இந்தியா ஜனநாயக நாடு என்பதற்கு உயிர்நாடியே மக்களால் மக்களுக்கான ஆட்சியை ஓட்டுப்போட்டு அவர்களே தேர்ந்தெடுப்பதுதான். அப்படி மக்களுக்காக இயங்கும் ஆட்சி குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள ஒவ்வோர் இந்திய குடிமகனுக்கும் உரிமை இருக்கிறது. இதை உறுதி செய்யும் வகையில்தான், 2005-ம் ஆண்டு `தகவல் அறியும் உரிமை சட்டம்' கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் இயற்றப்பட்டு 17 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதன்மீது எழும் விமர்சனங்கள் குறைந்தபாடில்லை. இதை உறுதிசெய்யும் வகையில் அமைந்திருக்கிறது தற்போது வெளியாகியிருக்கும் அறிக்கை ஒன்று.
சமீபத்தில், இந்திய தகவல் ஆணையத்தின் செயல்திறன் அறிக்கை 2021-2022-ன் ஆண்டுகான தரவுகளை `சதார்க் நாக்ரிக் சங்கதன்' (Satark Nagrik Sangathan) என்ற அமைப்பு வெளியிட்டது. அதில் பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

அந்த அமைப்பின் அறிக்கையில், 29 மாநிலங்களிலுள்ள 26 தகவல் ஆணையங்களில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் மேல்முறையீட்டில் நிலுவையிலுள்ள மனுக்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன்படி, ஜூன் (2021- 2022) காலாண்டில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ) கீழ், மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையத்தில் பெறப்பட்ட 3,14,323 மேல்முறையீடுகள் மற்றும் புகார்கள் நிலுவையில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்திய அளவில், 1-ஜூலை-2021 - 30-ஜூன்-2022 இடைப்பட்ட ஆண்டில் மொத்தம் 2,12,443 புகார்கள் பெறப்பட்டிருக்கின்றன. அதே ஆண்டில் 2,27,950 முறையீடுகள் தீர்த்துவைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த அறிக்கையின்படி, ஜார்க்கண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்களின் தகவல்கள் இடம்பெறவில்லை. அங்கு தலைமை தகவல் ஆணையரின் இடம் காலியாக இருப்பதே ஆணையத்தின் செயல்பாடு சுணங்கக் காரணம். அதேபோல மணிப்பூர், தெலங்கானா, மேற்கு வங்கம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஒன்றிரண்டு இடங்களைத் தாண்டி வேறு எந்த ஆணையத்திலும் தலைமை ஆணையர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும், மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், `மாநில தகவல் ஆணையத்தின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை' என்கிறது அறிக்கை.

இதில் மொத்தமாக ஓராண்டில் 3,14,323 மேல்முறையீடுகள் மற்றும் புகார்களுக்குத் தகவல் ஆணையத்தில் எந்த பதிலும் இல்லை. குறிப்பாக, மாநிலங்களின் அடிப்படையில் அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 99,772 வழக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 44,482 வழக்குகளும், கர்நாடகாவில் 30,358 வழக்குகளும், பீகாரில் 21,346 வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன. இவற்றில் முறையே, குறைந்தபட்சமாக மிசோரம் (0), மேகாலயா (2), சிக்கிம் (9) வழக்குகளே நிலுவையில் இருக்கின்றன. இந்த அறிக்கையில் தமிழகத்துக்கான தரவுகள் எதுவும் இல்லை (Not Available) எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் பெறப்படும் மனுக்களுக்குச் சராசரியாக எடுத்துக்கொள்ளும் கால அவகாசமும் இதில் தரவுகளாக வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி சராசரியாக ஒரு மனுவுக்கான பதிலைத் தெரிவிக்க மேற்கு வங்கம் ஏறத்தாழ 24.3 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறதாம். (இந்தக் கணக்கு நிலுவையிலிருக்கும் புகார்களின் அளவைக்கொண்டு தோராயமாக மதிப்பிடப்பட்டிருக்கிறது) இதனால், தற்போது பெறப்படும் மனுக்களுக்கான பதிலை 2046-ம் ஆண்டே பெற முடியும் என்கிறார்கள். மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து, ஒடிசா 5.4 ஆண்டுகளும், மகாராஷ்டிரா 5.3 ஆண்டுகளும் எடுத்துக்கொள்கின்றனவாம்.

``ஒருசில மாநிலங்களைத் தாண்டி, மற்ற இடங்களில் தலைமை தகவல் அதிகாரிகள் மற்றும் பொது தகவலருக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. அதேபோல், தகவல் அறியும் சட்டத்தின் கீழ், குறிப்பிட்ட கால அவகாசத்தில் தகவல் பெறவில்லையெனில், சம்பந்தப்பட்ட தகவல் அதிகாரிக்கு ரூ.25,000 வரை அபராதமாக விதிக்க சட்டம் அறிவுறுத்துகிறது. ஆனால், தற்போதுவரை காலதாமதமாகும் மனுக்கள்மீது மத்திய அல்லது மாநிலங்களில் அபராதம் விதிக்கப்பட்டதற்கான தகவல் எதுவும் இல்லை" என்பதே ஓராண்டில் மட்டும் இத்தனை மனுக்கள் நிலுவையில் இருக்க முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதில் அதிர்ச்சியான செய்தி என்னவெனில், தமிழகம் தொடர்பான எந்தத் தகவலும் இடம்பெறாமல் இருப்பதுதான். இது குறித்து கோவையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ செயல்பாட்டாளரான தியாகராஜன் நம்மிடம் பேசியபோது, ``2013 வரை தமிழகத்தின் தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள் சிறப்பாகவே இருந்தன. ஆனால் தற்போது இதன் செயல்பாடுகள் மோசமாக இருக்கின்றன. இந்தச் சட்டப் பிரிவின்படி தகவல் எப்படித் தர வேண்டும் என்பதற்கு பதிலாக எந்தத் தகவலையெல்லாம் அளிக்கக் கூடாது என்பது பற்றி பொது தகவலர்களுக்கு ஆணையத்தின் சார்பாக பாடம் எடுக்கப்படுகிறது. தற்போது ஆணையத்தில் பணியமர்த்தப்பட்டிருக்கும் அதிகாரிகள் யாரும் வெளிப்படைத்தன்மையுடன் இயங்குவதில்லை. அர்த்தமற்ற காரணங்களுக்காகத் தகவல் தர மறுக்கப்படுகிறது. அரசு மற்றும் ஆணையத்தின் அழுத்தம் காரணமாகவே அதிகாரிகளால் சுதந்திரமாகச் செயல்பட முடிவதில்லை. இந்த நிலை மாற வேண்டும்" என்றார்.