Published:Updated:

`பயப்படுகிறோம், நாங்கள் மாணவர்கள் மட்டுமே!’ -காலணிகள், பூக்களோடு நடந்த நூதன போராட்டம்#CAA

மாணவர்கள் ஒருவர்பின் ஒருவராக வந்து வெற்றுப் பதாகையையும் காலணிகளையும் வைத்துவிட்டுச் சென்றனர். சில மாணவர்கள் காலணிகளுடன் பூக்களையும் வைத்துவிட்டுச் சென்றனர்.

ஐ.ஐ.எம்.பி
ஐ.ஐ.எம்.பி

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், பெங்களூரிலுள்ள ஐ.ஐ.எம்.பி கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் தங்களது எதிர்ப்பை வித்தியாசமாகப் பதிவு செய்துள்ளனர்.

Thursday protest
Thursday protest
Twitter

ஐ.ஐ.எம்.பி மாணவர்கள், கடந்த வியாழக்கிழமை குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான வாசகங்களைப் பதாகைகளில் எழுதி உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்தினர். மாணவர்கள் வெளியில் வந்தால் கைது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையினர் காத்திருந்தனர்.

நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சில மாநிலங்களில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. போராட்டங்கள் நடத்தக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டது. தடையை மீறி போராட்டத்தில் கலந்துகொள்வது தங்களது எதிர்காலத்தை பாதிக்கும் எனக் கருதிய மாணவர்கள், வெற்றுப் பதாகைகளையும் காலணிகளையும் வளாகத்துக்கு வெளியில் வைத்து அடையாளப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக என்.டி.டி.வி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், `மாலை ஆறு மணியளவில் ஐ.ஐ.எம் வளாகத்துக்குள் சென்றோம். காவல்துறையினர் வளாகத்தில் நின்றுகொண்டிருந்தனர். பேராசிரியர் ஒருவர் வெளியே வந்து எதுவும் எழுதப்படாத பதாகை ஒன்றை கீழேவைத்து, தன்னுடைய காலணிகளைக் கழற்றி பதாகையின்மேல் வைத்துவிட்டு உள்ளே சென்றார்.

வெற்றுப் பதாகை மற்றும் காலணி
வெற்றுப் பதாகை மற்றும் காலணி
Ndtv

சிறிது நேரத்தில், இரண்டு மாணவர்கள் வெளியே வந்தனர். அதில் ஒரு மாணவர் மாற்றுத் திறனாளி. அவர்களும் வெற்றுப் பதாகைகளையும் காலணிகளையும் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். இதேபோல, மாணவர்கள் ஒருவர்பின் ஒருவராக வந்து வைத்துவிட்டுச் சென்றனர். சில மாணவர்கள் அமைதியைக் குறிக்கும்விதமாக காலணிகளுடன் பூக்களையும் வைத்துவிட்டுச் சென்றனர்.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் வெளியில் கூட்டமாகக்கூட அனுமதியில்லை. ஆனாலும், தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்ய விரும்பிய மாணவர்கள் அடையாளப் போராட்டமாக இதைச் செய்துள்ளனர். காலணிகளை வைத்துப் போராடும் மாணவர்களின் பிரதிநிதியாக ஒரு மாணவி வெளியில் வந்து `நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம். ஏனென்றால், நாங்கள் மாணவர்கள் மட்டுமே’ என்று கூறியுள்ளார்.

மாணவர்களின் போராட்டம்
மாணவர்களின் போராட்டம்
Twitter

மாணவர்களின் நூதன போராட்டம் குறித்துப் பேசியுள்ள பேராசிரியர் தீபக், `நாம் யார் என்பதை குடியுரிமைச் சட்டத் திருத்தமும் என்.ஆர்.சியும் மாற்றிக்கொண்டிருக்கின்றன. கற்றுக்கொள்ள வேண்டிய தருணமாக இதைப் பார்க்கிறேன். நாட்டிலிருக்கும் பிரச்னைகளைப் பற்றி மாணவர்கள் பேசுவதற்கான வாய்ப்பாக இதைப் பயன்படுத்த வேண்டும். குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டால் பல்கலைக்கழகங்கள் மாணவர்களைப் போராட அனுமதிக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் நடுநிலையாக இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

பெங்களூரில் மாணவர்களுடன் பேராசிரியர்களும் இணைந்து போராடியுள்ளது கவனிக்கத்தக்கது. தனித்துவமாக நடைபெற்ற இந்த அடையாள போராட்டம் நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது.