Published:Updated:

மகிழ்ச்சியில் டெல்டா... முதல்வரின் அறிவிப்பு சட்டமாகுமா?

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி

‘`அரசாங்கம் எந்த ஒரு திட்டம் கொண்டுவந்தாலும் அது தங்களின் நன்மைக்காகத்தான் இருக்கும் என்று அப்பாவி மக்கள் ஆரம்பத்தில் நம்பினார்கள். ”

காவிரி டெல்டா, வெற்றி ஆரவாரத்தில் ஆர்ப்பரிக்கிறது. விவசாயிகள் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ‘டெல்டா மாவட்டங்கள் பாதுகாக் கப்பட்ட வேளாண் மண்டலம்’ அறிவிப்பை, மகிழ்ச்சியுடன் தலையாட்டி வரவேற்கின்றன நெற்கதிர்கள். ‘இந்தப் பகுதியில் இனி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு அனுமதி கிடையாது’ எனவும் உறுதிபட தெரிவித்துள்ளது தமிழக அரசு.

2013-ம் ஆண்டு டெல்டாவில் மீத்தேன் எடுக்கும் திட்டம் தொடங் கியது. இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் ரசாயனக் கழிவுகளால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்தனர். இந்தத் திட்டத்தை எதிர்த்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உள்ளிட்டோர் கடுமையாகப் போராடினர். பசுமை விகடன், `மீத்தேன் எமன்’ தொடர் மூலமாக மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கியது.

மகிழ்ச்சியில் டெல்டா... முதல்வரின் அறிவிப்பு சட்டமாகுமா?

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளிலும் மக்களின் எதிர்ப்பு பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியது. மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந் ததால் மீத்தேன் திட்டத்துக்குத் தடைவிதித்து அரசாணை வெளியிட்டார், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. மக்கள் நிம்மதியடைந்தனர். ஆனாலும், ஷெல் கேஸ், ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் ஆபத்துகள் தொடர்ந்தன. போராட்டங் களும் வலுவடைந்தன. காவிரி டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்தது. ஆனாலும், மத்திய அரசு அசரவேயில்லை. சமீபத்தில் ‘ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த, மக்கள் கருத்துக்கேட்பு மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவையில்லை’ என அரசாணை வெளியிட்டது. இது, டெல்டா மாவட்டங்களில் மேலும் பதற்றத்தை உருவாக்கியது. இந்த நிலையில்தான் காவிரி டெல்டா பகுதியை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

பிப்ரவரி 9-ம் தேதி சேலம் தலைவாசலில் நடைபெற்ற கால் நடைப் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதல்வர், `‘ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களைப் பற்றி டெல்டா விவ சாயிகள் கவலைப்படத் தேவை யில்லை. காவிரி டெல்டா பகுதி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இதை சட்டபூர்வமாக்க, தேவையான நடவடிக்கை களை அரசு எடுக்கும். இந்த அரசு எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவான அரசு என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்’’ என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முதல்வரின் இந்த அறிவிப்பை, டெல்டா பகுதிகளில் பட்டாசு வெடித்தும், இனிப்புகளைப் பகிர்ந்தும் மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகிறார்கள் விவசாயிகள்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, ‘`அரசாங்கம் எந்த ஒரு திட்டம் கொண்டுவந்தாலும் அது தங்களின் நன்மைக்காகத்தான் இருக்கும் என்று அப்பாவி மக்கள் ஆரம்பத்தில் நம்பினார்கள். அப்படித்தான் இந்த எரிவாயுத் திட்டமும் இங்கு வந்தது. பிறகு உண்மையை உணர்ந்த மக்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக அர்ப்பணிப்புடன் போராடி னார்கள். மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது. இதை வெகுவிரைவில் சட்டபூர்வமாக அறிவிக்க வேண்டும்” என்றார்.

ரமேஷ் கருப்பையா -  சுந்தர விமலநாதன் - தூரன் நம்பி
ரமேஷ் கருப்பையா - சுந்தர விமலநாதன் - தூரன் நம்பி

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன், “மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருக்க, சட்ட வல்லுநர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, வேளாண் மண்டலத்துக்கு சட்டபூர்வமான பாதுகாப்பு வரைவை உருவாக்க வேண்டும். மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராகப் போராடியவர்கள்மீது பாய்ச்சப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் தூரன் நம்பி, ``சட்டமன்றத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிட்டு, அரசாணை வெளியிட வேண்டும். இதற்காக சட்டம் இயற்ற வேண் டும். அப்போதுதான் உண்மை யான பலன் கிடைக்கும்’’ என்றார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் நடைமுறைப் படுத்தப் பட்டால், டெல்டா மக்க ளின் மனதில் ‘விவசாயி’ எடப்பாடி பழனிசாமி என்றென்றும் நிற்பார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘அனுமதியளிக்கப்பட்ட திட்டங்களும் நிறுத்தப்பட வேண்டும்!’’

மகிழ்ச்சியில் டெல்டா... முதல்வரின் அறிவிப்பு சட்டமாகுமா?

‘‘முதல்வரின் அறிவிப்பில், `புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாது’ என்று கூறியுள்ளார். ஆனால், ஏற்கெனவே வேதாந்தா உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு கொள்கை அளவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய தெளிவு அறிவிப்பில் இல்லை’’ என்று சிலர் ஆதங்கப்படுகின்றனர்.

வேளாண் பொருளியல் ஆய்வாளர் கி.வெங்கட்ராமன் இதுகுறித்து நம்மிடம், ‘‘இந்தச் சிறப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு புதிய அனுமதி கிடையாது என்று சொன்னால் மட்டும் போதாது. ஏற்கெனவே, கொள்கை அளவில் அனுமதி அளிக்கப்பட்ட நிறுவனங்களையும் கட்டுப்படுத்த வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான அனுமதியைப் பெற்றிருக்கும் நிறுவனங்கள், இன்னும் உற்பத்தியைத் தொடங்கவில்லை. அப்படித் தொடங்கினால், டெல்டா மிகப்பெரிய அழிவைச் சந்திக்கும். ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், அந்த நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்க முடியாத வகையில், இந்தச் சிறப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்’’ என்றார்.