Published:Updated:

`தமிழகத்தில் மீண்டும் லாட்டரி?' - லாபம் அடையப்போவது அரசா, லாட்டரி அதிபர்களா?

Lottery
News
Lottery ( Photo: Vikatan )

லாட்டரிச் சீட்டு விற்பனையை அரசு தொடங்கினால் என்ன நடக்கும்… அதனால் அரசுக்கும் மக்களுக்கும் என்ன நன்மை கிடைக்கும்?

டாஸ்மாக் கடைகளால் லட்சக்கணக்கான ஏழை எளிய குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, வருமானத்தை பற்றி சிந்திக்காமல் மக்கள்நலனைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாகவே தமிழகத்தில் தொடர்ந்து வருகிறது. ஆனால், டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அறிகுறிகளே தென்படவில்லை. இதுவே தமிழகப் பெண்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், `தமிழகத்தில் மீண்டும் லட்டரி விற்பனை தொடங்கப்போகிறது’ என்று பரவும் தகவல் அவர்களை மேலும் பதற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளிவராதபோதே எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கியிருக்கின்றன. சரி, லாட்டரிச் சீட்டு விற்பனையை அரசு தொடங்கினால் என்ன நடக்கும்… அதனால் அரசுக்கும் மக்களுக்கும் என்ன நன்மை கிடைக்கும்?

`விழுந்தால் வீட்டுக்கு விழாவிட்டால் நாட்டுக்கு!’

`விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு' என்ற முழக்கத்தோடு அறிஞர் அண்ணாவால் 1968-ம் ஆண்டு தமிழ்நாட்டில் லாட்டரிச் சீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்ட இந்த லாட்டரிச் சீட்டுத் திட்டத்துக்கு ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் ஆரவார வரவேற்பு இருந்தாலும் காலப்போக்கில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. லாட்டரிச் சீட்டுக்கு அடிமையான ஏழை மக்கள் பலர் தங்கள் அன்றாட வருமானத்தையும், வாழ்நாள் சேமிப்பையும் இழப்பதாகவும் இதனால் பலர் தற்கொலை செய்துகொள்வதாகவும் நாலாபுறமும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆனாலும், லாட்டரி விற்பனை அமோகமாகத்தான் நடந்துகொண்டிருந்தது. ஏழை மக்களின் குடும்பப் பொருளாதாரம் வெகுவாக சீர்குலைந்து பெண்கள் மத்தியில் இதற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பவே, 2003-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா லாட்டரிச் சீட்டுக்குத் தடை செய்தார். தமிழ்நாட்டு லாட்டரிச் சீட்டுக்கு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களுடைய லாட்டரிச் சீட்டுகளைத் தமிழகத்தில் விற்கவும் தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவ்வப்போது தமிழகத்தில் மீண்டும் லாட்டரிச் சீட்டுத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற குரல்களும் எழுந்தாலும், லாட்டரிக்கு அனுமதி வழங்கப்படாமலேயே இருந்தது. தமிழகத்தின் நிதிநிலை கவலையளிக்கக் கூடியதாக இருக்கும் தற்போதைய சூழலில், அரசு வருவாயை பெருக்குவதற்கான வழிகளை ஆராய்ந்துகொண்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் மீண்டும் லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு அனுமதிக்கலாமா என்று விவாதம் நடந்துகொண்டிருப்பதாகத் தமிழக அரசின் உள்விவகாரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

Jayalalithaa
Jayalalithaa

`கார்த்தி சிதம்பரம் பேச்சும்… லாட்டரி மார்ட்டின் செல்வாக்கும்...’

திடீரென்று லாட்டரிச் சீட்டு அனுமதி தொடர்பான பேச்சு எழவில்லை. கடந்த மே மாதமே, காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யான கார்த்தி சிதம்பரம், லாட்டரிச் சீட்டைக் கொண்டுவந்தால் கோடி, கோடியாகப் பணம் கொட்டும் என்று செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார். அந்தச் சந்திப்பில், ``தமிழகத்தில் மறைமுகமாக லாட்டரிச் சீட்டு விற்பனை நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதை அரசே விற்றால் கோடி, கோடியாகப் பணம் கொட்டும். அதில் கிடைக்கும் வருமானத்தை ஏழை, எளிய மாணவர்களின் உயர் கல்விக்கும், தரமான மருத்துவ உதவிக்கும் பயன்படுத்தலாம்” என்று அவர் கூறியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், லாட்டரி விற்பனையில் கோலோச்சிய `லாட்டரி மார்ட்டின்’ அண்மையில் தமிழக நிதியமைச்சரைச் சந்தித்துப் பேசியதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதுமட்டுமல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் லாட்டரி மார்ட்டின் நெருக்கமானவர். இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துதான் தமிழகத்தில் மீண்டும் லாட்டரி வரப்போகிறது என்ற பேச்சு எழுந்திருக்கிறது. இதுகுறித்து தி.மு.க வட்டாரத்தில் பேசியபோது, ``லாட்டரி அனுமதி பரிசீலனையில் இருப்பது உண்மைதான். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன முடிவெடுப்பார் என்பது யாருக்கும் தெரியாது” என்றனர்.

லாட்டரி மார்ட்டின்
லாட்டரி மார்ட்டின்

மேலும் லாட்டரி கொண்டுவந்தால் அரசுக்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்துப் பேசிய அவர்கள், ``லாட்டரியால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர், உழைப்பு சுரண்டப்படுகிறது என்ற கருத்தெல்லாம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்று. உண்மையில் லாட்டரியால், அரசுக்கும் மக்களுக்கும் பலன்தான் கிடைக்கிறது. பாதிப்பு என்பது இல்லவே இல்லை. ஜெயலலிதா லாட்டரியைத் தடை செய்ததற்கு உண்மையான காரணம் லாட்டரி அதிபர்களுடன் ஏற்பட்ட மோதல்தானே தவிர, மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் அல்ல. லாட்டரி விற்பனையை அரசே தொடங்கும்பட்சத்தில் அது இப்போது இருக்கும் மோசமான பொருளாதார சூழலைச் சீர்செய்யப் பேருதவியாக இருக்கும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

லாட்டரி கொண்டுவரப்பட்டால் அதிபர்கள் சம்பாதிப்பார்கள் என்பதை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லி எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், இதனால் அரசுக்கு வரும் வருமானத்தையும் மக்கள் அடையும் பயனையும் வெளியில் சொல்வதில்லை. டாஸ்மாக்கைக் காட்டிலும் இதில் அரசுக்கு அதிகளவு வருமானம் வரும். லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு அதிகளவு ஆள்கள் தேவைப்படும் ஆகையால், மாற்றுத்திறனாளிகள் இதில் வேலை வாய்ப்பு பெறுவார்கள். பரிசு விழும் மக்களும் பணக்காரராவார்கள். இப்படி நிறைய விஷயங்களைச் சொல்லலாம். கள்ள லாட்டரி அடிப்பது மட்டும்தான் இந்த விவகாரத்தில் பிரச்னையாக உருவெடுக்கும். கேரளாவில் உள்ளதைப்போல லாட்டரி விற்பனையை முறைப்படுத்தி செய்தால் அந்தப் பிரச்னையும் வராமல் செய்துவிடலாம்” என்கின்றனர்.

``கண்களை விற்றுவிட்டு சித்திரம் வரைவதற்குச் சமம்!”

லாட்டரிச் சீட்டு விற்பனை அனுமதிக்கப்பட்டால் நன்மைதான் நடக்குமா? அதனால் பாதிப்பே ஏற்படாதா என்பது குறித்து சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான லோகநாதனிடம் கேட்டதற்கு, ``லாட்டரி என்பது எந்தவகையிலும் மக்களுக்கு நன்மை சேர்க்காது. மக்களின் ஆசையைத் தூண்டி அவர்களின் உழைப்பை உறிஞ்சக்கூடிய அரக்கத்தனம் கொண்டது லாட்டரி. `நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்காக லாட்டரியைத் தொடங்குகிறோம்’ என்று இந்த அரசு அறிவிக்குமானால் அதைவிட மோசமான நடவடிக்கை வேறெதுவும் இருக்காது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டுஃப்லோ உள்ளிட்டோர் அடங்கிய பொருளாதார ஆலோசனைக் குழுவையெல்லாம் அமைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதையெல்லாம் பார்த்து மக்களைப் பாதிக்காத வகையிலான பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் கொண்டுவரப்படும் என்று மக்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில், மக்களின் வாழ்வாதாரத்தையே சீர்குலைக்கும் விதமாக லாட்டரி சீட்டு விற்பனையைக் கையிலெடுத்தால் அது இந்த அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயரையும் சமூக சீரழிவையும் ஏற்படுத்தும்.

வழக்கறிஞர் லோகநாதன்
வழக்கறிஞர் லோகநாதன்

500 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவன் அந்த 500 ரூபாயையும் அப்படியே வீட்டுக்குக் கொண்டு சென்றால்தான் அவன் வாழ்வை நடத்த முடியும். அது 600 ரூபாய், 700 ரூபாய் என்று உயரும்போதுதான் உண்மையான பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அதைவிட்டுவிட்டு 500 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவனிடம் டாஸ்மாக் வாயிலாக 200 ரூபாயும் லாட்டரி சீட்டு வாயிலாக 200 ரூபாயும் பறித்துவிடுவீர்களேயானால் வெறும் 100 ரூபாயில் அவன் எப்படி வாழ்வான் என்று சிந்தித்துப் பாருங்கள். லாட்டரியால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பது வடிகட்டிய பொய். எத்தனையோ குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கின்றன என்பதை நானே கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். ஒருசிலருக்கு பரிசுத் தொகை கிடைக்கும். ஆனால், பல லட்சம் பேர் நடுத்தெருவுக்கு வந்துவிடுவார்கள்.

இன்னொருபுறம் இதனால் அரசுக்கும் பெரியளவில் வருவாய் கிடைக்காது என்பதுதான் உண்மை. அரசு 1,000 சீட்டுகள் அடிக்கச் சொன்னால் லாட்டரி அதிபர்கள் கள்ளத்தனமா ஒரு லட்சம் சீட்டுகள் அடித்து மக்கள் பணத்தைச் சுரண்டுவார்கள். அதையெல்லாம் அரசாங்கத்தால் தடுக்கவே முடியாது. ஆக லாட்டரி என்பது ஒரு சில லாட்டரி அதிபர்கள் பணம் கொழிப்பதற்கான விஷயம் மட்டுமே. அப்படி அரசு இதைப் பரிசீலிக்கும்பட்சத்தில், `லாட்டரி அதிபர்களை வளர்த்துவிட்டால்தான் நாளைக்கு கட்சிக்கு பணம் கிடைக்கும்’ என்ற நோக்கமாக இருக்கலாமே ஒழிய அரசின் வருவாயைப் பெருக்குவதற்காக இருக்காது.

லாட்டரி
லாட்டரி

உதாரணத்துக்கு 2016 - 17 நிதியாண்டில் மகாராஷ்டிர அரசு, லாட்டரி மீதான வரியிலிருந்து சுமார் ரூ.132 கோடியை மட்டுமே ஈட்டியுள்ளது. அதில் ரூ.125 கோடி மற்ற மாநிலங்களின் ஆன்லைன் லாட்டரிகளின் வரியிலிருந்து வந்தது. அதாவது, அந்த மாநில அரசின் லாட்டரி வழியாக வெறும் ரூ.7 கோடி மட்டுமே வருமானம் ஈட்டியிருக்கிறது. கேரளா போன்ற மாநிலங்கள் லாட்டரியிலிருந்து ஆண்டுக்கு சுமார் ரூ.1,300 கோடி வருமானம் ஈட்டுவதாகச் சொல்லப்படுகிறது” என்றவர், அரசின் வருவாயைப் பெருக்குவதற்கு பல வழிகள் உள்ளன என்று அவற்றைப் பட்டியலிட்டார்.

``அரசின் வரி வருவாயைப் பொறுக்குவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களுக்கு வர வேண்டிய வாடகைத் தொகை பல கோடி ரூபாய் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் அப்படி எவ்வளவு வர வேண்டியிருக்கும்? அவற்றை முறையாக வசூலிப்பது. வரி வருவாய்களை முறையாக வசூலிப்பது, கனிமங்களின் விற்பனையை ஒழுங்குமுறைக்கு கொண்டுவருவது என அரசின் வருமானத்தைப் பெருக்க எத்தனையோ வழிமுறைகள் உள்ளன.

இந்த வழிமுறைகளைக் கொண்டு வர யோசிக்காமல், லாட்டரிச் சீட்டை மீண்டும் கொண்டு வர யோசிப்பது கண்களை விற்றுவிட்டு சித்திரம் வரைவதற்கு சமம்” என்கிறார் லோகநாதன்.

`பி.டி.ஆர் சாதாரணமானவர் கிடையாது!’

லாட்டரி விற்பனை கொண்டுவந்தால் அது அரசுக்கு பலனளிக்குமா என்று சில பொருளாதார வல்லுநர்களிடம் பேசியபோது, ``லாட்டரி விற்பனை மீண்டும் வரப்போகிறது என்று அரசு முதலில் அதிகாரபூர்வமக அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிக்கும்போது அது என்ன நோக்கத்துக்காக கொண்டு வரப்படுகிறது என்பதை அரசு தெளிவுபடுத்தும். அதையெல்லாம் வைத்துதான் இந்த விஷயத்தில் கருத்து சொல்ல முடியும். அதற்கு முன்பாக யூகத்தின் அடிப்படையில் வெளியாகும் தகவல்களுக்கு கருத்துச் சொல்ல முடியாது. அண்ணா காலத்தில் பொருளாதாரத்தை சரிகட்ட லாட்டரி கொண்டு வரப்பட்டதையும் இப்போது உள்ள காலகட்டத்தையும் ஒப்பிட்டுப் பேசுவது தவறு.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

அப்போது இருந்த பட்ஜெட் தொகை வேறு, இப்போதுள்ள பட்ஜெட் தொகை வேறு. தவிர, பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தில் இருக்கின்றன. இப்படியான சூழலில் லாட்டரி விற்பனையைக் கொண்டு வந்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து பொருளாதாரத்தை சரி செய்ய நினைக்கின்றனர் என்று பேசுவதெல்லாம் விவரம் தெரியாதவர்கள் பேச்சு. லாட்டரி மூலம் சொல்லிக்கொள்ளும் அளவில்கூட அரசுக்கு வருமானம் கிடைக்காது. தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் சாதாரணமானவர் கிடையாது. அவருக்கு எதிலிருந்து எவ்வளவு வருமானம் வரும், என்ன செய்ய வேண்டும் என்று எல்லாம் தெளிவாகத் தெரியும். ஆகையால், பொறுத்திருந்து பார்ப்போம்” என்கின்றனர்.