Election bannerElection banner
Published:Updated:

சைக்கிளிங், வைல்ட் லைஃப் போட்டோகிராபி, இளையராஜா பாட்டு... அமுதா ஐ.ஏ.எஸின் பர்சனல் பக்கங்கள்!

ஜோதிகாவைக் கட்டித்தழுவும் அமுதா
ஜோதிகாவைக் கட்டித்தழுவும் அமுதா

உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றிவந்த நிலையில், தற்போது பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் அமுதா.

``தற்போது பயோபிக் திரைப்படங்கள் சினிமாவில் டிரெண்டாகிவிட்டன. அமுதா ஐ.ஏ.எஸ்ஸின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால், நீங்க நடிக்க வாய்ப்பிருக்கா?" - 2018-ம் ஆண்டு நடைபெற்ற `அவள் விகடன்' விருதுகள் நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகாவிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது.

புன்னகையுடன் பதிலளித்த ஜோதிகா, ``அமுதா மேடமை யாருமே மேட்ச் பண்ண முடியாது. ஒரு சீக்ரெட் சொல்றேன். மேடமை இதுக்கு முன்னாடியே சந்திச்சிருக்கேன். இவருடைய பெரிய ரசிகை நான். சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க முடிவெடுத்ததும், இனி எந்த மாதிரியான படங்களில் நடிக்கலாம்னு ரொம்பவே யோசிச்சேன். அப்போ ஒருமுறை அமுதா மேடத்தைச் சந்திச்சுப் பேசினேன். `மீடியா மிகப்பெரிய சக்தி. அதில் நிறைய நல்ல விஷயத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும். எனவே, மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்லும் வகையிலான படங்களிலும், பெண்களை உயர்வாகச் சித்திரிக்கும் வகையிலான ரோல்களிலும் நடிங்க'ன்னு ஊக்கமும் நம்பிக்கையும் கொடுத்தாங்க. அதன் பிறகுதான், பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். அதுக்கு மேடம்தான் காரணம்.

எல்லாப் பெண்களுக்கும் சில பெண்கள் இன்ஸ்பிரேஷனாக இருப்பாங்க. என்னோட அம்மா, ஜெயலலிதா மேம், அமுதா மேம் ஆகியோர்தாம் என்னுடைய இன்ஸ்பிரேஷன். இவருக்கு விருது கொடுக்க எனக்குத் தகுதியே இல்லை. இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி" என்றவர், சட்டென அருகிலிருந்த அமுதாவின் கால்களைத் தொட்டு வணங்கினார். ஜோதிகாவின் இந்த அன்பைச் சற்றும் எதிர்பாராத அமுதா, அவரைக் கட்டித்தழுவினார். ஒட்டுமொத்த அரங்கமும் பலத்த கைத்தட்டலுடன் ஆரவாரம் செய்தது. பிறகு, `மாண்புமிகு பெண் அதிகாரி'க்கான அவள் விகடன் விருதை, அமுதா ஐ.ஏ.எஸ்ஸுக்கு வழங்கினார் ஜோதிகா.

அமுதாவுக்கு விருது வழங்கும் ஜோதிகா
அமுதாவுக்கு விருது வழங்கும் ஜோதிகா

பின்னர் பேசிய அமுதா, ``ஐ.ஏ.எஸ் அதிகாரியாகும் கனவு என் 13 வயதில் ஏற்பட்டது. 23 வயதில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகிவிட்டேன். இந்த ஆண்டுடன் என் பணியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறேன். நான் என்ன இலக்குடன் இந்தப் பணிக்கு வந்தேனோ, அதைக் கடந்த 25 ஆண்டுகளில் செய்திருக்கிறேன். ஒரு விஷயம் சரியானதாக இருந்தால், அதைத் தைரியமாகச் செய்ய வேண்டும். எதற்கும் பயப்படக் கூடாது. இப்படித்தான் நான் சிறுவயதிலிருந்து வளர்ந்தேன்" என்று பெருமிதத்துடன் கூறினார். அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.

எந்தத் துறையில், எந்தப் பணியிடத்தில் வேலை செய்தாலும், பம்பரமாய் சுழன்று வேலை செய்து பாராட்டுகளைப் பெறுவார் அமுதா. நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி; பழகுவதற்கு இனிமையானவர்; மக்களின் அன்பைப் பெற்றவர்... இவைதாம் அமுதாவின் 27 ஆண்டுக்கால அடையாளம். உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றிவந்த நிலையில், தற்போது பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இது, மிகவும் முக்கியத்துவமும் கெளரவமும் மிக்க பணியாகக் கருதப்படுகிறது. இந்தப் பொறுப்பில் ஐந்தாண்டுகள் அமுதா பணியாற்றுவார். இதனால் தற்போது தமிழகத்தின் அனைத்து மீடியாக்களிலும் கவனம் பெற்றிருக்கிறார் அமுதா.
அமுதா ஐ.ஏ.எஸ்
அமுதா ஐ.ஏ.எஸ்

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட அமுதாவின் தாத்தா சுதந்திரப்போராட்ட தியாகி. எனவே, பாட்டிக்குக் கிடைத்த ஓய்வூதியத்தைப் பெற அவருடன் அமுதாவும் உடன் சென்றார். கலெக்டர் வரும்போது அனைவரும் அவருக்கு வணக்கம் சொல்ல, `இவர் யார்?' எனப் பாட்டியிடம் கேட்கிறார். `ராஜா மாதிரி. மக்களுக்கு நல்லது பண்றது இவர் வேலை' எனச் சொல்லியிருக்கிறர் பாட்டி.

`தானும் கலெக்டராகி மக்களுக்கு நல்லது செய்யலாம்' என்ற எண்ணம் அந்த 13 வயதில் அமுதாவுக்கு ஏற்படுகிறது. பி.எஸ்ஸி அக்ரி முடித்ததும், சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாரானார். முதல் முயற்சியிலேயே வெற்றியுடன், ஐ.பி.எஸ் போஸ்டிங் கிடைத்தது. மீண்டும் தேர்வெழுதினார். 1994-ம் ஆண்டு தனது இரண்டாவது முயற்சியில், தமிழகத்தில் தேர்வானவர்களில் முதலிடம் பிடித்தார். அத்துடன் ஐ.ஏ.எஸ் பணியும் கிடைத்தது.

களப்பணியில் அமுதா ஐ.ஏ.எஸ்
களப்பணியில் அமுதா ஐ.ஏ.எஸ்

கடலூர் சப்-கலெக்டராகப் பணியைத் தொடங்கினார். பிறகு, கூடுதல் கலெக்டர், மாவட்ட ஆட்சியர், யுனிசெஃப் அதிகாரி, பல துறைகளின் செயலாளர், முசோரி பயிற்சி மைய விரிவுரையாளர் எனக் கடந்த 27 ஆண்டுகளில், 18 பணிமாறுதல்களைச் சந்தித்திருக்கிறார். தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது பெண் குழந்தைகளுக்கான கல்வி, குழந்தைத் திருமணம் தடுப்பு, மகளிர் சுய உதவிக்குழு வளர்ச்சி உட்பட பெண்கள் நலன் மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்காக இவர் மேற்கொண்ட பணிகள் சிறப்பான பலன்கொடுத்தன.

இதுதவிர, சென்னையில் பெருவெள்ளம் வந்தபோது, வெள்ள பாதிப்புகளைச் சரிசெய்யும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டார். மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோருடன் நெருங்கிப் பழகியதுடன், அவர்களின் நன் மதிப்பையும் பெற்றார் அமுதா. அப்துல் கலாம், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் இறுதிச்சடங்கில் நல்லடக்கப் பணிகளை மேற்கொள்ளும் சிறப்பு அதிகாரியாகப் பொறுப்புடன் பணியாற்றி, கட்சி வேறுபாடின்றி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றார். கருணாநிதியின் நல்லடக்கப் பணியில் அவரது குடும்பத்தினரைத் தொடர்ந்து இறுதியாக அமுதாவும் கலைஞர் உடலில் ஒரு கைப்பிடி உப்பினை போட்டு அஞ்சலி செலுத்தினார். அந்த மூன்று காலகட்டத்திலும் இந்திய ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டார் அமுதா. 

களப்பணியில் அமுதா ஐ.ஏ.எஸ்
களப்பணியில் அமுதா ஐ.ஏ.எஸ்

தனது பணியில் மறக்க முடியாத ஓர் அனுபவத்தைப் பற்றி அமுதா கூறும்போது, ``செங்கல்பட்டு சப்-கலெக்டரா இருந்தேன். நீதிமன்ற உத்தரவை மீறி, மணல் மாஃபியா கும்பல் பாலாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டாங்க. அதைத் தடுக்க நிறைய முயற்சிகள் செய்தேன். என்னை மிரட்டினாங்க; லஞ்சம் கொடுக்கிறதா சொன்னாங்க. எதுக்கும் நான் பிடிகொடுக்கலை. ஒருநாள் ஆற்றில் மணலைத் திருடிச்சென்ற லாரிகளைச் சிறைபிடிச்சேன். அப்போ ஒரு லாரி ஓட்டுநர் என் மேல வண்டியை மோதினார். அதில் கீழே விழுந்து, முதுகில் அடிபட்டுச்சு.

இப்படி நிறைய விஷயங்களைப் பார்த்துட்டேன். நல்லது கெட்டது கலந்ததுதானே வாழ்க்கை. எல்லாம் தெரிந்துதான் சிவில் சர்வீஸ் பணிக்கு வந்தேன். உயரதிகாரிகளின் ஏற்றத்தாழ்வு, ஆண்-பெண் பாகுபாடு, நேர்மையாக இருப்பதால் வரும் பணி மாறுதல், பதவி உயர்வு, பழிவாங்கல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள்னு என் சர்வீஸ்ல நிறைய சவால்களை எதிர்கொண்டிருக்கிறேன். அதனால் இன்றுவரை என்னைச் சமரசம் செய்துக்கலை; வருத்தப்படவுமில்லை" என்கிறார் உறுதியுடன்.  

அமுதா ஐ.ஏ.எஸ்
அமுதா ஐ.ஏ.எஸ்

இவரின் கணவர் ஷம்பு கலோலிகரும் ஐ.ஏ.எஸ் அதிகாரிதான். இவர், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளராகப் பணியாற்றுகிறார். 1996-ம் ஆண்டு இவர்களுக்குத் திருமணமானது. அமுதாவை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு அவரின் அண்ணனும் சிவில் சர்வீஸ் பணிக்கு வந்து, தற்போது ஐ.எஃப்.எஸ் அதிகாரியாக இருக்கிறார். வைல்ட் லைஃப் போட்டோகிராபியிலும் ஆர்வம் கொண்ட அமுதா, இதற்காக மாதத்தில் சில நாள்களை ஒதுக்கிவிடுவார். கடந்த 10 ஆண்டுகளாகப் பல்வேறு வனவிலங்குச் சரணாலயங்களுக்கும் தனியாகவே சென்று புகைப்படம் எடுக்கிறார்.

பல ஆண்டுகளாகவே ஓய்வு நேரத்தில் சைக்கிளிங் பயணம் மேற்கொள்கிறார். இளையராஜாவின் தீவிர ரசிகையான அமுதா, தினமும் அவரது பாடல்களைக் கேட்காமல் உறங்குவதில்லை. அமுதாவின் பணிச்சூழல் சவாலானது என்றால், இவரின் பர்சனல் உலகம் சுவாரஸ்யமானது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு