Published:Updated:

`ஆட்சியமைக்க அமித் ஷாவோ, பட்னாவிஸோ தேவையில்லை! - சிவசேனா அதிரடி

`சிவசேனாவைச் சேர்ந்த ஒருவர், ஒருநாள் முதல்வராக வருவார் என என் தந்தையிடம் சத்தியம் செய்துள்ளேன். அந்த சத்தியத்தை நான் நிறைவேற்றுவேன்' என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

உத்தவ் தாக்ரே
உத்தவ் தாக்ரே ( ANI )

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க - சிவசேனா கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்தக்கூட்டணி தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைக் கைப்பற்றியது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.க - சிவசேனா கூட்டணி மொத்தம் 161 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. பெரும்பான்மை இருந்தும் இதுவரை ஆட்சியமைக்க முடியவில்லை. முதல்வர் பதவியை சிவசேனா குறிவைத்ததே இதற்கு காரணம். முதலமைச்சர் பதவியில் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர் இரண்டரை ஆண்டுகள் அமர வேண்டும் என்பது சிவசேனாவின் கோரிக்கையாக இருக்கிறது. இது பா.ஜ.கவு-க்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அமித் ஷாவுடன் உத்தவ் தாக்கரே
அமித் ஷாவுடன் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார். அவர் அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்வதாக ஆளுநர் கூறியுள்ளார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பட்னாவிஸ், ``ஆளுநர் எனது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். 5 ஆண்டுகள் மகாராஷ்டிரா மக்களுக்கு சேவை செய்ததில் மகிழ்ச்சி. முதலமைச்சர் பதவியை இரண்டு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்துகொள்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக அமித் ஷாவோ, நிதின் கட்கரியோ எதுவும் கூறவில்லை. சில எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க விலைகொடுத்து வாங்க முயல்வதாக அவர்கள் கூறியது பொய்'' என்றார்.

`பா.ஜ.க-வைக் கண்டுகொள்ளாத சிவசேனா; பிளான் பி!' - மகாராஷ்ட்ரா முதல்வர் பட்னாவிஸ் ராஜினாமா

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த உத்தவ் தாக்கரே, `` தாக்கரே குடும்பத்தினரை பொய் சொன்னதாக முதல்முறையாக ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது துணை முதல்வர் பதவி தருவதாக கூறினார்கள். நான் வேண்டாமென்று மறுத்துவிட்டேன். முதல்வர் பதவி உள்ளிட்ட அதிகாரத்தை சமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எனது கோரிக்கையை அமித் ஷா ஏற்றுக்கொண்டார். நான் பொய் சொன்னதாக அவர் கூறியதையடுத்து பட்னாவிஸுடன் பேசுவதை நிறுத்திவிட்டேன். பா.ஜ.க எங்களுக்கு எதிரிக்கட்சி இல்லை. ஆனால், அவர்கள் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

சிவசேனாவைச் சேர்ந்த ஒருவர், ஒருநாள் முதல்வராக வருவார் என என் தந்தையிடம் சத்தியம் செய்துள்ளேன். அந்த சத்தியத்தை நான் நிறைவேற்றுவேன். அதற்கு அமித் ஷாவோ, பட்னாவிஸோ எனக்குத் தேவை இல்லை. அமித் ஷா மற்றும் பட்னாவிஸ் ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களது கட்சியை நம்ப மகாராஷ்டிரா மக்கள் தயாராக இல்லை. எனது அறிக்கைகளைப் பார்த்து நீங்கள் அதிர்ச்சியடைந்திருக்கலாம். பா.ஜ.க ஆட்சியமைக்க போதுமான எண்ணிக்கையில்லை. ஆனால், குதிரை பேரத்தில் ஈடுபடாமல் அரசு அமைப்பதாக கூறுகிறீர்கள். தவறான நபர்களுடன் கூட்டணி வைத்துள்ளதாக உணர்கிறேன். என்னை ஒருவர் பொய்யர் என நிரூபிக்க முயன்றால் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் மோடியை விமர்சிக்கவில்லை. என்னுடைய விமர்சனங்கள் எல்லாம் கொள்கை முடிவுகளைப் பற்றியதுதான் தனி நபர் தாக்குதல்கள் இல்லை” எனக் கூறியுள்ளார்.