மகாராஷ்டிராவில் தேர்வு; தேனி மருத்துவக் கல்லூரியில் சீட்!-நீட் தேர்வில் சென்னை மாணவர் ஆள்மாறாட்டம்?

``வட மாநிலத்தில் தேர்வு எழுதினால், ஆள் மாறாட்டம் எளிதில் செய்யலாம் என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது.''
தேனி மாவட்டம், கானாவிலக்கில் உள்ளது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இக்கல்லூரியில் இந்தக் கல்வியாண்டில் சேர்ந்த சென்னை மாணவர் ஒருவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆண்டிற்கு 100 மருத்துவ மாணவர்களுக்கு இக்கல்லூரியில் சேர்க்கை நடைபெறும். அந்த வகையில் இந்தக் கல்வியாண்டில் சேர்ந்த 100 மாணவ மாணவிகளில் ஒருவரான, சென்னையைச் சேர்ந்த மருத்துவரின் மகன், நீட் தேர்வு எழுதும் போது ஆள்மாறாட்டம் செய்ததாகவும், தேர்விற்கான ஹால்டிக்கெட்டில் உள்ள படமும், மாணவனின் படமும் வேறு வேறாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து அந்த மாணவன் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி வட்டாரத்தில் விசாரித்தபோது, ``அந்த மாணவன், கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்தவர். இந்த ஆண்டு வெற்றிபெற்று தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வானார். சில நாள்களாகவே அவர் கல்லூரிக்கு வருவதில்லை. ஏன் என்று தெரியவில்லை. ஏதோ ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியுள்ளதாகக் கூறுகின்றனர். அவர் தேர்வு எழுதியது மகாராஷ்டிராவில் என்பதால் எளிதாக ஆள்மாறாட்டம் செய்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். உண்மை என்னவென்று தெரியவில்லை" என்றனர்.
``நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவிகளை சோதனை என்ற பெயரில் அத்துமீறி நடக்கும் அராஜகத்தில், இந்த ஆள்மாறாட்டம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது போல. வட மாநிலத்தில் தேர்வு எழுதினால், ஆள் மாறாட்டம் எளிதில் செய்யலாம் என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது" என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதனிடையே, ஆள்மாறாட்டம் தொடர்பாக கானாவிலக்கு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.