கேட்டது ₹40,000 கோடி; கிடைத்தது ₹9,000 கோடி... பேரிடர் நிவாரணத்தில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசு!

2010-11 முதல் 2019-20 வரை தமிழக அரசுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைத்த பேரிடர் நிவாரண நிதி குறித்து விவரங்கள் அளிக்கும்படி தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டிருந்தோம். அதற்கு அளிக்கப்பட்ட விவரங்கள் உண்மையில் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கின்றன.
வெள்ளம், புயல், கனமழை எனத் தமிழகம் தொடர்ந்து இயற்கைச் சீற்றங்களுக்கு உள்ளாகிக்கொண்டே இருக்கிறது. ஜல், தானே, நீலம், நடா, வர்தா, ஒகி, கஜா என புயல்களும் மழையைப் போல இயல்பாக வந்துபோகத் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு புயலும் ஏற்படுத்தும் பாதிப்புகள் அடுத்த பத்தாண்டுகள் வரை எதிரொலிக்கின்றன. தானே புயலால் உருக்குலைந்த தமிழகத்தின் நடுநாட்டுப்பகுதி இன்னும் மீளவில்லை. கஜா புயல் காவிரிப் படுகையைத் துவம்சம் செய்துவிட்டது. பல குடும்பங்கள் நிர்க்கதியாகிவிட்டன. இப்போது பெரிதும் அச்சமூட்டிய நிவர் புயல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் கட்டமைப்பு அளவில் பாதிப்புகள் இருக்கவே செய்கின்றன.

புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களால் பல்லாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நிர்வாகம் ஸ்தம்பிக்கும். பேரிழப்பில் சிக்கித் துயரத்தில் தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகம் போன்ற மாநிலங்கள் ஏற்கெனவே நிதி சிக்கலில் பரிதவித்து வருகின்றன. கடன், வட்டி, வட்டிக்கு வட்டி, கடனுக்குக் கடன் என மோசமாகிக்கொண்டே போகிறது நிலை.
இதுமாதிரியான சூழலில் பேரிடர் தாக்குதல்களிலிருந்து மக்களை மீட்க ஒரே வழி, மத்திய அரசிடமிருந்து பேரிடர் நிவாரண நிதியைப் பெறுவதுதான். இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது மத்திய அரசு, நிபுணர் குழுவை மாநிலங்களுக்கு அனுப்பி இழப்பின் அளவை மதிப்பிடும். மாநில அரசு தன் மதிப்பீட்டின் அடிப்படையில் ஒரு தொகையைக் கேட்கும். இரண்டையும் பரிசீலித்து குறிப்பிட்ட தொகையை மத்திய அரசு மாநிலத்துக்கு வழங்கும். இதற்கெனவே மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதி ஒன்றை பராமரித்து வருகிறது.

பாகிஸ்தானிலிருந்து குடிபெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்காக, 1948-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நேருவால், உருவாக்கப்பட்டது பிரதமர் தேசிய நிவாரண நிதி. தற்போது இந்த நிதி, இயற்கைச் சீற்றங்களான வெள்ளம், புயல், பூகம்பம் போன்றவற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவ பயன்படுத்தப்படுகிறது. இதற்கென பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுவதில்லை. தனியார் தரும் நன்கொடையைக் கொண்டே நிதியாதாரம் திரட்டப்படும்.
சமீபகாலங்களில் இந்த நிதியை மாநிலங்களுக்குத் தருவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குவதாகவும் பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு போதிய நிதி தருவதில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இதன் உண்மை நிலையைக் கண்டறிய விகடன் ஆர்டிஐ குழு களத்தில் இறங்கியது.

2010-11 முதல் 2019-20 வரை தமிழக அரசுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைத்த பேரிடர் நிவாரண நிதி குறித்து விவரங்கள் அளிக்கும்படி தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் பொதுத் தகவல் அலுவலருக்கு மனு அனுப்பப்பட்டது. அதற்கு அளிக்கப்பட்ட விவரங்கள் உண்மையில் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கின்றன.

2018 நவம்பரில் ஏற்பட்ட கஜா புயல் நிவாரணம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு நேரடியாகச் சென்று பிரதமர் மோடியை சந்தித்து ரூ.15,000 கோடி கோரியிருந்தார். ஆனால், வெறும் ரூ.1,680 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இயற்கைப் பேரிடர்களுக்கு தமிழக அரசு மத்திய அரசிடம் கோரியது ரூ.40,000 கோடிகளுக்கு மேல். ஆனால், கிடைத்ததோ வெறும் ரூ.9,390 கோடி மட்டுமே.
தமிழகத்தில் புயல், மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு கடந்த 2010-11 முதல் 2019-20 நிதியாண்டுகள் வரையிலான 10 ஆண்டுகளில், மாநில பேரிடர் பொறுப்பு நிதியாக ரூ.4,029.68 கோடி மற்றும் தேசிய பேரிடர் பொறுப்பு நிதியாக சுமார் ரூ.5,360.80 கோடி என்று மொத்தம் ரூ.9,390,47,70,000 மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு நிவாரணத்தொகையாக கிடைத்துள்ளது.
ஆனால், இந்தத் தொகை கஜா புயல் பாதிப்பு நிவாரணத்துக்குக்கூட போதுமானதல்ல என்கிறார்கள் அதிகாரிகள். வர்தா, நீலம், ஒகி என்று பல புயல்களின் பாதிப்புகளுக்கு தமிழகம் கோரும் நிதியில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே மத்திய அரசு விடுவித்துள்ளது என்பது நம் ஆர்.டி.ஐ குழு திரட்டிய தகவல்களில் தெரியவந்துள்ளது.

இதுபற்றி பேசிய சமூக செயற்பாட்டாளர் வெரோணிக்கா மேரி, ``கடந்த 10 ஆண்டுகளில் பல இயற்கை பேரிடர்களைத் தமிழகம் சந்தித்துள்ளது. அவற்றால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு நிவாரணம் தந்து நம்பிக்கையளிக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை. ஆனால், மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. கட்சி பாகுபாடு பார்க்காமல் அனைத்து மாநிலங்களையும் ஒரே மாதிரி பார்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை. இந்த நிலை மாற வேண்டும். தமிழக அரசும் எதிர்கட்சிகளும் அழுத்தம் தர வேண்டும்" என்கிறார்.
நடக்கிறதா பார்க்கலாம்!