Published:Updated:

சாத்தான்குளம் சம்பவம் எதிரொலி... லாக் அப் மற்றும் கஸ்டடியல் மரணங்களை விசாரிக்க தனிச்சட்டம் தேவையா?

லாக் அப் (மாதிரி படம்)
லாக் அப் (மாதிரி படம்)

காவல் வைப்பு மற்றும் சிறைவைப்பில் ஏற்படும் மரணங்களில், தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவேண்டும் என்றால், தனியாக ஒரு சட்டம் இருந்தால் மட்டுமே சாத்தியம் எனும் கோரிக்கை சரியா?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் கடையைத் திறந்துவைத்து வியாபாரம் செய்ததாக, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். சாத்தான்குளம் காவல்நிலைய விசாரணைக்குப் பிறகு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்த நாள்களில் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு தழுவிய அளவில் பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தானே முன்வந்து இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தது. தமிழக அரசு சார்பில் சி.பி.ஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

சாத்தான்குளம் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணையைத் தொடங்குவதற்கு முன்னர் சி.பி.சி.ஐ.டி இன்றே விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும் சாத்தான்குளம் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யலாம் என்றும் உயர்நீதிமன்றக் கிளை, கடந்த 30-ம் தேதி, நெல்லை சி.பி.சி.ஐ.டி டிஎஸ்பி அனில்குமாருக்கு உத்தரவிட்டது. இந்தநிலையில் நேற்று, சாத்தான்குளம் இருவர் மரணத்தைக் கொலைவழக்காக சி.பி.சி.ஐ.டி பதிவு செய்திருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ ரகுகணேஷை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட காவலர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், ``இது போன்ற மரணங்களில், வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவேண்டும் என்றால் தனியாக ஒரு சட்டம் இருந்தால் மட்டுமே சாத்தியம்'' எனும் கோரிக்கையை முன்வைக்கிறார், இயக்குநரும், தமிழ்ப்பேரரசு கட்சியின் தலைவருமான வ.கௌதமன். அவரிடம் பேசினோம்,

``இந்திய அளவில் இதுவரை நடந்த எந்த லாக் அப் மற்றும் கஸ்டடியல் மரணங்களிலும் தவறு செய்த பெரும்பாலான அதிகாரிகளுக்குத் தண்டனை கிடைத்ததே இல்லை. காரணம், காவல்துறையினர் தவிர அந்த வழக்கை விசாரிக்கும் தாசில்தார், மாவட்ட நீதிபதி ஆகியோர் அவர்களின் விசாரணை அறிக்கைகளையும் மீண்டும் காவல்துறையினரிடம்தான் கொடுக்கிறார்கள். தவறு செய்தவர்களே எப்படி தங்களைக் குற்றவாளி என அறிவித்துக்கொள்வார்கள். அதனால்தான், இதுபோன்ற மரணங்களை விசாரிக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கிறோம்.

வ.கௌதமன்
வ.கௌதமன்

தனிச்சட்டம் மட்டும் போதாது, நேர்மையான மூத்த நீதிபதிகளைக்கொண்ட ஒரு தனி அமைப்பை உருவாக்க வேண்டும். அந்த அமைப்பு மட்டுமே, காவல்நிலையங்கள் மற்றும் சிறைக்குள் ஏற்படும் மரணங்களை விசாரிக்க வேண்டும். மாவட்டம் தோறும் தனி நீதிமன்றங்கள் உருவாக்கப்படவேண்டும், எக்காரணத்தைக் கொண்டும் காவல்துறையினர் அந்த வழக்குகளை விசாரிக்க அனுமதிக்கவே கூடாது. அது மட்டுமல்ல, எந்தவொரு வழக்கிலும் ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிபதியின் முன்பாக ஆஜர் செய்த பிறகு, அவர்களைச் சிறைக்குள் அழைத்துச் செல்லும் பொறுப்பை சம்பந்தப்பட்ட அந்தக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கக் கூடாது. காவல்துறையினர் அடித்துச் சித்ரவதை செய்தாலும், சம்பந்தப்பட்ட அந்த நபர், நீதிபதியின் முன்பாக அதைச் சொல்ல அச்சப்படுவதற்குக் காரணமே, மீண்டும் அந்தக் காவல்துறையினருடன் சிறைக்குச் செல்லவேண்டும், போகும் வழியில் எதுவும் செய்துவிடுவார்களோ என்கிற பயம் மட்டும்தான். அதனால், அது அறவே தவிர்க்கப்படவேண்டும். நீதித்துறையின் கட்டுப்பாட்டில் அதற்கென ஒரு தனிப்பிரிவை உருவாக்க வேண்டும்.

நாங்கள் சொல்லும் தனிச்சட்டத்தில் காவல்துறையினர் மட்டும் தண்டிக்கப்பட வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. அவர்களைக் காப்பாற்ற நினைக்கும் அனைவருமே குற்றவாளிகள்தான். அது முதலமைச்சராக இருந்தாலும் சரி. அனைவரும் தண்டிக்கப்படும் வகையில் சட்டம் இயற்றப்படவேண்டும். தமிழக முதல்வரின் பார்வைக்கு, இந்தத் தனிச்சட்ட கோரிக்கையைக் கொண்டுசெல்வோம். உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம். தேவைப்பட்டால், உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்வோம். அப்படியும் எதுவும் நடக்கவில்லை என்றால், ஜல்லிக்கட்டு, கத்திப்பாரா, காவிரி உரிமைக்கான போராட்டம் போல் ஒரு மாபெரும் போராட்டத்தைத் தமிழகம் சந்திக்க வேண்டியிருக்கும்'' என்கிறார் இயக்குநர் வ.கௌதமன்.

முன்னாள் நீதியரசர் சந்துருவிடம் இந்தச் தனிச் சட்டக் கோரிக்கைகள் குறித்துப் பேசினோம்,

``அப்படியொரு சட்டம் தேவையில்லை என்பதே என் கருத்து. வைப்பு (காவல்&சிறை) மரணங்களும் ஐ.பி.சியின் கீழ்தான் வரும். அந்தச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து முறையான நடவடிக்கைகளை எடுத்தாலே போதும். காவல் நிலையத்திலோ, சிறையிலோ ஒருவர் இறந்தால் அந்தக் காவல் நிலைய உயர் அதிகாரிகளுக்கும் சிறை உயர் அதிகாரிகளுக்கும் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து, நீதித்துறைக்குச் சரியான அழுத்தம் கொடுத்தாலே போதும். எந்தவொரு வைப்பு (காவல்&சிறை) மரணத்திலும் விழிப்புணர்வுள்ள அரசுசாரா அமைப்புகள், திறமையான வழக்கறிஞர்கள் முன்னின்று வழக்கை நடத்தினால் கண்டிப்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தண்டனை பெற்றுத்தர முடியும்.

உதாரணமாக, பத்மினி வழக்கு, கம்மாபுரம் ராஜக்கண்ணு வழக்கு என 1982-ல் இருந்து 1992 வரை, தென்னாற்காட்டில் மட்டும் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட்டு, சிறையில் இருக்கிறார்கள். சட்டத்தின் உதவியுடன் தனியொருவனாகப் போராடி அந்த வழக்குகளில் தண்டனை பெற்றுத் தந்திருக்கிறோம். தனி ஒருவராலேயே இதைச் சாதிக்க முடியும் என்றால், மக்கள் ஆதரவு, மனித உரிமை அமைப்புகளின் வலிமையான குரல் இருந்தால் கண்டிப்பாக தண்டனை பெற்றுத்தர முடியும்.

நீதிபதி சந்துரு
நீதிபதி சந்துரு

நவீன அறிவியல் வளர்ச்சியால், சி.சி.டி.வி கேமரா போன்றவற்றின் வருகையால் முன்பைவிட தற்போது எவிடென்ஸ் அதிகமாகக் கிடைக்கும். ஒவ்வொருவரும் தாங்கள் பார்த்ததை கேட்டதை விசாரணை அதிகாரிகளிடம் சரியாகச் சொன்னாலே கண்டிப்பாக தண்டனை கிடைக்கும். சாத்தான்குளம் சம்பவத்தில் கூட, காவல்நிலையத்திலிருந்து நீதிமன்றத்துக்குக் கூட்டிச் சென்ற ஓட்டுநர், பெண் காவலர் ஆகியோர் சரியான வாக்குமூலம் கொடுத்ததால் தற்போது அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. இதுபோல கீழ்மட்டத்திலிருந்து வலிமையான ஒரு குரல் எழவேண்டும்.

சாத்தான்குளம் சம்பவத்தில், காவல்துறையினர் யாருமே சாட்சி சொல்லவில்லை என்றால் கூட, சூழலை அடிப்படையாக வைத்தே தண்டனை பெற்றுத்தர முடியும். காவல்நிலையத்துக்குள் ஒரு மரணம் நிகழ்ந்தால் அதற்கு காவலர்கள்தான் பொறுப்பு. இது போன்ற மரணங்களுக்கு, தனியாக ஒரு சட்டம், அமைப்பு உருவாக்கப்பட்டாலும் அந்த அமைப்பும் அரசின் கட்டுப்பாட்டின்கீழ்தான் செயல்படும். உதாரணமாக, சி.பி.ஐ தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புதான். ஆனால் உண்மைநிலை எப்படி இருக்கிறது. அதனால், என்ன சட்டம், என்ன அமைப்பு இருந்தாலும் நடக்கவேண்டியது சரியாக நடந்தால்தான், பயன்படும். அதனால், தனிச்சட்டம் என்பது தேவையில்லாத ஒன்று. இருக்கின்ற சட்டத்தை முறையாக, அதிகாரிகளும் நீதிமன்றமும் நிறைவேற்றினாலே 95 சதவிகிதம் நீதி கிடைக்கும் '' என்கிறார் முன்னாள் நீதிபதி சந்துரு.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற மரணங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியது காவல்துறையா, நீதித்துறையா?
நீதித்துறைக்கெனத் தனியான செக்யூரிட்டி அமைப்பு இருக்கவேண்டும் என்பது சரியான கோரிக்கைதான். அதுகுறித்து நான் பலமுறை எழுதியிருக்கிறேன். நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வரும்போதுகூட, குற்றவாளி, சாட்சி என அனைவருக்கும் நீதிமன்ற ஹாலுக்கு வர ஒரே நுழைவுவாயில் இருக்கிறது. அதுவும் மாற்றப்படவேண்டும். பல வெளிநாடுகளில் தனித்தனி வாயில்கள் என நீதிமன்றம் சிறப்பான கட்டமைப்போடு இருக்கிறது. அதுபோன்ற கட்டமைப்பு இங்கும் உருவாக்கப்படவேண்டும்
முன்னாள் நீதியரசர் சந்துரு

தனிச்சட்டத்தால் பயன் உண்டா என்பது குறித்து மனித உரிமை ஆர்வலர், வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம்,

``காவல் வைப்பு மரணங்கள், என்கவுன்டர் விவகாரங்களை தாசில்தார், ஆர்.டி.ஓ போன்றவர்கள் விசாரணை செய்தால் சரியாக இருக்காது, நீதித்துறைக்கு அந்த அதிகாரம் கொடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம். மத்திய அரசும் அதை ஏற்றுக்கொண்டு நீதித்துறையினரும் இணையாக விசாரிப்பார்கள் எனச் சட்டம் இயற்றியது. 2008-லிருந்து நீதித்துறை நடுவர்களும் (Judicial Magistrate) தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், அப்போதிருந்து தற்போதுவரை கிட்டத்தட்ட 12 ஆண்டுகளில் எந்த மாஜிஸ்திரேட்டின் அறிக்கையிலும் காவல்துறையினரைக் குற்றஞ்சாட்டி ஒரு அறிக்கையும் வெளிவந்தது இல்லை.

வழக்கறிஞர் புகழேந்தி
வழக்கறிஞர் புகழேந்தி

என்கவுன்டர் என்றால், தற்காப்புக்காகச் சுட்டார்கள் என்றும், `லாக் அப்' மரணம் என்றால், கைது செய்யப்படும்போதே காயங்களுடன்தான் இருந்ததாகவும் சொல்லி அறிக்கை கொடுத்துவிடுகிறார்கள். காவல்துறையினரும் நீதித்துறை நடுவர்களும் கூட்டுச் சேர்ந்து கொள்கின்றனர். இந்தநிலையில், நேர்மையான, நீதிபதிகளைக்கொண்ட அமைப்பை எங்கே தேடுவது, ஓய்வு பெற்ற நீதிபதிகள் என்றாலும், அவர்களும் இந்த அமைப்பில் இருந்து வெளியே சென்றவர்கள்தானே?... அதனால், தனிச்சட்டம் தனி அமைப்பு வந்தாலும் அதிகாரிகள் நேர்மையாக நடந்துகொண்டால் மட்டுமே பலனளிக்கும்'' என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி.

அடுத்த கட்டுரைக்கு