ற பெயரில் காட்டுமிரண்டித்தனமான செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பகுத்தறிவு என்று சொல்லி மாடும், விலங்கும் ஒன்றுதான் என்று சொல்கின்றனர். பசுவுக்கு, இங்கு நடைபெறும் கோபூஜையை நான் ஆதரவாகப் பேசினால் அதை மதவாதம் என்கின்றனர். ஆனால் இது வாழ்க்கை முறை. விஞ்ஞானம், பகுத்தறிவு வேண்டாம். நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையை நாம் அப்படியே கடைபிடித்தால் போதும்" என்று பேசினார்.