Published:Updated:

`புதிய வகை கொரோனா வைரஸ்; பிரிட்டனிலிருந்து விமானங்கள் இந்தியா வர தடை!’ - மத்திய அரசு

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

`இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவருகிறது. இந்த வைரஸ் குறித்து இந்திய மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை’ என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவருவதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. அங்கே கிறிஸ்துமஸுக்காக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து வகையான தளர்வுகளையும் நீக்கி, கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் புதிய வகை வைரஸ் 70 சதவிகிதம் அதிகமாகப் பரவும் தன்மைகொண்டிருக்கிறது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், நிலைமை கைமீறிவிட்டதாக பிரிட்டனின் சுகாதாரச் செயலர் கூறியிருக்கிறார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பிரிட்டனிலிருந்து வரும் விமானம் மற்றும் கப்பல்களுக்குத் தற்காலிகத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளன. இந்தநிலை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவசரக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், உயர்மட்ட அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பரவும் புதிய வகை கொரோனா வைரஸ், அதிகரிக்கும் நோயாளிகள்... கட்டுப்பாடுகள் விதித்த பிரிட்டன்!

இது குறித்துப் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ``புதிய கொரோனா வைரஸ் குறித்து அரசு முழுமையான எச்சரிக்கையுடன் இருக்கிறது. மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான அனைத்துவகையான நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துவருகிறோம். என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாங்கள் நன்கு அறிவோம். நீங்கள் யாரும் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றுதான் நான் கூறுவேன்" என்றார்.

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
ANI

இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் தடை செய்யுமாறு மத்திய அரசிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியிருக்கிறார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ``இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவருகிறது. இது மிகவும் வேகமாகப் பரவக்கூடியது (சூப்பர்-ஸ்ப்ரெடர்). இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் தடைசெய்யுமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

இந்திய அளவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் டெல்லி ஒன்று. மேலும், டெல்லியில் கொரோனாவின் மூன்றாவது அலையின் தாக்கம் சில வாரங்களுக்கு முன்னர்தான் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தநிலையில், விமான சேவை தொடர்ந்து நடைபெற்றால், அதன் மூலம் புதிய வகை வைரஸ் இந்தியாவில் பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற காரணத்தால் அரவிந்த் கெஜ்ரிவால் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

இந்தநிலையில் மத்திய அரசு, பிரிட்டனிலிருந்து விமானங்கள் இந்தியா வர தடை விதித்திருக்கிறது. டிசம்பர் 31 வரையில் இந்தத் தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு